ந.குகதர்சன்-
இப்போது நாங்கள் அரசுடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இதற்குப் பலவிமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த விமர்சனங்களையும் தாங்கிக் கொண்டு அதற்கும் அப்பால் சென்று எமது மக்களுக்கு இதன் மூலம் ஏதாவது செய்ய முடிகின்றது என்பதை நாம் உணர்ந்திருக்கின்றோம் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வவுணதீவு புதுமண்டபத்தடி கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்க பல்பொருள் விற்பனை நிலையம் திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது வளங்களை நாம் சரியாகப் பயன்படுத்தினால் இந்த நாட்டில் நாம் தலை நிமிர்ந்து வாழ முடியும். எமது கால்நடைகள் அதிலும் மாடுகள் என்பது எமது சொத்துக்களாக இருக்கின்றன.
அன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் அடிப்படையாக இருந்தவைகள் மாடுகள் தான். ஆனால் தற்போது அவ்வாறான நிலை மாறிவிட்டது.
எமது மாவட்டத்தில் வெட்டிப்போட்சேனை, கறுவாச்சேனை, மணற்சேனை, வெள்ளைக்கல்மலை, மாதவணை, நெளிகல் போன்ற இடங்களில் மேய்ச்சற்தரைப் பிரச்சினை அதிகமாக நீண்டகாலமாக நடைபெறுகின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இத்தனை காலமும் இந்த அரச நிர்வாகத்துடன் சேர்ந்து பயணிக்கவில்லை நாம் கடந்த 09 மாதங்களுக்குள் தான் அவ்வாறான ஒருநிலை ஏற்பட்டது. நாம் அவ்வாறு பங்கு கொள்ளாமைக்கு அன்றைய அரசியற் சூழ்நிலைகளும் காரணமாக இருந்தன.
இத்தனை காலமும் தமிழர்கள் அரச நிர்வாகத்திற்குள் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தமைக்கான பலாபலன்களை இத்தனை காலமும் நாம் கண்டிருக்கின்றோம். நாம் விலகியிருந்தமையால் எமது வளங்கள் மற்றையவர்களுக்கு பயன்படக் கூடிய விதத்தில் நாம் தாரை வார்த்துக் கொடுத்திருக்கின்றோம். இப்போது மிகவும் கஷ்டப்படுகின்றோம்.
இப்போது நாங்கள் அரசுடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இதற்குப் பலவிமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த விமர்சனங்களையும் தாங்கிக் கொண்டு அதற்கும் அப்பால் சென்று எமது மக்களுக்கு இதன் மூலம் ஏதாவது செய்ய முடிகின்றது என்பதை நாம் உணர்ந்திருக்கின்றோம்.
இது நிதானமாக இருக்க வேண்டிய காலம் இப்போது இருக்கின்ற இந்த அரச நிர்வாகத்தைக் கொண்டு செய்விக்க வேண்டும் அதில் தான் எமது சாதுரியம் இருக்கின்றது.
இது மிகவும் கடினமான ஒரு காரியமாக இருக்கின்றது. பொறுப்பேற்றல் என்பது எமது மற்றைய பக்கத்தில் இருந்து தொந்தரவு கொடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு எமது காரியங்கள் அணுசரணையாக இருந்து விடக் கூடாது அந்த வகையில் எமது பொறுப்புகள் இருக்க வேண்டும். இவ்வாறான பொறுப்பேற்றலை எமது தலைமை மேற்கொண்டு வருகின்றது.
இனிவரும் காலங்களில் அரச நிர்வாகத்தில் எமது தலையீடுகள் இல்லாமல் எந்தவொரு காரியமும் நடைபெறுவதற்கு இடம்கொடுக்கக் கூடாது. அவற்றை நாம் செய்விக்க வேண்டும். எமது பிரச்சினைகளை இலகுவானதாகக் கையாள வேண்டும்.
இந்த நாட்டில் அரசு மாறியிருக்கின்றது எமது நியாயங்களை அரச தலைவர்கள் பலரும் புரிந்து வைத்திருக்கின்றார்கள். ஆனால் அரசநிர்வாகத் தலைமை அதிகாரிகள் இன்னும் பழைய நிலையில் தான் இருக்கின்றார்கள். எனவே இவற்றை இரு பக்கத்திலும் உள்ள இணக்கப்பாட்டின் மூலமே மேற்கொள்ள முடியும்.
எமது நியாயங்களை அரச தலைமைகள் உணர்ந்து கொண்ட போதிலும் அதனை செயற்படுத்த முடியாத படி அரச நிர்வாகத்தினர் முட்டுக்கட்டை போடுகின்றார்கள். இதற்கு உதாரணமாக எமது அரசியற் கைதிகளின் விவகாரம் உள்ளது. இப்போது எம் மத்தியில் பாரிய சவாலக இருப்பது இத்தகைய அதிகாரிகளை எவ்வாறு கையாழ்வது என்பதே.
எமது மேய்ச்சற் தரைப் பிரச்சினை தொடர்பில் இரு தடவைகள் ஜனாதிபதி அவர்களிடம் தெரியப்படுத்தி இருக்கின்றேன். அவரும் அதிகாரிகளுக்கு பணிப்பு விடுத்திருப்பதாக அறிகின்றேன். உரப் பிரச்சினை தொடர்பிலும் நாம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
இவ்வாறான விடயங்கள் இருக்கும் போது எமது நடவடிக்கைகள் தொடர்பில் எமக்கு எதிர்த் தரப்பில் இருப்பவர்கள் அதனை அவர்களுக்கு சாதகமாக மாற்றிடாத வகையில் நாம் நடந்து கொள்ள வேண்டும்.
இனிவரும் காலங்களில் எமது மக்களுக்காக இருக்கும் வரப்பிரசாதங்களை எப்பாடுபட்டேனும் அவர்கள் அனுபவிப்பதற்குரியவாறு ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு எமது உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.
மகாவலித் திட்டம் என்பது தமிழர்களின் நிலத்தை சத்தம் இல்லாம் பிடுங்கிக் கொள்வதற்கு முன்னைய அரசினால் மேற்கொள்ளப்பட்ட ஒருசதி. இதனால் பல விடயங்களில் எமது மாவட்ட பிரதேச நிர்வாகங்கள் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றன.
அன்றைய ஆட்சியாளர்கள் இந்த நாட்டை இழி நிலைக்கு இட்டுச் சென்றுள்ளார்கள் அவர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றார்கள். இவர்களுக்கு மத்தியில் எமது பிரச்சினைகள் இடியப்பச் சிக்கல் போல இருக்கின்றது. இவற்றை மெல்லமெல்லத் தான் தீர்க்க வேண்டும். அதற்கு எமது மக்களின் பொறுமை மிகவும் அவசியமாக இருக்கின்றது.
முன்வந்த எமது தலைமைகள் விட்ட அனைத்து பிழைகளையும் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுமக்க வேண்டிய பொறுப்பில் இருக்கின்றது. நாம் மிகவும் பொறுப்புணர்வுடனும் கொள்கைப்பற்றுடனும் பயணித்துக் கொண்டிருக்கின்றோம் இதனை எமது மக்களும் உணர்ந்து கொள்வார்கள் இதில் நாம் ஒரு போதும் பின்வாங்கப் போவது இல்லை என்று தெரிவித்தார்.





