எப்.முபாரக்-
காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான விசாரணைகளை சர்தேச நிபுணர்கள் முன்னிலையில் முன்னெடுக்க வேண்டுமென திருகோணமலை, மூதூர் பிரதேசத்தில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கை விடுத்தனர்.
கடந்தகால யுத்த சூழ்நிலை காரணமாக மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அவர்களின்; குடும்பங்களுக்கு உரிய பதில் வழங்கப்பட வேண்டுமென்பதுடன், உடனடியாக நிவாரணம் வழங்குமாறு கோரியும் மூதூர் பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை(11) கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
மூதூர் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தின்போது, ஜனாதிபதிக்கு கையளிப்பதற்கான மகஜரை மூதூர் பிரதேச செயலாளர் வீ.யூசுப்பிடம் அக்குழுவின்; தலைவர் சிவஸ்ரீ இ.பாஸ்கரன் குருக்கள் கையளித்தார்.


