எப்போதும் நமது வாழ்க்கையில் கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும் - உதுமாலெப்பை MPC

சலீம் றமீஸ்-
மூகத்திற்கும், பாடசாலைக்குமிடையிலான உறவுகள் வளர்த்தெடுக்கப்பட்டு வரும் பாடசாலைகள் கல்வியில் உயர்ந்த இலக்குகளை அடைந்து கொள்கின்றன. அல்-அர்ஹம் வித்தியாலயத்தின் முழுமையான அபிவிருத்தியிலும், முன்னேற்றத்திலும் அதிபர், ஆசிரியர் குழாம், பாடசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகளினது அர்ப்பணிப்பான செயற்பாடுகளினால் இக்கல்லூரி பல சாதனைகளை புரிந்து மாகாண மட்டத்திலும், வலய மட்டத்திலும் சிறந்த பெறு பேறுகளை பெற்றுள்ளது. 

நமது மக்களின் வேண்டுகோள்களை ஏற்று பல்வேறு அபிவிருத்திப் பணிகளை நாம் செயல்படுத்தியுள்ளோம். ஆனால் கல்வித் துறைக்கு நாம் முக்கியத்துவம் அளித்து மேற்கொள்ளும் அபிவிருத்திப்பணிகளில்தான் நமது சமூகம் எல்லாத் துறைகளிலும் முன்னேறுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன என அட்டாளைச்சேனை அல் - அர்ஹம் வித்தியாலயத்தில் அதிபர் எம்.ஏ.அன்சார் தலைமையில் நடைபெற்ற 'அர்ஹமின் சாதித்த மாணவர்களும் சரித்திர ஆசிரியர்களும் கௌரவிப்பு' நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றுகையில்,

சாதனையாளர்களாக உருவாக்கப்பட்டுள்ள அல்-அர்ஹம் வித்தியாலய மாணவ – மாணவிகள் எதிர்காலத்தில் ஆளுமை உள்ளவர்களாக, பெரும் படைப்பாளிகளாக, மார்க்க அறிஞர்களாக, சமூகத் தலைவர்களாக செயற்பட வேண்டிய நிலை உருவாகும் அவ்வேளை நமது சமூகம் எதிர்பார்க்கின்றவைகளை தங்களின் சமூக உணர்வான செயற்பாடுகளின் ஊடாக நிறைவேற்ற வேண்டும். எப்போதும் நமது வாழ்க்கையில் நமக்கு கிடைக்கும் நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சமூக நன்மைகளை புரிய வேண்டும். 

உலகத்தில் ஆசிரியர் பதவிக்கு சமூகத்தில் கிடைக்கும் கௌரவமும், மதிப்பும் வேறு எந்த பதவிக்கும் கிடைப்பதில்லை. எப்போதும் மாணவர்களின் உள்ளங்களில் நிறைந்து நினைவில் உள்ளவர்களாகவும், கௌரவப்படுத்துபவர்களாகவும் நமது ஆசான்கள் இடம் பெறுகின்றனர். நமது மாணவ – மாணவிகள் சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனையாளராக திகழும் போது பெற்றோர்கள் ஸ்தானத்தில் இருந்து நமது ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

அன்றைய காலத்தில் வீட்டுச் சூழலிலும், குடும்ப சூழலிலும் வாழ்ந்த வந்த எங்களை திடீரென 1ம் தரத்தில் கல்வி கற்க பாடசாலைகளில் சேர்ப்பதற்காக பெற்றோர்கள் அழைத்து சென்றபோது ஒரு அச்சமான மனோநிலையில்தான் பாடசாலைக்கு சென்றோம். ஆனால் இன்றைய நிலையில் பாடசாலைகளில் மாணவர்கள் தரம் ஒன்றுக்கு சேர்க்கப்படுவதற்கு முன்பே பாலர் பாடசாலைகளில் இணைக்கப்பட்டு பல ஆளுமைகளைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

1ம் தர வகுப்பிற்கு புதிதாக பாடசாலைகளில் சேர்ப்பதற்கான புதிய நடைமுறைகள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. 1ம் தர வகுப்பிற்கு சேர்க்கப்படும் மாணவ – மாணவிகள் தங்களின் பெற்றோருடன் வருகை தந்து அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஒன்றிணைந்து அவர்களை வரவேற்கும் நிகழ்வு, தத்தமது மார்க்க பிரார்த்தனைகளோடு கல்வியை ஆரம்பிக்கும் நிகழ்வும் சிறப்பாக உள்ளன.

