எம்.எம்.மத்தீன்-
கலண்டர் விற்றுக்கொண்டிருக்கிறது ஜுப்பா அணிந்த நம் மார்க்கம். இலங்கையின் பொருளாதாரத்தில் முஸ்லிம்களின் வர்த்தகம் சொல்லும்படியான முன்னிலையானதாம். எனில் கலண்டர் விற்றுத்தான் மார்க்க அறிவு புகட்டப்படுவது என்பது கலாசாரம் ஆகிப்போனதா?
இல்லை மார்க்க அறிவுக்கு கலண்டர் விற்றுத்தான் தேற வேண்டும் என்று சட்டம் போட்டு விட்டார்களா?
நாமெல்லாம் பலஸ்தீன், சிரியா போன்ற இடங்களில் முஸ்லிம்களின் உயிர் பறிபோனால் தான் கதறுவோமா? கதை கதையாக முகநூல் பக்கங்களும் கதறிக்கொண்டு இருக்கிறது. காரணம் நாமும் முஸ்லிமாகப் பிறந்து விட்டோம், எமக்கு எம் மதம் மீதான பாச நேசம் அதிகம் என்று பிறர் போல காட்ட வேண்டும் என்கிற வேட்கையா? இல்லையெனில் உள்ளுக்குள் ஊறிக்கிடக்கிற பிரச்சினைகளை அடையாளாப்படுத்த முடியா இழி நிலை சமூகமா?
பலஸ்தீனில் உயிர் பலியாகிறது, இங்கே கலண்டர் விற்று காசு பிடித்துத் தான் படிக்க வேண்டும் என்று தர்மம் பலியாகிறது. நாம் மட்டும் பலஸ்தீனத்துக்கு மட்டும் அழுதே பகட்டுவோம்.
அவர்களால் என்ன செய்ய முடியும் சமூகத்தை வழி நடத்தும் பொறுப்பில் அவர்களின் ஏட்டுச் செல்வத்தைப்போலவே பொருள் செல்வமும் தேட வேண்டி இருக்கிறது என்று கலண்டர்களை வீடு வீடாய் ஏறி இறங்கி விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
இதையெல்லாம் அவசியம் என்று நினைக்காமல் பள்ளிவாசல் பெயிண்டுக்கும், இடைவெளி நிரப்ப பள பளக்கிற பல்பு செட்டுகளும், ஊருக்கு அன்னதானம் இட்டும், நவீனம் என்ற பெயரில் இருப்பதை இடித்தும், இடித்ததை இன்னொன்றாய் ஆக்கியும், வித விதமாய் மனோராக்களை அலங்கரித்தும் காசைப் போட்டு இறைக்கிற கனவான்கள் கண்ணில் இந்த கலண்டர் அவலங்கள் புலப்படுவது இல்லையா? அல்லது புலப்பட்டும் அவசியமில்லை என்று விடப்பட்டு விட்டதா???
கண்டும் காணததாய் ஒரு பெருங்கூட்டம் உலவிக்கொண்டு இருக்க மார்க்கக் கல்வியை மகத்துவமாய் எண்ணி ஒரு சிறு கூட்டமாவது கலண்டர்களைக் கைவிட ஏதாய் கொடை செய்கிறது என்று தான் மனமும் அமைதி கொள்கிறது.
நியாயம் எது என்று புரிந்து அதற்காய் நின்று பேசுகிறது.
இல்லையேல் கலண்டர் விற்பது ஒன்றே வழி என்று அடுத்தவர்களின் அநியாய நியாங்களைப்போல் எனது நியாயமும் அநியாயமாக இருந்திருக்கும்.
ஓ கலண்டர்களே!
வருஷத்துக்கு ஒன்றாய்
வந்து விட்டுப்போகிறீர்கள்,
வாங்கத்தான் ஆளில்லை,
சமூகம் பற்றி பயான்கள்
போடத்தான் அந்த கலண்டர்
நாட்களும் கூடப் போதவில்லை.
ஏன் தெரியுமா?
நாங்களே அறிவாளிகள்.
