எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தில் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு அதற்குரிய ஆசனங்கள் எத்தனை என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மக்களுக்கு தங்களின் சனத்தொகைக்கு ஏற்ற வகையில் வட்டார அடிப்படையில் ஆசனங்கள் ஒதுக்கப்படவில்லை. இதனால், இந்த மக்களுக்கு கிடைக்க வேண்டிய ஆசனங்கள் குறைக்கப்பட்டுள்ளமை கவலை அளிப்பதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.
புதிய முறைப்படி உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கான சகல ஏற்பாடுகளையும் உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சு மேற்கொண்டு வருகின்றது. இதன் அடிப்படையில் தோப்பூர் பிரதேசத்தில் செய்யப்பட்டுள்ள வட்டார எல்லை நிர்ணயம் தொடர்பில் பொதுமக்களுடனான சந்திப்பு, தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரியில் புதன்கிழமை (18) மாலை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'திருகோணமலை மாவட்டத்திலுள்ள மக்களின் கருத்துகளை கேட்டறிந்து ஆசன ஒதுக்கீடு சம்மந்தமாக உள்ளூராட்சி மாகாணசபை அமைச்சுக்கு சமர்ப்பிக்க வேண்டியது எனது பொறுப்பாகும். இது சம்பந்தமான கருத்துகளை நாளைமறுதினம் 21ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்குமாறு உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்காக வேண்டி நான் பல ஒரு மாதத்திற்கு மேலாக திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா, மூதூர், தம்பலகாமம், புல்மோட்டை, குச்சவெளி, தோப்பூர் போன்ற இடங்களுக்கு சென்று மக்களின் கருத்துகளை கேட்டறிந்து அதனை புத்தகமாக தயாரித்து நாளைமறுதினம் உள்ளூராட்சி மாகாணசபை அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் கையளிக்க உள்ளேன்' என்றார்
