கொழும்பு 02 மியூ வீதியிலிருந்து 2010 ஆம் ஆண்டு முன்னைய ஆட்சி காலத்தில் வீடுகளை தரைமட்டமாக்கி அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சொந்த வதிவிடங்களையும், வியாபார நிலையங்களையும் கொண்டிருந்த குடும்பங்களுக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகளை மாற்றீடாக எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் அல்லது அதற்கு முன்னர் கையளிப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ஹக்கீம் நகர அபிவிருத்தி அதிகார சபை உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன், முன்னைய ஆட்சியின் போது பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவின் பேரில் அங்கு தமது சொந்த வீடுகளில் வசித்து வந்த மக்கள் பதறப் பதற ஈவிரக்கமின்றி வெளியேற்றப்பட்ட காட்சியை தாம் நேரில்; கண்டதாகவும், மனிதாபிமான அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய மாற்று வீடுகள், அவர்களுக்கான வியாபார நிலையங்கள், காணிகளை இழந்திருந்தால் நிலம் என்பனவும் வழங்கப்பட வேண்டுமென்றும் அதிகாரிகளிடம் அவர் வலியுறுத்தினார்.
கொழும்பு 02 மியூ வீதியில் முன்னர் வீடுகளை இழந்த சட்டபூர்வமான காணி உறுதிகள் போன்ற ஆவணங்களை உடைய 18 குடும்பங்களைச் சேர்ந்த வீட்டுடைமையாளர்கள், மேல் மாகாண சபை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் அர்ஷாத் நிஸாம்தீன் தலைமையில் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை பத்தரமுல்லை, 'செத்சிரிபாய'வில் அமைந்துள்ள அவரது அமைச்சில் சந்தித்து முறையிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சம்பவத்திற்கு முந்தைய தினம் வீடுகளில் இருந்தவர்களை வெளியேறிவிடுமாறு எச்சரிக்கப்பட்டதாகவும், மறுநாள் நீதிமன்ற உத்தரவின்றி முகமூடி தரித்து, மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் தமது சொந்த வீடுகளில் இருந்தவர்களை விரட்டியடித்ததாகவும் அமைச்சரிடம் கூறப்பட்டது.
முதலில் இந்த குடியிருப்பாளர்களின் வெளியேற்றம் எவ்வாறான சூழ்நிலையில் இடம்பெற்றது என்பதை மாகாண சபை உறுப்பினர் அர்ஷாத் நிஸாம்தீன் அமைச்சரிடமும், அமைச்சின் மேலதிக செயலாளர் பொறியியலாளர் பி. சுரேஷ் மற்றும் அதிகாரிகளிடமும் விளக்கிக் கூறினார்.
இந்த மக்கள் தங்களது வதிவிடங்களிலிருந்து அவசர அவசரமாக அவர்களது வீடுகள் தகர்க்கப்பட்டு, தரைமட்டமாக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட நிகழ்வு தமது வாழ்நாளில் ஒரு போதுமே மறக்க முடியாத துயர்மிக்க சம்பவமென்று அவர் குறிப்பிட்டார். இந்த வெளியேற்றத்தினால் தமது வீடுகளையும், உடைமைகளையும், அடிப்படை மனித உரிமைகளையும் இழந்ததன் விளைவாக சிலர் இருதய நோய் போன்றவற்றால் இறக்க நேர்ந்ததாகவும், சிலருக்கு சித்தசுவாதீனம் அற்றுப் போனதாகவும், வசதியோடு வாழ்ந்த இன்னும் சிலர் வறுமையின் விளிம்புக்குச் சென்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாதிக்கப்பட்டோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததை தொடர்ந்து அவர்களுக்கு மாற்றீடாக வீடுகளை வழங்குவது பற்றி குறிப்பிடப்பட்டதாகவும், வழக்கு இன்னமும் விசாரணையில் இருப்பதாகவும் அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்கள் சிலர் தமது அனுபவத்தையும் துயரத்தையும் அமைச்சரிடம் கூறி பிரளாபித்தனர். சிலர் தாம் வெளிநாடு சென்று பணிப்பெண்களாக தொழில் செய்து தாம் வாழ்ந்து வந்த வீடுகளை பிள்ளைகளுக்கு வழங்குவதற்காக அதன் மீது ஒன்று அல்லது இரண்டு மாடிகளை அமைத்ததாகவும் அவை இடித்து தரைமட்டமாக்கப்பட்டு விட்டதாகவும், ஆகையால் தங்களுக்கு இரண்டு வீடுகளை பெற்றுத்தர வேண்டுமென்றும் அமைச்சர் ஹக்கீமிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.
அவர்களது முறையீடுகளை மிகவும் கவனமாக செவிமடுத்த அமைச்சர் ஹக்கீம், அவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை சிலருக்கு மட்டும் வழங்க நகர அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவிப்பதாகவும், இடிக்கப்பட்ட வீடுகளின் புகைப்படங்களும் அவற்றுக்கான திட்டவட்டமான உறுதிப்பத்திரங்கள், மாநகர சபை மதிப்பீட்டு இலக்கம் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில் இரண்டு வீடுகளை வழங்குவது பற்றி சீர்தூக்கிப் பார்க்க முடியும் என்றும் சொன்னார்.
வெளியேற்றப்பட்டதன் பின்னர் வாடகை வீடுகளில் குடியிருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய வாடகைப் பணத்தை நகர அபிவிருத்தி அதிகார சபை செப்டெம்பர் மாதம் வரையில் தொடர்ந்து வழங்குவதாக நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் தெரிவிப்பதாக அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் பி. சுரேஷ் கூறினார்.
நகர அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் (காணி) எச்.ஏ. தயானந்த, மேலதிகப் பணிப்பாளர் (மேல்மாகாணம்) என்.ஏ.எஸ்.என். நிஸ்ஸங்க ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சருக்கு உரிய தரவுகளையும், தகவல்களையும் தெரிவித்தனர்.

