கிழக்கு நகர அபிவிருத்தி திட்டங்களுக்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு ஹக்கீம் பணிப்புரை!

ம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ள பல்வேறு நகர அபிவிருத்தி திட்டங்களுக்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளுக்கு அமைச்சர் ஹக்கீம் பணிப்புரை விடுத்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி செயல்திட்டங்களுக்கு அமைவாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்வதற்கான கூட்டம் செவ்வாய்கிழமை (26) முற்பகல் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் அவரது அமைச்சில் இடம்பெற்ற போதே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். 

இதில் நகர அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை காணி மீட்பு அபிவிருத்திக் கூட்டுத்தாபனம், கரையோர பாதுகாப்புத் திணைக்களம், காணி சீர்திருத்த ஆணைக்குழு ஆகியவற்றின் உயரதிகாரிகளும் பங்குபற்றினர். 

இந்த கலந்துரையாடலின் பொழுது முக்கியமாக அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் வரை நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள பிரதான செயல்திட்டங்கள் பற்றி வரைபடங்கள் காட்சிப்படுத்தப்பட்டு அதிகாரிகளினால் விளக்கமளிக்கப்பட்டது.

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ஒலுவில் பிரதேசத்தில் தென்கிழக்கு பல்கலைக் கழகத்திற்கு அண்மையில் தரிசி நிலமாகக் காணப்படும் காணியை ஒலுவில் நகர அபிவிருத்திக்காக பயன்படுத்துவதற்கு பெற்றுக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதையிட்டு அமைச்சர் ஹக்கீம் மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஒலுவில் பிரதேசத்தில் மண் அரிப்பினால் பாரிய நிலப்பகுதி கடலினால் காவு கொள்ளப்படுவதாக அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டிய அமைச்சர் ஹக்கீம், அத்தகைய பாதிப்பை தடுத்து நிறுத்துவதற்கான துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு அத்திவாரத்துடன் சேர்த்து ஒலுவில் வெளிச்சவீடு ஆபத்தான நிலையில் இருப்பது பற்றியும் குறிப்பிட்டு, அதிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார்.

மட்டக்களப்பு நகரில் ஒல்லாந்தர் கோட்டை அமைந்துள்ள பிரதேசத்தை பாரம்பரிய மரபுரிமைப் பிரதேசமாக மையப்படுத்தி, தேவையான புனர் நிர்மாணங்களை மேற்கொண்டு எழிலூட்டுவதற்கான வழிவகைகளும் ஆராயப்பட்டன. காத்தான்குடி கடற்கரை பூங்கா, கல்லடிப் பாலத்தை அண்டிய பறவை சரணாலயத்தோடு கூடிய பூங்கா, காந்தி பூங்கா, ஏறாவூர் கடலேரி பூங்கா, ஏறாவூர் பஸ் தரிப்பிடம், ஏறாவூர் புன்னக்குடா வீதி, பழைய சந்தை, செங்கலடி நவீன சந்தை அபிவிருத்தி என்பன பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

நகரப் பகுதிகளில் குப்பை கூலங்கள் கொட்டப்படுவதை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.
ஒரு மாத காலத்திற்கு முன்னர் அமைச்சர் ஹக்கீமின் பணிப்புரைக்கமைய சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று அபிவிருத்தி செய்யக்கூடிய இடங்களை அடையாளம் கண்டு, உரிய வரைபடங்களை தயாரித்து, உத்தேச செலவு பற்றிய மதிப்பீடுகளை மேற்கொண்டு அவை பற்றிய தெளிவான விளக்கமொன்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அமைச்சரிடம் முன்வைத்தனர்.

இக்கலந்துரையாடலில் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் மேலதிகச் செயலாளர் பீ.சுரேஷ், இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி எம்.எச்.எம்.சல்மான், பொது முகாமையானர் ஸ்ரீமதி செனாதீர, நகர அபிவிருத்தி அதிகார சபையின் செயலாற்றுப் பணிப்பானர் கிஷான் கருணாரத்ன, மேலதிகப் பணிப்பாளர் நாயகம் சமந்த ஜயசுந்தர, செயல்திட்ட பணிப்பாளர் மஹிந்த வித்தானச்சி, சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் எஸ்.தாம்புகல, அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான யூ.எல்.எம்.முபீன், ரஹ்மத் மன்சூர் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -