தேசிய அரசாங்கத்தின் முடிவின் பிரகாரம் வழங்கப்படவிருந்த மாவட்ட அபிவிருத்தி அமைச்சர் பதவியையும் மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கை முடிவின் பிரகாரம் அந்த மாவட்டங்களை வென்ற கட்சிகளின் தலைமை வேட்பாளர்களுக்கு மாவட்ட அபிவிருத்தி அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளது. அந்த வகையில் குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றிருந்தது. அதன் தலைமை வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
அதனடிப்படையில் எதிர்வரும் நாட்களில் மஹிந்த ராஜபக்ஷ, குருநாகல் மாவட்ட அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த அமைச்சுப் பதவியும் அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரு அமைச்சுப்பதவியாகும்.
எனினும் நேற்று மாலை தனக்கு நெருக்கமான ஊடகவயிலாளர்களைச் சந்தித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, குருநாகல் மாவட்ட அபிவிருத்தி அமைச்சர் பதவியை தான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நாடாளுமன்றத்தில் சாதாரண உறுப்பினராக இருப்பதற்கே தான் விருப்பம் கொண்டுள்ளதாகவும், எந்தவொரு பதவியையும் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றும் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
