முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து, இராஜதந்திர ரீதியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தீர்மானிப்பார் என, அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் கட்சியின் மத்திய செயற்குழுவினால் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், ஆனால் கட்சியின் ஆலோசகர்கள் குறித்து எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாதது ஏன் எனவும், இதன்போது ஊடகவியாலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மஹிந்த சமரசிங்க, மஹிந்த ராஜபக்ஷ கட்சியின் முன்னாள் தலைவர் என்பதோடு, நாட்டின் முன்னாள் ஜனாதிபதி எனவும், அவரை குமார வெல்கம போன்று ஏனைய உறுப்பினர்களுடன் ஒப்பிட முடியாது எனவும் குறிப்பிட்டார்.
எனவே, அவர் தொடர்பிலான ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தீர்மானிப்பார் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
