கமலின் தூங்காவனம், அஜித்தின் வேதாளம் என இந்தமுறை இரண்டு பெரிய படங்கள் தீபாவளி விடுமுறையை ஆக்கிரமித்துள்ளன. ரசிகர்கள் பலரும் இரண்டில் எந்தப் படம் பெஸ்ட், எந்தப் படத்திற்கு ஓபனிங் அதிகம் என ட்ரெண்டை உருவாக்க இப்போதே தயாராகி வருகிறார்கள். இந்நிலையில் கமல் படத்துடன் அஜித் படம் ஒரே நேரத்தில் சந்திப்பது இது நான்காவது முறை.
முதன்முதலில் 1994ம் ஆண்டு இதே நவம்பர் மாதம் 2ம் தேதி நம்மவர் படம் வெளியானது அதே நாளில் அஜித்தின் பவித்ரா படம் வெளியானது. இதனையடுத்து ஆஸ்கர் பரிந்துரைப்பட்டியலில் இணைந்த ஹேராம் படம் வெளியான அதே நாளில் அஜித்தின் முகவரி வெளியானது. இவ்விரண்டு படங்களும் 2000ல் பிப்ரவரி 18ம் தேதி வெளியான படங்கள்.
அடுத்து பம்மல் கே.சம்மந்தம் வெளியான போது அஜித்தின் ரெட் படம் வெளியானது. இவ்விரண்டு படங்களும் பொங்கல் வெளியீடாக 14 ஜனவரி 2002ல் வெளியான படங்கள். இதில் இவ்விரண்டு படங்களுமே எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் 2002க்குப் பிறகு 13 வருடங்கள் கழித்து மீண்டும் கமல் , அஜித் படங்கள் ஒரே நாளில் தீபாவளி சிறப்பாக வெளியாக உள்ளன.
அப்போதிருந்த ரசிகர்கள் தான் இப்போதும் இருக்கிறார்கள் என்றாலும் அவர்களின் தொழில்நுட்ப பார்வை அதீத வளர்ச்சி கண்டுள்ளது. பார்க்கலாம் எந்தப்படம் வசூலைக் குவிக்கவிருக்கிறது என. எனினும் இரு படங்களின் கதைகளும் சரி, அடிப்படையும் சரி வேறு வேறு என்பதால் இரு படங்களும் ஜெயித்தால் நல்லதே.
