முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டில் சம்மந்தன் ஐயா பேசியது...!

நாம் இந்த நாட்டின் சில பகுதிகளை ஆட்சி செய்தவர்கள். அதனடிப்படையில், தமிழீழம் கேட்பதற்கான உரிமை எமக்குண்டு. அதனடிப்படையிலேயே ஒரு காலத்தில் நாம் தனித் தமிழீழத்தைக் கேட்டோம். என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கடந்த சனிக்கிழமை (19) பாலமுனையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19வது மாநாட்டில் உரையாற்றும் போதே  தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை முதலமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், மற்றும் அரசியல் பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.  

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், 

"இன்று மலர்ந்துள்ள நல்லாட்சியில் ஜனநாயகம் மனித உரிமைகள் மதிக்கப்பட்டு சட்ட அடிப்படையில் ஆட்சி நடைபெறுவதை நாம் வரவேற்கின்றோம். நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக புதிய அரசமைப்பு உருவாக்கப்படவிருக்கின்றது. சில வாரங்களில் ஆரம்பமாகும் பெரிய விடயம் இதுவாகும். வடக்கிலும், கிழக்கிலும் தமிழ்பேசும் மக்கள் அதிகம் வாழ்கின்றனர். 

எனவே வடக்கு, கிழக்கு மாகாணங்களை வித்தியாசமாக நோக்க வேண்டும். ஒருமித்த நாட்டுக்குள் வடக்கு - கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களின் உரிமையைப் பாதுகாக்க வேண்டும். இந்த வகையில் பண்டா - செல்வா ஒப்பந்தம், டட்லி - செல்வா ஒப்பந்தம், இலங்கை - இந்திய ஒப்பந்தம் என்பவற்றில் எல்லாம் வடக்கு - கிழக்கு பற்றிய முக்கிய கருமங்கள் கூறப்பட்டிருந்தன.

நாம் அன்று அஷ்ரப்புடன் பல விடயங்கள் பேசியுள்ளோம். வடக்கு - கிழக்கில் அதிகார அலகு பற்றி உடன்பாடுகளுக்கு வந்தோம். சந்திரிகா அம்மையார் ஆட்சியிலும் பேசினோம். அப்போது இடம்பெற்ற பேச்சுகளின்போது அப்போது அமைச்சராக இருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காகப் பெரிதும் உழைத்தார். நாட்டைப் பிரிப்பதற்கு இடமில்லை. ஒன்றுபட்ட நாட்டுக்குள் ஒரு தீர்வை நாம் காண வேண்டும். இதில் இரண்டாம் கதைக்கு இடமில்லை. 

இதற்கு நாமெல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். பயங்கரவாதம் காரணமாக எல்லைக் கிராமங்களில் வாழும் முஸ்லிம்களும், சிங்களவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டதாக அமைச்சர் ஹக்கீம் கூறினார். மறுப்பதற்கு இடமில்லை. இந்த நாட்டில் அரசியல் ரீதியான போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் தமிழ் மக்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது.

பலவித அர்ப்பணிப்புக்களுக்கு மத்தியில், துன்ப துயரங்களுக்கு மத்தியில் நாடு சுதந்திரமடைந்து இரண்டு மூன்று வருடங்களுக்கு பின் தொடக்கம் இற்றைவரை தமிழ் மக்கள் இந்தப் போராட்டத்தைத் தொடர்ச்சியாக நடத்தி வந்துள்ளனர். குறிப்பாக அதிகாரப் பகிர்வைக் கேட்டது தமிழ் மக்களேயாவர். பெரும்பான்மை மக்கள் இதனைக் கேட்கவில்லை, முஸ்லிம் மக்களும் கேட்கவில்லை. ஆனால், அதிகாரப் பகிர்வு வரும்போது, அது எல்லோருக்கும் பயன்தரும் வகையில், நன்மை பயக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.

ஒருகால கட்டத்தில் நாம் தனித் தமிழீழம் கேட்டோம். அப்படிக் கேட்பதற்கு உரிமை இருந்தது. நாங்கள் இந்த நாட்டின் சில பகுதிகளை ஆட்சி செய்து வந்தவர்கள். இத்தகைய எமது ஆட்சியை அந்நியருக்கு இழந்தோம். சரித்திரத்தில் இந்த விடயங்கள் கூறப்பட்டுள்ளன. எவரும் மறுக்க முடியாது. எனினும், இன்று இதைக் கேட்கவில்லை. 

ஒருமித்த - ஒற்றுமையான - பிரிவுபடாத நாட்டுக்குள் எல்லோருக்கும் சமத்துவம் அளிக்கப்பட்டு நாம் சமாதானமாக, ஒற்றுமையாக வாழ வேண்டிய நிலமை ஏற்படவேண்டும் எனக் கேட்கின்றோம். தமிழீழக் கோரிக்கையை நாம் கைவிட்டுள்ளோம். வெளிநாடுகளிலுள்ள தமிழ் மக்கள் கூட ஒருமித்த நாட்டுக்குள் ஒரு தீர்வைக் காண்பதற்குத் தயாராகவுள்ளோம் எனக் கூறக்கூடிய அளவுக்க நாம் நிலைமையை ஏற்படுத்தியுள்ளோம். 

எல்லோரும் ஏற்கக்கூடிய தீர்வு வரவேண்டும். இதற்கு எமது பங்களிப்பை முழுமையாக வழங்குவோம்" - என்றார். சப்னி 

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -