க.கிஷாந்தன்-
இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்தால், மலையக தேயிலை தோட்டத் தொழிலாளர்களிளுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
26.07.2015 அன்று ஞாயிற்றுக்கிழமை நுவரெலியா சகர மத்தியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றியபோதே இதனை தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சார கூட்டத்தில் ஜக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர்களான நவீன் திஸாநாயக்க, ஆர்.யோகராஜன், பி.இராஜதுரை, ரேணுகா ஹேரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரதமர் மேலும் இங்கு உரையாற்றுகையில்…
ஏனைய துறையினர் போன்று தோட்டத்துறையினருக்கும் சம்பள உயர்வு கிடைக்க வேண்டும் என்பதே தனது குறிக்கோள் என்றும், மலையக தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக தொழிற் சங்க பிரதிநிதிகளுக்கும் முதலாளிமார் சம்மேளத்திற்குமிடையிலான பேச்சுவார்த்தை நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தற்போது தடைப்பட்டுள்ளது.
தற்போது ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உடன்படிக்கையொன்றின் காரணமாக இலங்கையிலிருந்து மீண்டும் ஈரானுக்கு தேயிலை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அதற்கான நடிவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் தனது உரையில் ரணில் குறிப்பிட்டார்.
தோட்ட மக்களுக்கு காணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு குடியிருப்பு வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும் என்றும் 10 வருடங்களுக்கு மேலாக அரச காணிகளில் வசிப்பவர்களுக்கு காணி உரிமைகளும் வழங்கப்படும் என்று கூறியதோடு ஜனவரி எட்டாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட புரட்சியை முன்கொண்டு செல்ல வேண்டுமாயின் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.
நாங்கள் நினைக்கவில்லை இவ்வாறான தொரு தேர்தலை நடத்த முடியும் என்று பொலிஸார் இன்று தேர்தல் ஆனையாளரின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றனர்.
எங்களுடைய சுவரொட்டிகளை கூட அகற்றுகின்றனர். ஆகவே இங்கிலாந்தில் நடைபெற்ற தேர்தலை போன்றே இந்த தேர்தல் நடைபெறவுள்ளது. இது சாத்தியமானது நல்லாட்சி மூலமாகவே நடைபெறுகின்றது.
மகிந்த ராஜபக்ஷவால் இவ்வாறானதொரு தேர்தலை நடத்த முடியாது. தேர்தல் சட்ட மீறல்களை முன்னெடுக்காவிடின் அவர்கள் நீரில்லாத மீன்களை போல் ஆகிவிடுவார்கள். நாங்கள் இந்த இடத்திற்கு வந்திருப்பது ஜனவரி எட்டாம் திகதி ஆரம்பித்த புரட்சியை முன்னோக்கி கொண்டு செல்லவே ஆகவே இந்த புரட்சியை தொடர்வதற்கு ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களியுங்கள் என்றார்.



