நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதேச வாதம் குடிகொண்டு ஆட்டிப்படைத்த கல்முனை தொகுதியில் பிரதேச வாத கயவர்களுக்கு எதிராக நின்று முஸ்லிம் காங்கிரசின் வெற்றியை உறுதிப்படுத்த கல்முனை மாநகர வாழ் முஸ்லிம்கள் செய்த தியாகமும் உழைப்பும் மறக்க முடியாதது.
ஒவ்வொரு தேர்தல்களிலும் எதிரிகளின் சவாலை முறியடித்து கல்முனையின் ஒற்றுமையினை கல்முனை வாழ் மக்கள் பாதுகாத்து வந்துள்ளார்கள் என்பது கடந்த காலங்களில் நிரூபணமான உண்மையாகும். இம்முறையும் பிரதேச வாதத்தை தூண்டி முஸ்லிம் மக்களின் ஒற்றுமையினை சீர்குலைக்க பிரதான தளமாக கல்முனை தொகுதியே எதிரிகளினால் குறிவைக்கப் பட்டிருந்தது. எனினும் அந்த முயற்சியை கல்முனை மாநகர முஸ்லிம்கள் வெற்றிகரமாக முறியடித்துள்ளமை கண்கூடு.
இம்முறை அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தொகுதிவாரியாக பெற்ற வாக்குகளில் 50% வீதத்துக்கும் அதிகமான 55% வீத வாக்குகளை அளித்து பாரிய வெற்றியை பெற்றுக்கொடுத்த ஒரே தொகுதி கல்முனை தொகுதியாகும். அதே போன்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பையும் ( 1.6% வீதம்) பாரியளவில் தோற்கடித்த ஒரே தொகுதியும் கல்முனையே.
முஸ்லிம் காங்கிரசின் தன்மானத்தை காலங்காலமாக காத்து நிக்கின்ற இலங்கை முஸ்லிம்களின் முக வெற்றிலையான கல்முனை மறைந்த மாபெரும் தலைவர் மர்ஹூம் எம் எச் எம் அஷ்ரப் அவர்களின் மறைவின் பின்னர் அமைச்சுப் பதவியொன்றை பெற்றுக் கொள்ள முடியாதிருப்பது கல்முனை வாழ் ஆதரவாளர்களால் பெரும் குறையாகவே பார்க்கப்படுகிறது.
ஒரு தசாப்தகாலமாக அபிவிருத்தி விடயத்தில் பின்நிற்கின்ற கல்முனை மாநகரின் உண்மையான அபிவிருத்திக்கு அமைச்சுப்பதவி ஒன்று இன்றியமையாதது ஆகும். இவ்வளவு காலமும் மற்றைய பிரதேசங்களின் அபிவிருத்திகளை பொறுமையோடு பார்த்திருந்த கல்முனை மக்களுக்கு இந்த நல்லாட்சியில் ஒரு விடிவினை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை பெற்றுக்கொடுக்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
இம்முறை எதிரிகளின் பாரிய சவால்களுக்கும் பணப்பரிமாரல்களுக்கும் மத்தியில் முஸ்லிம் காங்கிரசின் வெற்றிக்காக மக்களோடு மக்களாக இரவு பகல் பாராது அயராது உழைத்த கல்முனையின் காவலன் பாராளுமன்ர உறுப்பினர் ஹரீஸ் அவர்களுக்கு அமைச்சுப்பதவி ஒன்றினை வழங்கி கல்முனை மாநகர மக்களையும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்களையும் கௌரவிக்க வேண்டியது முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின் தலையாய கடமையாகும்.
இன்றைய சூழ்நிலையில் கல்முனைக்கு அமைச்சர் அதிகாரம் ஒன்று வழங்கப்படவேண்டியது எவ்வளவுக்கு அவசியமானதோ
அவ்வாறே அதை பெறுவதற்கு உரிய சகல தகுதிகளும் பெறுமானங்களும் கல்முனை மக்களுக்கும் அவர்களது பிரதிநிதிக்கும் இருப்பதை இலங்கையின் சகல முஸ்லிம்களும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்..
அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு தேர்தல்களிலும், சோதனைகளிலும் இந்த முஸ்லிம் காங்கிரஸின் தன்மானம் காக்கும் கல்முனை மாநகர மக்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இம்முறை செய்யப்போகும் கைம்மாறு என்ன?
(றினாஸ்)
