சுலைமான் றாபி-
நாட்டின் தேசிய அரசியலில் பாரிய மாற்றங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற வேலை இந்நாடு சர்வாதிகாரப்பிடியிலிரிந்து மீண்டும் விலகி மூன்றாம் நிலை சுதந்திரத்தினை அடைந்து தனிநபர் ஆளுமையிலிருந்து விலகி தன்னிறைவு கண்டு வருகின்றது. இவ்வேளையில்தான் பிரதமர் யார் என்ற கேள்விக்கணைகள் நாட்டின் நாலா திசைகளிலிருந்தும் ஒலிக்கத்துவங்கியுள்ளன.
அண்மையில் பாராளுமன்றத்தில் 19வது திருத்தச்சட்ட மூலம் நிறைவேற்றப் பட்டதிலிருந்து ஆட்சியதிகாரத்தில் இருந்தவர்களும், அதனை அடைய நினைப்பவர்களும் இந்தப் பதவியின் மீது ஒரு கண் வைத்துள்ளதை தற்போது நாம் கண்டு கொண்டு வருகின்றோம்.
இது இவ்வாறிருக்க சிறுபான்மைக் கட்சியினரும், பெரும்பான்மைக் கட்சியினரும் இந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட பல்வேறு அரசியல் காய்நகர்த்தல்களை வகுத்து வருகின்றனர். அந்த வகையில் சிறுபான்மைச்சமூகத்தின் ஒட்டு மொத்த வாக்குகளை தாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் இப்பெரும்பான்மைகட்சிகள் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சிறுபான்மைச்சமூகமானது அதன் ஒட்டு மொத்த அரசியல் பேரம் பேசும் சக்தியினைக் கொண்டு மீண்டுமொரு அரசியல் அதிகாரத்தினை வழங்கும் பாரிய பொறுப்பினை சுமந்துள்ளது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட சிறுபான்மைக்கட்சிகளின் வாக்கு வங்கிகள் இம்முறை அளப்பெரிய பங்கினை ஆற்றப் போகின்றது.
இந்நிலையில்தான் இந்தக் கட்சிகளின் பேரம் பேசும் சக்தியும் தேசிய அரசியலில் பல மாற்றங்களை ஏற்படுத்தப் போகின்றன.
உண்மையில் இந்த தேர்தலானது ஜனாதிபதிக்கும், பிரதமரிற்கும் இடையில் நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்தி இந்நாட்டில் வாழும் அனைத்து வித சமூகங்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவு செய்து கொள்வதற்காகவும், அவர்களின் இருப்புக்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் பாரிய சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தப் போகின்றது. ஆனால் இவைகள் சில வேளைகளில் சிறுபான்மைச்சமூகத்தின் ஒட்டு மொத்த அரசியல் நகர்வுகளை தவிடு பொடியாக்கும் நடவடிக்கைகளை இத்தொடர்புகள் தலைகீழாக மாறுவதென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இவ்விடத்தில் தான் இத்தேர்தலினை சிறுபான்மைக் கட்சிகள் சூட்சுமமாகப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்நாட்டை கடந்த காலங்களில் மாறி மாறி ஆட்சி செய்து வந்த பேரினவாதக் கட்சிகள் தாங்கள் அரசமைப்பதற்கு சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவினைப் பெற்று விட்டு சில சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு துரோகம் செய்தே வந்திருக்கிறது. இதற்கு ஒரு உதாரணமே அண்மையில் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட 20வது திருத்தச் சட்ட மூலமாகும். இவ்வாறான சூழ்நிலைகளில் பேரினவாதக் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து ஆசனங்களைப் பெருக்கிக்கொள்ள கனவுகள் கண்டாலும் அவைகள் சிறுபான்மைச்சமூகத்தின் ஒட்டு மொத்த வாக்குகளைத்தாரை வாத்துக் கொடுத்து விட்டு இக்கட்டான சூழ்நிலைகளில் கைசேதப்படுவதையே அண்மைய அரசியல் பதிவுகள் நன்றாக புடம் போட்டுக் காட்டுகின்றன.
இது இவ்வாறிருக்க ஸ்ரீ.ல.மு.கா இம்முறை ஐ.தே.கட்சியுடன் சேர்ந்து போட்டியிடுவதற்கு திரை மறைவில் பல முஸ்தீபுகளை மேற்கொண்டு வந்தாலும், தேர்தல் காலங்களில் அவர்களின் 'நாடி பிடிக்கும் செயற்பாடுகள்' தொடர்ந்த வண்ணமாகவே இருக்கின்றது. மறு புறத்தில் மலையகத்தில் உள்ள சகல கட்சிகளும் இம்முறை ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிட தீர்மானித்திருப்பது அங்கும் அதிகளவான ஆசனங்களைப் பெற்றுக் கொள்வதற்கு வழிகோலும் செயற்பாடாக இருக்கின்றது. ஆனால் இவ்விடத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பானது இன்றியமையாததாக காணப்படுகின்றது.
எது எவ்வாறாக இருந்தாலும் இம்முறை இடம்பெறும் பாராளுமன்றத்தேர்தலில் அதிகளவாக வெற்றி பெறும் வாய்ப்புக்கள் ஐ.தே.கட்சிக்கு இருந்தாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா போன்றோர்கள் தேர்தல் களத்தில் பிரச்சாரங்களில் ஈடுபடுவாரானால் இவ்விடயத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எனவே இந்த விடயத்தில் சிறுபான்மைக் கட்சிகள் நழுவல் போக்குகளைக் கடைப்பிடிப்பது அவர்களில் அரசியல் அதிகாரத்தினை ஒரு படி மேல் உயர்த்தும் என்பது மக்களின் எண்ணப்பாடாகும். தவறிடின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையின் கீழ் அரசாங்கம் அமைக்கப் படுமாயின் ஐ.தே.கட்சியுடன் கூட்டு சேர்ந்த ஒட்டு மொத்த சிறுபான்மைக் கட்சிகளுன் நிலைமை என்னவாகும்??
எனவே இந்த தேர்தலில் சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அவரவர் தொகுதிகளில் தனித்துக் கேட்பதும், அதன் மூலம் தங்களின் பேரம் பேசும் சக்தியினைக் கொண்டு இந்நாட்டிற்கு பொருத்தமான அரசாங்கத்தினையும், பிரதமமந்திரியினையும் தீர்மானிக்கும் மிகப்பெரும் சக்தியாக சிறுபான்மைச்சமூகமும், அதன் கட்சிகளும் மாற்றம் காண்பதும் காலத்தின் தேவையாக இருக்கின்றது.
