க.கிஷாந்தன்-
அனுமதி பத்திரம் இல்லாமல் லொறி ஒன்றில் பன்றிகளை கொண்டு செல்ல முயற்சித்த லொறியின் சாரதியையும் மற்றுமொருவரையும் கைது செய்துள்ளதுடன் 11 பன்றிகளுடன் லொறியினையும் அக்கரப்பத்தனை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் 09.09.2015 அன்று இரவு இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
அக்கரப்பத்தனை பகுதியிலிருந்து கொழும்பு பகுதிக்கு பன்றிகளை கொண்டு செல்ல முயற்சித்த போது பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி விரைந்து சென்ற பொலிஸார் குறித்த லொறியை அக்கரப்பத்தனை ஆட்லோ தோட்ட பகுதியில் வைத்து வழிமறித்து சோதனை செய்யும் போது இவ்வாறு பன்றிகளை கொண்டு செல்வது தெரியவந்துள்ளது.
எனினும் குறித்த 11 பன்றிகளில் 3 பன்றிகளுக்கு மட்டும் அனுமதி பத்திரம் பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது. கைது செய்த சந்தேக நபர்களை நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகவும், லொறியையும், பன்றிகளையும் நுவரெலியா நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.