நகைச்சுவை நடிகர்களில் கைவசம் அதிகப்படம் வைத்திருக்கிறவர் சூரிதான். சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரஜினிமுருகன் விரைவில் வெளியாகவிருக்கிறது. அதைத் தொடர்ந்து இதுநம்மஆளு, மாப்பிள்ளை சிங்கம், அப்பாடக்கர் ஆகிய படங்கள் வரவிருக்கின்றனவாம்.
இப்போது, சிறுத்தை சிவா இயக்கும் அஜித் படம் உட்பட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். பொதுவாக இதுபோன்று வரிசையாகப் படம் நடிக்கும் நகைச்சுவை நடிகர்கள் நாள் கணக்கில் சம்பளம் பேசித்தான் நடிப்பார்கள். வடிவேலு ஒரு நாளைக்குப் பத்து இலட்சம் வரை சம்பளம் வாங்கினார் என்று சொல்லப்படும். சூரியும் தொடக்கத்தில் நாள்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தாராம்.
ஒருபடத்துக்கு நான்கு நாட்களே போதுமென்றால் அதற்கேற்ப சம்பளம் கொடுத்தால் போதும். இது தயாரிப்பாளர்களுக்கும் வசதி, நடிகர்களுக்கும் வசதி என்று சொல்லப்படும். கொஞ்சம் புகழ்பெற்ற நேரத்தில் சூரியும் நாள் சம்பளம் பேசி நடித்தார். இப்போது சூரி அப்படிச் செய்வதில்லையாம். அதற்குக் காரணம்? நாள்கணக்கில் சம்பளம் பேசி நடித்தால், படப்பிடிப்பின்போது கசக்கிப் பிழிந்து விடுகிறார்களாம். இயல்பாக நடந்தால் எட்டு நாட்கள் எடுக்க வேண்டிய காட்சிகளை நாள் சம்பளம் என்பதால் நான்கு நாட்களிலேயே எடுத்து விடுகிறார்களாம்.
ஒரு ஷாட்டுக்கும் அடுத்த ஷாட்டுக்குமான இடைவெளிகூட இல்லாமல் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்துகிறார்களாம். இதனாலேயே நாள் சம்பளம் என்ற பேச்சே வேண்டாம். ஒரு படத்துக்கு மொத்தமாக எவ்வளவு சம்பளம் என்று பேசிக்கொள்கிறாராம். அவ்வாறு செய்யும் போது படப்பிடிப்பு மிக நிதானமாக நடக்கிறதாம். இதனாலேயே நாள் சம்பளம் பேசாமல் மொத்தமாகச் சம்பளம் பேசி வாங்கிக் கொண்டிருக்கிறாராம் சூரி.(ந)