புதிய அரசியலமைப்பில் முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன...?

எம்.ஐ.முபாறக்-
ட்சி மாற்றத்தைத் தொடர்ந்து இந்த அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நல்ல பல வேலைத் திட்டங்களுள் முக்கியமானதாக புதிய அரசமைப்பின் உருவாக்கம் தொடர்பான நடவைக்கைகளைக் குறிப்பிட முடியும். சிறுபான்மை இன மக்கள் சில அடிப்படைப் பிரச்சினைகளை அனுபவிக்கின்றமைக்கும் இந்த நாட்டின் முன்னேற்றப் பாதையில் சில தடைகள் ஏற்பட்டிருக்கின்றமைக்கும் நாட்டில் இப்போது நடைமுறையில் இருக்கின்ற அரசமைப்பில் உள்ள சில விடயங்கள்தான் காரணம்.

இந்த அரசமைப்பு உருவாக்கப்பட்டு 38 வருடங்கள் ஆகின்றன.அப்போது இந்த நாட்டுக்கு இது பொருத்தமானதாக இருந்திருக்கும்.ஆனால்,கால ஓட்டத்தில் நாட்டில் ஏற்பட்ட பல மாற்றங்கள்-பல பிரச்சினைகள் காரணமாக இந்த அரசமைப்பு நாட்டுக்குப் பொருத்தமற்றதாக-வலுவிழந்ததாகக் காணப்படுகின்றது என்றே சொல்ல வேண்டும்.

சுமார் 30 வருடங்களாக இந்த நாட்டைச் சீரழித்து முடிவுக்கு வந்திருக்கின்ற யுத்தம் புதிய அரசமைப்பின் தேவையை முக்கியமாக உணர்த்துகின்றது.அந்த யுத்தத்தால் ஏற்படுத்தப்பட்ட பிரச்சினைகளுக்கு பொருத்தமான தீர்வை முன்வைப்பதற்கான சரியான ஏற்பாடுகள் இப்போதைய அரசமைப்பில் இல்லாமைதான் புதிய அரசமைப்பின் தேவையை வேண்டி நிற்கின்றது.

குறிப்பாக,அந்த யுத்தத்தில் வடக்கு - கிழக்கு தமிழர்களும் இலங்கை அரசுகளும் நேரடியாக மோதி பாதிப்புக்களை எதிர்கொண்டபோதிலும், எந்தவிதத்திலும், யுத்தத்துடன் தொடர்புபடாத எனைய இனங்களையும் அந்த யுத்தம் பாதித்தது என்பதை மறுக்க முடியாது.

வடக்கில் முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக விரட்டியடிக்கப்பட்டமைக்கும் கிழக்கில் அவர்கள் உயிர்கள் மற்றும் சொத்துக்கள் இழப்பை எதிர்கொண்டமைக்கும் அடிப்படைக் காரணம் இந்த யுத்தம்தான். இவற்றுக்கெல்லாம் யார் காரணம் என்று இப்போது விவாதிப்பதை விட்டுவிட்டு பாதிப்புகளுக்கு என்ன தீர்வு தேவை என்று விவாதிப்பதுதான்-அதற்கான தேடலை முடுக்கிவிடுவதுதான் புத்திசாலித்தனமான நகர்வாக இருக்கும்; இது இன முறுகல் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முற்றுப் புள்ளி வைப்பதாக அமையும்.

மேலும், யுத்தத்தால் ஏற்படுத்தப்பட்ட பிரச்சினைகளுக்கு மாத்திரம் தீர்வை முன்வைப்பதற்காக புதிய அரசமைப்புத் தேவைப்படவில்லை; யுத்தத்துக்கு அப்பால் வேறு வேறு காரணங்களால் ஏற்படுத்தப்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வாகவும் புதிய அரசமைப்பு தேவைப்படுகின்றது.

யுத்தத்துக்கு அப்பால்பட்ட பல பிரச்சினைகளை தமிழ்- முஸ்லிம் மக்கள் அனுபவித்து வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. கிழக்கில் சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்குவதற்காக நிர்மாணிக்கப்பட்டு இன்னும் வழங்கப்படாமல் இருக்கும் நுரைச்சோலை வீடமைப்புத் திட்டம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளாகக் குறிப்பிடலாம்.

இவை தீர்க்கப்பட முடியாத பிரச்சினைகளாக முத்திரை குத்தி தொடர்ந்தும் வைத்துக் கொண்டு இருக்காமல் இத்தோடு முடிவுக்குக் கொண்டு வர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இப்போதைய அரசால் இவற்றைத் தீர்க்க முடியாதுவிட்டால் வேறு எந்த அரசாலும் இவற்றைத் தீர்க்க முடியாது என்ற உண்மையை நாம் உணர வேண்டும்.

இந்த உண்மையைக் கருத்தில்கொண்டுதான் இந்த நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளும் இந்த வருடத்துக்குள் தீர்க்கப்பட்டு விடும் என பிரதமர் ரணில் விகரமசிங்க கூறி இருக்கின்றார் என எண்ணத் தோன்றுகிறது.அந்த நோக்கின் அடிப்படையில்தான் புதிய அரசமைப்பை அரசு உருவாக்க முயற்சி செய்கின்றது எனலாம்.

ஆனால்,தமிழர்களின் பிரச்சினைகள் எப்படிப்பட்டவை;அவற்றுக்கு எவ்வாறான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்ற யோசனைகளை தமிழர்கள் புதிய அரசமைப்பு தொர்பாக மக்கள் கருத்துக்களைத் திரட்டும் குழுவிடம் சமர்ப்பித்துள்ளனர்.அந்தக் கருத்துக்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக ஆய்வு செய்து பார்த்தால் தமிழர்கள் எவ்வாறான தீர்வுகளை வேண்டி நிற்கின்றார்கள் என்பதை அரசால் மிக இலகுவில் விளங்கிக்கொள்ள முடியும்.

இதேவேளை,வடக்கு-கிழக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகளை எடுத்துக்கொண்டால் அவர்களின் ஒட்டுமொத்த பிரச்சினைகள் என்ன;அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சரியான தீர்வு என்ன என்பதை அரசால் முழுமையாக விளங்கிக்கொள்ளக்கூடியதாக இருக்காது.

புதிய அரசமைப்பு தொடர்பாக மக்கள் கருத்துக்களைத் திரட்டும் குழுவின் முன் தோன்றி கருத்துக்களை முன்வைத்த முஸ்லிம்களின் எண்ணிக்கையை எடுத்துப் பார்த்தால் இதை இலகுவாக சொல்லலாம். 

இந்தக் குழு மட்டக்களப்பு மாவட்டத்தில் கருத்துக்களைத் திரட்டியபோது தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டு அவர்களது கருத்துக்களை முன்வைத்தனர். ஆனால், முஸ்லிம்கள் சார்பில் வெறும் பத்து,பதினைந்து பெறபேரே அதில் கலந்து கொண்டு அங்கு கருத்துக்களை முன்வைத்தனர்.இவ்வாறுதான் எல்லா அமர்வுகளிலும்.

இந்த விடயத்தில் முஸ்லிம்களின் அரசியல் தலைமைகளும் போதியளவு அக்கறை எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. இவ்வாறனதொரு நிலையில்- முஸ்லிம்களின் பிரச்சினைகளை முஸ்லிம்களே மூடி மறைகின்ற நிலையில்- புதிய அரசமைப்பு உருவாக்கப்பட்டால் அப்போது முஸ்லிம்கள் கைதேசப்பட வேண்டிவரும். தாம் அலட்சியமாக இருந்துவிட்டு வேறு இனங்களை தேவை இல்லாமல் பகைத்துக்கொள்ளும் மோசமான நிலைமையும் ஏற்படும்.

ஆகவே,முஸ்லிம் அரசியல் தலைமகள் இது தொடர்பில் இனியாவது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்ட நிலையில் பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ளும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

உருவாகவிருக்கும் அரசமைப்பு தொடர்பாக முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன; முஸ்லிம்களின் பிரச்சினைகள் என்ன; அவற்றுக்கான தீர்வு என்ன என்பதை உடன் முன்வைக்க வேண்டியது முஸ்லிம் அரசியல் தலைமைகளின் கட்டாய கடமையாகும்.

அந்த வகையில், இது தொடர்பான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் நிலைப்பாடு நாளை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது தொடர்பிலான செயலமர்வு ஒன்றை மு.கா மட்டக்களப்பு புழு லகூன் ஹோட்டலில் நாளை நடத்துகின்றது.

இந்தச் செயலமர்வில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் ஒட்டுமொத்த பிரச்சினைகள் தொடர்பாகவும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்படும் என கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலின் பின் முஸ்லிம் கட்சிகளுக்கிடையிலான போட்டிகள் அதிகரித்து அவற்றின் மீதே முஸ்லிம் பிரதிநிதிகள் இன்று கவனம் செலுத்துவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. இந்த நிலைமை மாற வேண்டும். கட்சிகளுக்கிடையிலான இவ்வாறான போட்டிகள் முஸ்லிம்களின் அடிப்படைப் பிரச்சினைகள் மீது கவனம் செலுத்துவதில் இருந்து முஸ்லிம் அரசியல் தலைமைகளைத் தடுத்துவிடும் என்பதை மனதில் ஏற்றி அவர்கள் செயற்பட வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -