தோப்பூர் ஏ.எஸ்.எம்.தாணீஸ்-
தோப்பூர் செல்வநகர் பிரதேசத்திலுள்ள மைய்யவாடி மற்றும் முஸ்லிம் மக்களின் வயல் காணிகள் 1000 ஏக்கர் அப்பிரதேசத்திலுள்ள வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமானவை என வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
இக்காணிகளில் பெயர் பதாகை மற்றும் அளவு கற்கள் நிலத்தினுள் பதித்துள்ளமை அப்பிரதேச முஸ்லிம் மக்கள் மத்தியில் அச்சத்தினையும், கொந்தளிப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.
நேற்று 26ம் திகதியும் அதற்கு முன் தினமும் வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர்கள் பெயர்ப்பலகை பதிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டது அப்பிரதேச மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்ததோடு மற்றுமொரு நில அபகரிப்புச் செயற்பாடாக பார்க்கப்பட்டது.
இதேவேளை கடந்த 20132014 காலப்பகுதியில் நாவற்கேணிக்காடு அக்கரை பகுதியிலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான 298 ஏக்கர் காணிகள் அருகாமையிலுள்ள சேருவில பௌத்த விகாரைக்குச் சொந்தமானதென பெருபான்மைச் சமூகத்தவர்கள் அவர்களுக்குள்ள அரசியல் அதிகாரத்தைக் கொண்டு வர்த்தமானி அறிவித்தல் விட்டு அக்காணிகளை சொந்தமாக்கியுள்ளனர் இது தொடர்பாக பல அரசமட்ட செயற்பாடுகள் முன்னெக்கப்பட்டு தேர்தல் காலமாக இருப்பதால் சற்று தொய்வு நிலை ஏற்பட்டுள்ள இத்தருனத்தில் மற்றுமொரு நில அபகரிப்புக்கான முஸ்தீவு நடைபெறுவது அம்மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, பெருபான்மை சமூகம் தொடர்பான ஒரு கேள்வியும் எழுந்துள்ளது.புதிய ஆட்சியில் நல்லாச்சிக்கான செயற்பாடுகளை ஒரு சில விசமிகளால் பௌத்த,இஸ்லாமிய உறவில் விரிசலையும்,பிரிவினையையும் ஏற்படுத்தும் ஆரம்ப புள்ளியாக மக்கள் கருதுகின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகள் இனங்களுக்கிடையில் முறுகலையும், பிரச்சினைகளையும் உருவாக்கும் மக்களுக்குச் சேவை செய்யவேண்டிய தினைக்களம் ஒரு பச்சமாக நடந்து கொள்வது மக்கள் மத்தியில் திணைக்களம் பற்றிய நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
கடந்த 25ம் திகதி இரவு 7.00 மணியளவில் சேருவில பிரதேச சபை உறுப்பினர் எம்.எல்.பைசர் ஹாஜியார் தலைமையிலான குழுவினர் பிரதியமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான எம்.எஸ்.தௌபீகினை சந்தித்து காணி பிரச்சினை தொடர்பாக தெரிவித்தற்கமைய உடனடியாக அரசாங்க அதிபருடன் தொடர்புகொண்டு அவருடைய காலத்தை பெற்று மறுநாள் காலை 8.00 மணிக்கு செல்வநகர் குதா ஜூம்ஆ பள்ளிவாயல் தலைவர் எம்.சாஹூல் ஹமீட் தலைமையிலான குழுவினர் பிரதியமைச்சருடன் சேர்ந்து அரசாங்க அதிபரை அவரது அலுவலகத்தில் நேரடியாக சந்தித்தனர்.
இச்சந்திப்பில் முன்னால் கிழக்கு மாகாண சபையின் தவிசாளரும் பிரதியமைச்சரின் அரசியல் ஆலோசகருமான சட்டத்தரனி எச்.எம்.பாயீஸூம் கலந்து கொண்டிருந்தார். பிரதியமைச்சரின் வேண்டுகோளிற்கினங்கவும், அரசியல் காலங்களில் மக்களை குழப்ப நிலையினை தவிர்க்குமுகமாக அரசாங்க அதிபர் பல்வேறு திணைக்களங்களுடன தொடர்பு கொண்டு பிரச்சினையை கேட்டறிந்து கொண்டதோடு, சேருவில பிரதேச செயலாளரை தொடர்பு கொண்டு உடனடியாக அமுலுக்குவரும் வகையில் பெயர்ப்பலகை மற்றும் நில கற்களை அகற்றுமாறும் பணித்தற்கினங்க அப்பிரச்சினைக்கான தீர்வு சுமுகமாக எட்டப்பட்டது.
அதேவேளை தேர்தல் காலமாக இருப்பதால் பிரச்சினைகளை தூண்டுபவர்களை கைது செய்யுமாறும், பொலிசாரை அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டதோடு, தேர்தலுக்கு பின்னர் இக்காணிப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றினை பெற்றுத் தருவதாக பிரதியமைச்சருடன் சென்ற குழுவிடம் தெரிவித்தார்.
அதேவேளை சம்பவ ஸ்தலத்திற்கு 26 காலை 9.00 மணிக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்களான எம்.ஏ.எம்.மஹ்ரூப் மற்றும் டொக்டர் அருன சிறிசேன ஆகியோர் மக்களின் காணி பிரச்சினை தொடர்பாக உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு பிரச்சினை தொடர்பாக மீள் தெளிவூட்டினர்.
அதன்பிற்பாடு காணி அமைச்சர் எம்.கே.டீ.எஸ்.குணவர்த்தன 26 காலை 11.00 மணிக்கு சம்பவ இடத்திற்கு விஜயம் மேற்கொண்டு காணி பிரச்சினையை தீர்த்து தருவதாக மக்களிடம் வாக்குறுதி அளித்தார்.
தேர்தல் காலங்களில் மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைகளை அரசியலாக்கி சுயலாபம் தேடுவதை நிறுத்தி ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளை செய்யவெண்டுமென அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.


