பி.எம்.எம்.காதர்-
மருதமுனை டெக்லாங் கிழக்கு முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த கலைவிழாவும், பரிசளிப்பும் இன்று ஞாயிற்றுக்கிழமை(13-12-2015)மாலை மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் பாடசாலையின் தலைவர் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜே.எம்.நிஜாமுதீன் தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய தாய்.சேய்,நல சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஏ.சி.எம்.பஸால் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
அவர் இங்கு உரையாற்றுகையில் :-
பெற்றோர்கள் சிற்பிகள் பெற்றோர்கள் பிள்ளைகளை செப்பனிடுபவர்கள் அவர்கள்தான் பிள்ளைகளை சிறந்த முறையில் உருவாக்குகின்றவர்கள் அப்படி உருவாக்கப்படுகின்ற பிள்ளைகள்தான் பிற்காலத்திலே நாட்டின் சிறந்த தலைவர்களாக உருவாகின்றார்கள்.
இன்று இந்த மேடையிலே பாடியவர்கள்.ஆடியவர்கள் நடித்தவர்கள் எல்லாம் எதிர்காலத்திலே இந்த நாட்டின் உயர் பதவிகளில் அமரப்போகின்றவர்கள் அவர்கள் பெரியவர்களாகுவதற்கும் கற்று உயர்வதற்கும் நல்லொழுக்கத்துடன் பெயர் எடுப்பதற்கும் பெற்றோர்கள் பெரும் பங்காற்றவேண்டியிருக்கின்றது.
ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும் அந்தக்கனவை இனங்கண்டு அவர்களை உயர்த்திவிட வேண்டிய பாரிய பொறுப்பும் பெற்றோருக்கு இருக்கின்றது.பிள்ளைகள் என்ன படிக்கின்றார்கள் என்று பார்க்க வேண்டும் ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டும்.
இலங்கையில் இன்றைய இளைஞர், யுவதிகள் மத்தியில் ஒழுக்கச்சீர்கேடு பாரிய பிரச்சினையாக பரவிக்காணப்படுகின்றது இவற்றை பெற்றோர்கள் சிறுவயதிலேயே இல்லாமல் செய்து பிள்ளைகளை ஒழுக்க சீலர்களாக உருவாக்கினால் பெரியவர்களாக வரும் போது அந்த ஒழுக்கத்தை பேணுபவர்களாக அவர்கள் மாறிவிடுவார்கள்.முதல் மூன்று வருடங்களுக்கும் தாய்மார்தான் முதல் ஆசிரியராக இருக்கின்றார்கள் அதன்பின்னர்தான் பாடசாலைக்குச் செல்கின்றார்கள்.
பிள்ளைகளின் கல்வியை ஆசிரியர்களிடம் மாத்திரம் விட்டு விடாமல் பெற்றோர்களும் அக்கறையுடன் இணைந்து செயற்பட்டு ஒழுக்கமுள்ள எதிர்கால சமூகத்தை உருவாக்க அர்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.
இந்த நிகழ்வில் அதிதிகளாக அதிபர்களான ஏ.ஆர்.நிஃமத்துல்லா, எம்.ஏ.எம்.இனாமுல்லா, வர்த்தகர் ஏ.எம்.முஸாதிகீன், பொதுச் சுகாதார பரிசோதகர்களான ஏ.எம்.பாறூக், நியாஸ் எம்.அப்பாஸ், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பி.எம்.நவாஸ் ஆகியோருடன் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் கலை நிகழ்சிகளும் அரங்கேற்றப்பட்டன அதிதிகள் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள். பாடசாலை ஆசிரியை நூபியா நிஜாமுதீன் நிகழ்வை நெறிப்படுத்தினார் எஸ்.எச்.எம்.ஜௌசி நிகழ்வை தொகுத்து வழங்கினார்.