இதே வேளை பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள மாணவர் பாராளுமன்ற நிகழ்வுகளால் எதிர்காலத்தில் மக்கள் பிரதிநிதிகளாக பிரதேச சபை, மாகாண சபை, பாராளுமன்றம், அமைச்சரவையில் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படும் மாணவ – மாணவிகள் பூரண அணுபவங்களை பெறுவதற்கு சிறந்த வாய்ப்பு ஏற்படுகின்றது. இக்கல்லூரியின் மாணவ பாராளுமன்ற நிகழ்வுகள் சிறப்பாக இருந்தன. மாணவர் பாராளுமன்றத்தினை அமைத்து மாணவர்களை ஆளுமையுள்ளவர்களாக பயிற்றுவித்த ஆசிரியர்களை மக்கள் சார்பில் பாராட்டுகின்றேன்.

அண்மைக்காலமாக அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் சில கல்லூரிகளின் அதிபர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சல் காரணமாக தற்போது அதிபராக கடமை புரியும் கல்லூரிகளில் இருந்து தங்களை வேறு பாடசாலைகளுக்கு இட மாற்றம் பெற்றுத் தருமாறு கோரி பதிவுத் தபால் கடிதங்களிலும், நேரடியாகவும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளரிடமும், மக்கள் பிரதி நிதிகளிடமும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆளுமையுடனும், அர்ப்பணிப்புடனும் அதிபர் பதவியில் செயற்பட்டு வந்த அதிபர்களுக்கு சில அரசியல்வாதிகள் இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்ற நிகழ்வுகள் அக்கரைப்பற்று கல்வி வலயப் பாடசாலைகளில் தொடர்கின்றன. இது தொடர்பாக அக்கரைப்பற்று கல்வி வலயப் பணிப்பாளர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரான நசீரும், நானும் வௌ;வேறு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களான இருந்த போதிலும் அவரால் மேற்கொள்ளப்படும் மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும் சிறந்த திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றோம். 

கிழக்கு மாகாண சபை அமைச்சராக கடந்த ஆறரை வருட காலமாக பதவி வகித்த போது இப்பிரதேச மக்களின் எதிர்கால நன்மை கருதி பல அபிவிருத்தி திட்டங்களை நானும், தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் உள்ளுராட்சி அமைச்சரான ஏ.எல்.எம்.அதாஉல்லாவும் இணைந்து நடை முறைப்படுத்தினோம். அவ்வேளையில் சில அரசியல்வாதிகள் எங்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த நல்ல அபிவிருத்தி திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும் மக்களுக்கான அபிவிருத்தி பணிகளை முடிந்தளவு நிறைவேற்றியுள்ளோம்.

அக்கரைப்பற்று வலயத்தில் சிறந்த பெயருடனும், பெறு பேறுகளுடனும் அட்டாளைச்சேனை அல் - அர்ஹம் வித்தியாலயம் இது வரை திகழ்ந்து வருகின்றது. இக்கல்லூரிக்கு நியமிக்கப்படவுள்ள புதிய அதிபருக்கு நமது பாடசாலை அபிவிருத்தி சங்கம் உறுதுணையாக இருந்து இக்கல்லூரியின் வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக செயற்படுவதன் ஊடாகத்தான்; அல் - அர்ஹம் வித்தியாலயத்தின் கல்வி வளர்ச்சியையும், நற்பெயரையும் பாதுகாக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -