இலங்கை முஸ்லிம்களின் உணவுப்பழக்கத்தை மாற்ற வேண்டும் - என்.எம்.அமீன்

எம்.எஸ்.எம்.ஸாஹிர்-

கொழும்பு தெற்கு தேசிய வைத்தியசாலை முஸ்லிம் மஸ்லிஸ் முதன் முறையாக ஏற்பாடு செய்திருந்த இப்தார்நிகழ்வில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணிஆசிரியருமான என்.எம்.அமீன்! ஆற்றிய உரை.

அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே இந்த புனிதமான ரமழானின் இறுதிப் பத்தில் ஒன்று கூடிஇருக்கின்றோம். சமூகத்தினுடைய நலனை உயர்வாகக் கருதி இந்த நன்நாளில் ஒன்று கூடி இருக்கின்ற வேளை,எல்லோருடைய பிரார்த்தனைகளையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பிரார்த்தனையோடு,சமூகத்தோடு தொடர்பான ஒரு சில கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

இலங்கை வாழ் முஸ்லிம்களைப் பொறுத்தவரை இந்தக் குறுகிய நேரத்திலே இரண்டு,மூன்று விடயங்களைதொட்டுச் செல்லலாமென்று நினைக்கின்றேன். குறிப்பாக முஸ்லிம்களுடைய கல்விநிலைமை, முஸ்லிம்களுடையசுகாதாரநிலைமை, முஸ்லிம்களுடைய பொதுவான ஊடகம் பற்றிய சில கருத்துக்களை உங்களுடன் பரிமாறிக்கொள்வது சிறப்பு என நினைக்கின்றேன்.

டொக்டர் அஸாத் எம். ஹனீபா அவர்கள் எனக்கு இந்த அழைப்பை விடுக்கும் போது தேர்தல் ஆணையாளர் அவர்கள்எங்களுக்கு ஒரு அழைப்பை விடுத்திருந்தார். அங்கு இன்று இப்தார். உங்களுக்குத் தெரியும் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கின்ற தருணத்தில் தேர்தல் ஆணையாளரைச் சந்தித்தால் கூடுதல் நன்மையாக இருக்கும். என்றாலும்கூட இந்த சமூகத்தினுடைய முதுகெலும்புகளாக, புத்தி ஜீவிகளாக இருக்கின்ற உங்களைச் சந்திப்பதற்காக நான்அதனையும் கைவிட்டு இங்கே வருகை தந்தேன்.

இலங்கை வாழ் முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் முஸ்லிம்களுடைய கல்வி நிலையை ஒப்பீட்டளவில்பார்க்கும் போது ஒரு முன்னேற்றத்தைக் காண்கின்றோம். அப்படியான முன்னேற்றம்தான் களுபோவில வைத்தியசாலையில் 27 முஸ்லிம் வைத்தியர்கள் இருக்கின்றதென்றால், அது எங்களுடைய சமூகத்தினுடைய கல்வி வளர்ச்சியின் ஒரு அடையாளமாகச் சொல்லலாம். 

என்றாலும் கூட சகோதரர்களே! இந்த நாட்டிலே அதுவும்கொழும்பிலே வாழுகின்ற முஸ்லிம்களுடைய கல்வி நிலை பற்றி சொல்லப்போனால், கொழும்பிலே 22பாடசாலைகள் இருக்கின்றன. இந்த 22 பாடசாலைகளிலும் நாங்கள் முஸ்லிம் பாடசாலைகள் என்று சொல்லக்கூடியபாடசாலைகளின் கல்வி நிலை மிகப் பரிதாபகரமாக இருக்கின்றன. நான் நினைக்கின்றேன் விரல் விட்டுஎண்ணக்கூடியவர்கள்தான் பல்கலைக்கழகம் செல்கின்றார்கள். 

நான் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிபர் முன்னணிகளின் சம்மேளனத் தலைவராக இருந்த போது, பேராதனை பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸை இணைத்துக் கொண்டு ஒரு ஆய்வை நடத்தினேன். இந்த ஆய்வில் வெளிவந்த தகவல்கள் கொழும்பு வாழ் முஸ்லிம்களுடைய நிலை மிகப்பரிதாபகரமாக இருக்கின்றது. கொழும்பிலே இருக்கின்ற இந்த 22 பாடசாலைகளில் 2பாடசாலைகளைத் தவிர எல்லாப் பாடசாலைகளையும் இந்த ஆய்வுக்கு உட்படுத்தினோம். இங்கு 10 சதவீதமான மாணவர்கள்தான் ஜீ.சீ.ஈ சா/த பரீட்சையில் சித்தி பெறுகின்றார்கள். 2.5 சதவீதமான மாணவர்கள் 5ஆம் தரபுலமைப்பரீட்சையில் சித்தி பெறுகின்றார்கள்.

