எஸ்.அஷ்ரப்கான்-
நாட்டை பயங்கரவாதத்திலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீட்டுள்ள போதும் மக்களின் மனங்களை அவரால் வெல்ல முடியாது போயுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் வருடாந்த மாநாட்டில் (14) பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்டார். ஆனால் அவர் சமாதானத்தை யதார்த்தமாக்கவில்லை.
மக்களின் மனங்களையும் அவர் வெல்லவில்லை. ஜனவரி 08 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் இதனைத் தெளிவுபடுத்தின.எதிர்கால அரசியல் தலைவர்க ளும் இதனைத் தகுந்த பாடமாக ஏற்று மக்கள் மனங்களை வெல்ல வேண்டும்.இனப்பிரச்சினைக்கு மூல காரணம் அதிகாரப் பசியேயாகும்.சிங்களத் தலைவர்கள் சிங்கள வாக்குகளைப் பெற அரசியல் செய்தனர்.
தமிழ் அரசியல்வாதிகளும் அவ்வாறே வாக்குகளை பெற அரசியல் செய்தனர். பின்னால் சில முஸ்லிம் தலைவர்களும் அவ்வாறே செய்தனர்.சகலருக்கும் சமமான கவனிப்பு இருக்க வேண்டும். சம உரிமை வாழ்வே அவசியம்.நாங்கள் இன்று நாட்டு மக்களை மீட்டு சமாதானமாக வாழும் சூழலை உருவாக்கியுள்ளோம்.
முஸ்லிம்களுக்கு மஸ்ஜித் செல்ல இன்று பயமில்லை. ‘சேனாக்களும், ‘பலயக்களும்’ இன்று வர முடியாது.தமிழர்கள் இன்று நிம்மதியாக உறங்குகின்றனர். இரவில் இராணுவ ஜீப் வந்து உறங்குபவர்களின் பிள்ளைகளைக் கொண்டு செல்லாது. தமிழர்களின் காணிகள் பறிக்கப்படாது.
முன்னைய காலங்களில் பெறப்பட்ட காணிகளை அரசாங்கம் திருப்பி கையளித்து வருகிறது.மஹிந்தவின் ஒரே நோக்கம் தேர்தலில் வெல்வதாகவே இருந்தது. அவர் மக்களின் எண்ணங்களை கருத்திற்கொள்ள வில்லை.நான் அமைச்சரவையில் மஹிந்த ராஜபக்ஷவுடன் வாக்குவாதங்களில் ஈடுபட்டவன்.
முஸ்லிம் அமைச்சர்கள் மெளனம் காத்த வேளையில் கூட முஸ்லிம்களுக்காக நான் அமைச்சரவையில் போராடியவன்.நான் இறுதிவரை மனிதாபிமானத்துக்காகப் போராடுவேன் என்றும் சுகாதார சுதேச அமைச்சர் தெரிவித்தார்.


