மஹிந்த அரசின் முக்கிய அமைச்சர் ஒருவர் கொழும்பு-07ல் அமைந்திருந்த கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான காணியொன்றை திருட்டுத்தனமாக சுருட்டிக் கொண்டுள்ள சம்பவம் குறித்து தகவல்கள் தெரியவந்துள்ளது.
கொழும்பு மாநகர சபைக்குச் செலுத்த வேண்டிய நிலுவைப் பணம் காரணமாக கொழும்பு-07 பான்ஸ் பிளேசில் காணியொன்று நகர சபையால் சுவீகரிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து காணி உரிமையாளர்கள் வழக்குத் தொடர்ந்த நிலையில் விவகாரம் சுமார் 40 வருடங்களாக இழுபறியில் இருந்துள்ளது.
இந்நிலையில் இக்காணி குறித்த தகவல் அறிந்து கொண்ட மஹிந்த அரசின் முக்கிய அமைச்சர் ஒருவர், காணி உரிமையாளர்களை துரத்தியடித்துவிட்டு அக்காணியை பலவந்தமாக பறித்தெடுத்துக் கொண்டிருந்தார். அதன் பின் அவர் திருட்டுத்தனமாக அக்காணியை வேறொரு தரப்பிற்கு விற்பனை செய்திருந்தார்.
தற்போது குறித்த அமைச்சருக்கு எதிராக வழக்குத் தொடருவது தொடர்பில் கொழும்பு மாநகர சபை ஆலோசனை செய்து வருவதாக அறியக்கிடைத்துள்ளது.
குறித்த அமைச்சர் மஹிந்த அரசில் உயர்கல்விக்குப் பொறுப்பாக இருந்துள்ளதுடன், கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியுற்று தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளார். அத்துடன் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த இந்த அமைச்சர் சிறிது காலம் சிறைவாசம் அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