பல்கலைக்கழகத்துக்கு இந்தப் பாடசாலையிலிருந்து 1,2,3 பேரே தெரிவு செய்யப்படுகிறார்கள். இந்தப் பிரதேசத்திலே இருக்கின்ற முஸ்லிம்களுடைய கல்வி நிலை இப்படி இருக்கின்றது. உங்களுக்குத் தெரியும். கொழும்பு வாழ் முஸ்லிம்களுடைய அமைப்பு, அவர்களுடைய வீடுகள் இருக்கின்ற முறை, கல்விக்கான வழி காட்டல்கள் இல்லை.

வாழைத்தோட்டம் பள்ளிவாசலில் மூன்றாம் மாடியில் மட்டும்தான் பிள்ளைகளுக்கு படிப்பதற்கான வசதி இருக்கின்றது. இரவு நேரங்களில் அங்கே வந்து படிப்பதற்கு வசதி செய்து வைத்திருக்கின்றார்கள். ஏனைய எந்த இடத்திலும், வீடுகளிலும் படிக்கக்கூடிய வசதி இல்லை. 

பெரிய கல்லூரிகளில், வசதி படைத்தவர்கள், செல்வாக்குமிக்கவர்கள் தம் பிள்ளைகளைச் சேர்க்கின்றார்கள். கொழும்பு வாழ் முஸ்லிம்களுடைய நிலைமை மிகப் பரிதாபகரமானது. அது மாற்றப்பட வேண்டும். ஆனால் அதற்கு நாங்கள் என்ன செய்வது, உங்களைப் போன்ற புத்தி ஜீவிகளுடைய அவதானம் செலுத்தப்பட வேண்டும். கொழும்பிலே ஒரு காலத்திலே முஸ்லிம்கள் கொடி கட்டிப் பறந்தார்கள். அரசியல் தலைமைத்துவம் இருந்தது. ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு பாராளுமன்றத்திலும் குறைந்த பட்சம் 2 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பிலே தெரிவு செய்யப்படுவார்கள். 

துரதிஷ்டவசமாக கடந்த பாராளுமன்றத் தேர்தலிலே அந்த வாய்ப்பும் குறைந்து அமைச்சர் பௌசி மட்டும் தெரிவு செய்யப்பட்டார்கள். என்றாலும் கூட தெரிவு செய்யப்படுபவர்களுக்கு கல்வி சம்பந்தமாக ஒரு தூர நோக்கம் இருக்கின்றதோ தெரியாது. பாடசாலைக் கட்டிடங்கள் இருக்கின்றன. பெறுபேறுகள் இல்லை. அவர்கள் வாழுகின்ற சூழல் அப்படி. குறிப்பாக அனேகமான தாய்மார்கள் வெளிநாடுகளிலே தொழில் செய்கின்றார்கள். பிள்ளைகளுக்குச் சரியான வழிகாட்டல் செய்ய பெற்றார் இல்லை. 

இப்படியான நிலைமைஇருக்கின்றது. இந்த நிலைமையை மாற்றுவதற்காக நாங்கள் பல முயற்சிகளைச் செய்து வந்திருக்கின்றோம். செய்கின்றோம். என்றாலும் கூட இந்தப் பாடசாலைகளின் புள்ளிவிபரங்களைப் பார்த்தால் ஜீ.சீ.ஈ.சா/த பரீட்சையில்நல்ல முடிவுகளைப் பெறுகின்ற மாணவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருக்கின்றது. ஆகவே, உங்களைப்போன்ற படித்தவர்கள், உயர்ந்த நிலையிலே இருப்பவர்கள் இந்த சமூகத்தைப்பற்றிச் சிந்திப்பது மிக முக்கியமானதுஎன நான் கருதுகின்றேன். ஏனெனில், இந்த சமூகத்தினுடைய எதிர்காலம் கொழும்பு வாழ் முஸ்லிம்களுடைய செயற்பாட்டில் இருக்கின்றது. 

கொழும்பு வாழ் முஸ்லிம்கள் நடைபாதையிலே வர்த்தகம் செய்கின்றார்கள். அல்லது ஏனைய நாட்டாமை வேலை செய்கின்றார்கள். இவர்களுடைய அறிவின்மை காரணமாக நடக்கின்ற நடத்தை காரணமாக சில நேரங்களில் ஏற்படுகின்ற மோதல்கள் இன மோதல்களாக வெடித்து முழு நாட்டிலும் வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்துக்கும் பாதிப்பு ஏற்படக்கூடிய நிலை ஏற்படும். அப்படி நடந்திருக்கின்றது. ஒரு காலத்தில்முஸ்லிம்கள் என்றால் பலம் வய்ந்தவர்கள். கிராமங்களில் ஒரு பிரச்சினை வந்தால் புதுக்கடை வாழ் முஸ்லிம்கள் வருவார்கள், மாளிகாவத்தை முஸ்லிம்கள் வருவார்கள் என்று நினைத்தோம். இந்த சக்தி கூட இன்று எமது சமூகத்தில் இழந்திருக்கின்ற நிலைமை. 

ஆகவே எங்களுடைய கவனம் குறிப்பாக அந்தப் பக்கம் செலுத்தப்பட வேண்டும். மற்றொரு விடயம் இந்தச் சமூகத்தினுடைய சுகாதார நிலைமை. நீங்கள் எல்லோரும் வைத்தியர்கள். இந்தச் சமூகத்தினுடைய உணவுப்பழக்கம் காரணமாக இந்தச் சமூகத்திலே கூடுதலான , முக்கியமான நோய்விபரங்களின் புள்ளிவிபரங்களைப் பார்த்தால் தெரியும். நீரிழிவு, உயர் குருதியமுக்கம் ஏனைய நோய்களாக இருக்கலாம் கூடுதலான இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இருக்கின்றது. எங்களுடைய திருமணவைபவங்களிலே இருக்கிற உணவுவகைகள் சில நேரங்களிலே நோயாளியாக்குகின்ற உணவு வகைகள்இருக்கின்றன. 

இந்த உணவுப்பழக்கத்தை மாற்றுவதற்கு நாங்கள் ஏதாவது செய்தாக வேண்டும். ஏனெனில், சாதாரண இளவயதிலே நல்ல சமூகத்துக்காக, நாட்டுக்காக, தன் குடும்பத்துக்காக பணி செய்பவருக்கு நீரிழிவு நோய் வந்தால், ஏனைய நோய்கள் வந்தால், அவரால் சமூகத்துக்குச் செய்யக் கூடிய பங்கை சரியாகச் செய்ய முடியாது. எங்களுக்குத் தெரியும் .ஆகவே நாங்கள் இந்தப் பக்கத்தைப் பற்றிச் சற்று சிந்திக்க வேண்டும். நீங்கள் வைத்தியத்துறையிலே இருக்கின்றவர்கள் இந்தச் சமூகத்துக்கு தக்க உரிய ஆலோசனைகளை முன்வைக்க வேண்டும்.

அண்மையில் நான் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைச் சந்தித்தேன். சிங்கள அமைச்சர் ஒருவர். அவர் சொன்னார். உங்களுடைய சமூகத்துடைய சாப்பாடு (புரியாணி, குளிர்பானங்கள், வட்டிலப்பம்) காரணமாக குறைந்த வயதிலே மரணித்துப் போகிறார்கள். இறைவனுடைய நாட்டம் வேறு. அப்படியானதொரு சூழ்நிலை இருக்கின்றது. உண்மையிலே தொடராக அந்த நிலைமையினைப் பார்க்கின்றோம். எங்களுடைய உணவுப்பழக்கத்தை மாற்றுவதுபற்றி ஒரு பிரசார இயக்கம் ஆரம்பிக்கப்பட வேண்டும். 

ஒரு முறை பேராசிரியர் றிஷ்வி ஷெரீப் அவர்கள்வை.எம்.எம்.ஏ பேரவையின் மாநாட்டிலே உரையாற்றும் பொழுது இது தொடர்பான புள்ளிவிபரம் ஒன்றைச்சமர்ப்பித்திருந்தார்கள். விவசாயிகள் கூடுதலாக வாழும் கிழக்கு மாகாணத்தில் கூட கூடுதலான நீரிழிவு நோயாளிகள் இருப்பதாகச் சொன்னார்கள். நீங்கள் ஆய்வுகளைச் செய்து பார்க்க வேண்டும். சமூகத்தை அந்தத்துறையிலே அறிவூட்ட வேண்டும். இது மிக முக்கியமானது. இந்த விடயத்தை நான் இரண்டாவதாகவலியுறுத்துகின்றேன். சமூகத்தினுடைய கல்வி வசதி காரணமாக இந்த நிலைக்கு வந்திருக்கின்றீர்கள். உங்களுக்குஒரு பொறுப்பு இருக்கின்றது.

இங்கு நானும் நீங்களும் பதில் சொல்லியே ஆக வேண்டும். எங்களுடைய சமூகத்துக்கு என்ன செய்திருக்கிறோம். சமூகத்தை தூக்கி விடுவதற்கு என்ன செய்திருக்கிறோம் என்று சிந்தியுங்கள். இந்தநாட்டிலே முஸ்லிம்களுக்கான ஊடகம் என்பது 1866 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. மர்ஹூம் மீராமுகையதீன் என்பவர் முதலாவது முஸ்லிம் பத்திரிகையை ஆரம்பித்து இருக்கின்றார். முதலாவது தினசரிப்பத்திரிகை தினத்தபால். 177 வருடங்களுக்குப் பிறகு, அண்மையிலே நாங்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு 18வருடங்களுக்குப்பிறகு நவமணிப் பத்திரிகையை தினசரிப் பத்திரிகையாகக் கொண்டு வந்திருக்கின்றோம். முஸ்லிம்களுடைய விவகாரங்கள் உலகத்துக்கு எடுத்துச் சொல்லப்பட வேண்டும். 

முஸ்லிம்களுடையபிரச்சினைகள் மற்ற இனங்களுக்கு எடுத்துச் சொல்லப்பட வேண்டும். அதற்காக எங்கள் கைகளில் ஊடகம் இல்லை. எங்களுக்காய் பேச, எங்களுக்காகக் குரல் கொடுக்க, எங்கள் கைகளிலே ஊடகங்கள் இல்லை. எங்களுக்காக ஒருவானொலி இருக்கின்றதா? 49 வானொலிகள் இருக்கின்றன. எங்களுடைய கட்டுப்பாட்டில் ஒரு வானொலி கூடஇல்லை. இந்த நாட்டில் 19 தொலைக்காட்சி நிலையங்கள் உள்ளன. எங்களுடைய கட்டுப்பாட்டில் ஒரு தொலைக்காட்சி கூட இல்லை. இந்த நாட்டிலே 18 தினசரிகள் இருக்கின்றன. எங்களுடைய கட்டுப்பாட்டில் நவமணியை இப்பொழுதுதான் கொண்டு வந்திருக்கின்றோம். அதுவும் பல சிரமங்களுக்கு மத்தியிலே கொண்டு வந்திருக்கின்றோம்.

முஸ்லிம்கள் மத்தியிலே குறைந்த பட்சம் நாங்கள் கேட்பது முஸ்லிம்களால் வெளியிடப்படும் பத்திரிகை. எமது பத்திரிகைகளில் வெளிவரும் பிரச்சினைகள் உலகுக்குச் செல்கின்றது. எமது பிரச்சினைகள் இவ்வாறு சர்வதேசஅவதானத்துக்கு எடுத்துச் செல்கின்ற அளவுக்கு ஊடகங்களால்தான் சொல்ல முடியும். சிங்கள சமுதாயத்தினருக்குஎங்களுடைய பிரச்சினை என்ன என்று தெரியாது. நாங்கள் நிறைய பிள்ளைகள் பெறுகின்ற அல்லது கொள்ளையடிக்கின்ற அல்லது சுரண்டல் செய்கின்ற, மோசடி செய்கின்ற வியாபாரங்களிலே சம்பந்தப்பட்டவர்கள் முஸ்லிம்கள் என்று எமது பெரும்பான்மை இனத்தவரான சிங்களவர்கள் எங்களைப் பற்றி தவறாகப் புரிந்துவைத்திருக்கின்றார்கள்.

பார்க்கும் பார்வையில் நாங்கள் வசதி படைத்தவர்களாக, அழகான சமுதாயமாக இருக்கிறோம். என்று சொன்னாலும்கூட முஸ்லிம்கள் மிகக் கஷ்டப்படுகிறார்கள்.

கொம்பனித்தெருவுக்கு நீங்கள் சென்று பார்த்தால் இன்னும் வாளி மலசல கூடங்களையே மக்கள் பயன்படுத்துகிறார்கள். முஸ்லிம்களுடைய வீட்டுத்தேவைகள் கவனிக்கப்படவில்லை. எனவே, நீங்கள் இந்த சமூகத்தினுடைய புத்தி ஜீவிகள் சமூகத்தினுடைய தொழில்சார் உத்தியோகத்தர்கள், சமூகத்திலே முக்கியமாகப்பழகுபவர்கள் இந்த விடயங்களை கருத்தில் கொண்டு சமூகத்தின் விடிவுக்காக அனைவரும் பாடு பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

முஸ்லிம் மஜ்லிஸ் தலைவர் டாக்டர் அசாத் எம். ஹனீபா தலைமையில் இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -