புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் பலர் நேற்றைய தினம் தமது அமைச்சு பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர்.
அதன்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தமது பணிகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் வீசா பெற்றுக்கொள்வதில் உள்ள சிக்கல் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கை பணிப்பெண்கள் குறித்த அதிக கவனம் செலுத்தப்படும் என்று தெரிவித்தார்.
அத்துடன், 2020ஆம் ஆண்டு ஜப்பானில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்காக, அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள வேலைவாய்ப்பு வெற்றிடங்களுக்கு இலங்கையர்களை அனுப்பிவைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதுபோல் வீடமைப்பு மற்றும் கட்டட நீர்மாணத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாஸவும் நேற்றைய தினம் தமது அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதன்போது கருத்துரைத்த அவர் நாட்டு மக்களின் குடியிருப்பு பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
மலைநாட்டு புதிய கிராம அபிவிருத்தி மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பொறுப்பை அமைச்சர் திகாம்பரம் நேற்று பொறுப்பேற்றார்.
பெருந்தோட்ட மக்கள் என்ற அடையாளத்தை ஒழித்து அவர்களையும் கிராமமக்கள் என்ற வகுதிக்குள் கொண்டு வர அரசாங்கம் முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டார்.
அத்துடன், அமைச்சரவை அமைச்சரான விஜித் விஜயமுனி சொய்சா மற்றும் ராஜாங்க அமைச்சரான வீ.ராதாகிருஸ்ணன் மற்றும் வசந்த அலுவிகார ஆகியோரும் நேற்றைய தினம் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டனர்.
