இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை உடனே விடுதலை செய்யவேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இராமேசுவரம் மீனவர்கள் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் 45 நாட்கள் மீன்பிடி தடைகாலம் கடந்த வாரம் முடிவடைந்ததையொட்டி மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டனர். மீன்பிடி தடைகாலம் முடிந்து கடலுக்கு சென்ற 2 நாளிலேயே எல்லை தாண்டி வந்ததாக கூறி 14 இராமசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்றது. இச்சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என தமிழக ஊடகமான மாலை மலர் கூறியுள்ளது.
இந்திய–இலங்கை மீனவர்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை என பல்வேறு கட்ட முயற்சிகள் எடுத்தும் இலங்கை கடற்படை தொடர்ந்து இராமேசுவரம் மீனவர்களை சிறைபிடித்து செல்வது வாடிக்கையாக நடந்து வருகிறது.
இந்நிலையில் தடைகாலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவர்களுக்கும் மீன்பாடு குறைந்த அளவே கிடைத்தது. மேலும் மீனவர்கள் பிடித்து வரும் இறால், நண்டு, கணவாய் உள்ளிட்ட ஏற்றுமதி வகை மீன்களுக்கு வியாபாரிகள் குறைந்த விலையே நிர்ணயம் செய்து வாங்கி செல்கின்றனர். இவ்வாறு கடலிலும், கரையிலும் மீனவர்களுக்கு சோதனையாக உள்ளது.
இது தொடர்பாக இராமேசுவரத்தில் நேற்று மாலை மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், இலங்கை அரசு கைது செய்துள்ள 14 மீனவர்களை உடனே விடுவிக்க இந்திய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இறால், நண்டு மற்றும் மீன்களுக்கு உரிய விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (6– முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இராமேசுவரம் மீனவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 800–க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடலுக்குள் செல்லாமல் கரையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த வேலை நிறுத்தத்தில் மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சேர்ந்தவர்கள் என 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த வாரம் பரபரப்பாக இருந்த இராமேசுவரம் மீன்பிடி துறைமுகம் இன்று வெறிச்சோடி காணப்பட்டது.
இது குறித்து மீனவர்கள் கூறுகையில், மீன்பிடி தடை காலம் முடிந்து முழுமையாக ஒரு வாரம் கூட முடியவில்லை. ஆனால் அதற்குள் இலங்கை அரசாலும், மீன் வியாபாரிகளாலும் தொல்லைக்கு ஆளாகி உள்ளோம்.
மீன்பிடி தடைகாலமான 45 நாட்கள் வருமானமின்றி தவித்து வந்தோம். கடந்த வாரம் நம்பிக்கையுடன் கடலுக்கு சென்ற எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.
