எஸ்.எம்.அறூஸ்-
மாவட்ட மீனவ பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற மக்கள் பிரச்சினைகளை ஆராயும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட மக்கள் கலந்துரையாடல் நிகழ்வு இன்று 92015-10-05 திங்கட் கிழமை அக்கரைப்பற்று வை.எம்.ஸி கூட்ட மண்டபத்தில் மீனவ பேரவையின் தலைவர் கே.இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் விசேட அதிதியாகக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ரி.கலையரசன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடகிழக்கு இணைப்பாளர் அண்டனி ஜேசுதாசன், பெண்கள் திட்ட இணைப்பாளர் லவினா சுகந்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
திராய்க்கேணி, ஒலுவில்,அட்டாளைச்சேனை, அஸ்ரப்நகர், கண்ணகிபுரம், விநாயகபுரம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் பங்கு கொண்டு தங்களது கிராமத்தில் காணப்படுகின்ற பல்வேறு விதமான பிரச்சினைகளையும் முன்வைத்தனர்.
குறிப்பாக அடிப்படை உரிமைகள், காணி சுவிகரிப்பு, துறைக அபிவிருத்தியினால் மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை,சுகாதார பிரச்சினைகள்போன்ற விடயங்கள் மக்களினால் எடுத்துக்கூறப்பட்டது.
மக்களினால் முன்வைக்கப்பட்ட பல்வேறு விதமான பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துவதாகவும், மககளின் வாழ்வாதாரத்திற்கான முன்னடுப்புகளுக்கு மாகாண சபையின் வரவு- செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து நிதிகளை ஒதுக்கீடு செய்து தருவதாகவும் மாகாண சபை உறுப்பினர் ரி.கலையரசன் இங்கு பேசும்போது குறிப்பிட்டார்.
காணிப்பிரச்சினை மற்றும் துறைமுக அபிவிருத்தியினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் பிரேரணை ஒன்றைக் கொண்டு வரவுள்ளேன்.இன வேறுபாடுகளின்றி இந்த பிரேரணையை வெற்றியடையச் செய்வதுடன் அரசின் உயர் மட்டத்திற்கும் கொண்டு செல்லப்படும். குறி்பபாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் ஊடாக இந்த மக்களின் பிரச்சினைகளை முன்கொண்டு செல்வோம். தலைவர் சம்பந்தன் அவர்கள் தமிழ் பேசும் மக்களுக்காக குரல் கொடுத்து வருகின்ற ஒரு தலைவராவார் என்றார்.




