எஸ்.அஷ்ரப்கான் -
இறுதி யுத்த குற்றச்சாட்டுக்கள் விடயத்தில் சர்வதேச விசாரணைகளுக்கு இடமளிக்க முடியாது என்ற பாதுகாப்பு பிரதி அமைச்சரின் கருத்து வரவேற்கத்தக்கது என முஸ்லிம் உலமா கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி அக்கட்சி தெரிவித்துள்ளதாவது,
இலங்கையின் யுத்தம் என்பது அதன் இறுதிக்கட்டம் மட்டுமல்ல, மாறாக 80 களிலிருந்தே பார்க்க வேண்டும். போர்க்குற்றம் என்று பார்த்தால் இலங்கை இராணுவம் மட்டுமல்ல தமிழ் போராளி குழுக்களும் பாரிய குற்றங்களை செய்துள்ளன. இன்று சர்வதேச விசாரணைய கோரும் புலி ஆதரவாளர்கள், ஈ பி ஆர் எல் எஃப் டெலொ போன்ற இயக்கங்கள் முஸ்லிம் மக்களுக்கெதிராக பல கொலைக்குற்றங்களை இழைத்துள்ளன.
இதற்காக இத்தகைய தமிழ் கட்சித்தலைவர்களையும் சர்வதேசம் விசாரிக்க வேண்டும் என கூறினால் அதனை ஏற்றுக்கொள்வார்களா என்று நாம் கேட்கிறோம்.
யுத்தக்குற்றம் என்பது இலங்கை இராணுவம் மட்டும்தான் என்பது போலும் , தமிழ் இராணுவம் நல்ல பிள்ளைகள் போன்று கருத்துச்சொல்வது நியாயமாகாது.
உண்மையில் தமிழ் இராணுவமே ஈவிரக்கமற்ற படுகொலைகளை செய்துள்ளது. 89ம் ஆண்டு சரணடைந்த முஸ்லிம் பொலிசாரின் கைகளைக்கட்டி விட்டு இன்றைய ஐ எஸ் தீவிரவாதிகளை விட அந்த முஸ்லிம்களை கொன்றதை அந்த இராணுவத்தை உருவாக்கிய டெலோவும், ஈபி ஆர் எல் எப்பும் சர்வதேச நீதி மன்றத்தில் பதிலளிக்க முன் வருமா?
ஆகவே யுத்த காலத்தில் அனைத்து தரப்புமே யுத்த மீறல் செய்துள்ளன. அவற்றை விசாரிக்கும் தார்மீக உரிமையும் சர்வதேசத்துக்கு இல்லை.
ஆகவே இலங்கைப்பிரச்சினைகளை இலங்கையிலேயே விசாரிக்க வேண்டும் என்பதே உலமா கட்சியின் நிலைப்பாடாகும். இதே நிலைப்பாட்டை புதிய பிரதி பாதுகாப்பு அமைச்சரும் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது .