நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கல்முனை வேட்பாளர் எச் எம் எம் ஹரீஸ் அவர்களை உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் ஆதரவளிக்க இருவரும் ஏற்படுத்திக்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய பகுதிகள் வருமாறு.
1. ஹரீஸ் அவர்களை ஆதரித்து பிரசுரங்கள்; உலமா கட்சியினால் வெளியிடப்படும். ஊடகங்களுக்கு விளம்பரங்களும் கூட்டாக தரப்படும்.
2. தேர்தல் நடவடிக்கைகளுக்கான வாகன வசதி, ஏனைய அனைத்து வசதிகளும் ஹரீஸ் அவர்களால் செய்து தரப்படும் பட்சத்தில் பிரச்சாரங்களிலும் ஈடுபாடு செலுத்தப்படும்.
3. இறைவன் உதவியால் ஹரீஸ் அவர்கள் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் பொது மக்களின் பிரச்சினைகளை தினமும் அறியக்கூடிய வகையில் அரசியல் காரியாலயம் ஒன்று கல்முனையில் திறக்கப்பட வேண்டும். இது வெள்ளிக்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் தினமும் 10 மணி நேரம் திறந்திருப்பதுடன் அதில் நிரந்தர ஊழியர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.
4. ஹரீஸ் அவர்கள் ஊரில் இருக்கும் நாட்களில் ஒவ்வொரு நாளும் குறைந்தது 3 மணி நேரமாவது இந்த காரியாலயத்தில் இருந்து மக்கள் பிரச்சினைகளை ஆராய வேண்டும்.
5. கல்முனை தேர்தல் தொகுதிக்குள் உள்ள உலமாக்கள், பொறியியலாளர்கள், வைத்தியர்கள், ஆசிரியர்கள் என பல் துறை சர்ந்த முக்கியஸ்தர்களைக்கொண்ட சபை ஒன்று உருவாக்கப்பட்டு குறைந்தது 6 மாதங்களுக்கொரு முறை பகிரங்கமாக கூடி மக்கள் பிரச்சினைகள் பேசப்பட்டு தீர்வுகள் காணப்பட வேண்டும்
6. அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதிகள் பகிரங்கப்படுத்தப்பட்டு வெளிப்படையாக அவை முழு அம்பாரை மாவட்ட மக்களுக்கும் செலவளிக்கப்பட வேண்டும்.
7. மௌலவி ஆசிரிய நியமனத்துக்காக சகோதரர் ஹரீஸ் தன்னாலான முயற்சிகளில் ஈடு பட வேண்டும். இது விடயத்தில் உலமா கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டும்.
8. கல்முனை உலமா சபைக்காக தனியான காணி ஒன்றை பெற்றுத்தருவதுடன் அதில் சகல வசதிகளும் கொண்ட கட்டிடம் அமைத்துத்தர முயற்சிக்க வேண்டும்.
9. கல்முனை தொகுதிக்குள் உள்ள அரச உத்தியோகத்தர்களின் குறிப்பாக பெண்களின் இடமாற்ற தேவைகள் விடயத்தில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.
10. கல்முனை புதிய நகரத்தை உருவாக்கி தீவட்டை காணியை நிரப்பி கல்முனைக்குடி, சாய்ந்தமருது மக்களின் வீடில்லா மக்களுக்கு வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
11. கல்முனை க்றீன் சிட்டியுடாக வீரமுனை வரை வயல்வெளியூடாக 50 அடி வீதி அமைக்கப்பட வேண்டும். அதற்காக சுவீகரிக்கப்படும் காணிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும்.
12. கிட்டங்கி பாலம் புனரமைப்பு, நற்பிட்டிமுனை, கொளனிப்பகுதிகளின் குடி நீர் மற்றும் வயல்களுக்கான நீர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.
13. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கட்டப்பட்ட நுரைச்சோலை 500 வீடுகளை உரியவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
14. முஸ்லிம் கலாச்சார அமைச்சின் கிளை ஒன்று கல்முனையில் நிறுவப்படுவதுடன் அதன் இணைப்பாளராக உலமா கட்சி சிபாரிசு செய்யும் ஒருவரை நியமிக்க வேண்டும்.
15. இதில் குறிப்பிடப்படாத விடயங்களும் பரஸ்பரம் பேசப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்.
