காதர் முனவ்வர்-
மாகொல முஸ்லிம் அநாதை நிலையத்தின் 53 வருட நிறைவை முன்னிட்டு பழைய மாணவர்களின் ஒன்று கூடலும் கௌரவிப்பு விழாவும் எதிர்வரும் 15.11.2015ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப. 2.00 மணிக்கு கொழும்பு 10 மருதானை தெமடகொட வீதியில் அமைந்திருக்கும் வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில் பழையமாணவர் சங்கத் தலைவர் இல்யாஸ் பாபு தலைமையில் நடைபெறவுள்ளது.
இவ்வைபவத்துக்கு ஜாமிஆ நளீமிய்யா கலாபீட பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி பிரதம அதிதியாக கலந்துகொள்வார். விசேட பேச்சாளராக சிரேஷ்ட அறிவிப்பாளர் அஸ்ரப் சிஹாப்தீன் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
இவ்விழாவின் போது மகொல முஸ்லிம் அநாதை நிலையத்தின் ஆயுட் கால போசகரும், ஜாமிஆ நளிமிய்யா கலாபீடத்தின் ஸ்தாபகருமான காலஞ்சென்ற நளீம் ஹாஜியாருக்கு பதிலாக அவரது மகன் யாகூப் நளீம் காதிமுல் அய்தாம் அநாதைகளின் பாதுகாவலன் எனும் பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படவுள்ளார்.
அன்வாருல் உலூம் அரபுக் கல்லூரியில் இருந்து மௌலவிப் பட்டம் பெற்று வெளியேறிய எமது பழைய மாணவர்களும் இவ்விழாவின் போது கௌரவிக்கப்பட உள்ளனர்.
அத்துடன் 53 வருட நிறைவை முன்னிட்டு சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்படவுள்ளது. 1962 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந் நிலையம் 1000 மாணவர்களை வைத்து பராமரிக்கும் அளவுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையத்தின் 53 வருட பூர்த்தியை முன்னிட்டு நடாத்தப்பட விருக்கும் இவ்விழாவில் பழையமாணவர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு பழையமாணவர் சங்கத் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

