தமிழக மீனவர்கள் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும். சிறைப்பிடித்து வைத்துள்ள விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும், மீன்பிடிக்க உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.
இதனால் மீனவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிறிது நேரம் அங்கு பதட்டமும் பரபரப்பும் காணப்பட்டது.
போராட்டத்தில் திடீரென ஒரு பெண் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொள்ள முயன்றார். அவரை உடனே போலீசார் தடுத்து பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 500–க்கும் மேற்பட்ட மீனவர்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள சமுதாய கூடத்திற்கு அழைத்து சென்றனர்.
