சப்றின்-
இலங்கைப் பாராளுமன்றத்தில் 19ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் வரலாற்றுச் சாதனை ஒன்று நிகழ்ந்துள்ளது.
1989ஆம் ஆண்டின் முதலாவது விகிதாசாரப் பாராளுமன்றத் தேர்தலை தொடர்ந்து இதுவரையில் எந்தச் சட்டமூலமும் இவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்படவில்லை அதிலும் அரசியல் அமைப்பு திருத்தம் ஐந்தில் நான்கு பாராளுமன்ற பெரும்பான்மையே வைத்திருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா காலத்தில் கூட நிறைவேற்றப்படவில்லை. கானல் நீர் போல் காணப்பட்ட 19ஆவது அரசியல் அமைப்பு சீர் திருத்தம் மைத்திரி ரணில் மெஜிக் மூலம் முழுப்பாராளுமன்றமே ஏகோபித்த தீர்மானத்திற்கு வந்து நிறைவேற்றியுள்ளது. இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரலாற்று ரீதியாக மக்களுக்குகிடைத்த வெற்றி என சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் நன்றி தெரிவிற்கும் போது குறிப்பிடுகின்றார் என அக்கரைப்பற்று ஜீனியஸ் அமைப்பின் தலைவர் எஸ்.எம்.தல்ஹா கூறினார்.
ஜீனியஸ் அமைப்பின் கூட்டம் அண்மையில் அக்கரைப்பற்றில் இடம்பெற்ற போதே மேற்படி கூறினார்.
மேலும் அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்;
225 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் 211 வாக்கு ஆதரவாகவும் ஒருவாக்கு எதிராகவும் கிடைத்துள்ளது. இங்கு அந்த ஒரு வாக்கு யாருடையது ஏன் அவர் எதிர்த்து வாக்களித்தார் என்பது தொடர்பாக நாம் கவனம் செலுத்துகின்றோம். ஏனேனில் வருகின்ற பொதுத்தேர்தலில் இப்படியான ஒன்றுகளுக்கு நாம்வாக்களிக்க கூடாது என்பதற்காகவே.
19ஆவது சட்டமூலத்திற்கு எதிர்த்து வாக்களித்தவர் பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகரவாகும். இவர் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அம்பாரை மாவட்டத்திற்கு ராஜபக்ஸ குடும்பத்தினரின் உறவினர் என இறக்குமதி செய்யப்பட்டவராகும். இவரை முதன்மையானவராக வெல்ல வைப்பதற்கு பல முயற்சிகள் அப்போது மேற்கொள்ளப்பட்டன. ஒரு சட்டமூலத்தை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது அவரது நிலைப்பாடு சார்ந்த விடயமாகும். ஆனால் அதனை எதிர்ப்பதற்கு அவர் சொல்கின்ற காரணத்தை வைத்துத்தான் அவரின் உள்நிலைப்பாட்டை அறிந்துகொள்ள முடியும்.
அது போல் சரத்வீரசேகர இச்சட்டமூலத்தை எதிர்ப்பதற்கு சொன்ன காரணம் இந்த 19ஆவது திருத்தம் சிறுபான்மை மக்கள் சார்பானதாக காணப்படுகிறது அதனால் இதனை எதிர்க்கின்றேன் அந்த எதிர்ப்பின் வெளிப்பாடு சட்ட மூலத்தின் 2ஆம் வாசிப்பின் மீதும் பின்னர் 3ஆம் வாசிப்பின் மீதும் சரத்வீரசேகரவால் வெளிப்படுத்தப்பட்டது. இங்குதான் இவர் அப்பட்டமான இனவாதியாக நமக்கு தென்படுகின்றார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது அம்பாரை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களை விருப்பு வாக்கு அடிப்படையில் நோக்கும் போது சரத்வீரசேகர 54370 வாக்குகளை பெற்று முதலாம் இடத்திற்கு வந்தார். அடுத்த இடத்தில் ஏ.எல்.எம்.அதாஉல்லா 36643, சிரியானி விஜேவிக்கிரம 35810, பீ. தயாரத்னா 32615 பெற்றிருந்தனர். குறிப்பாக அடுத்த சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளை நோக்கும் போது சராசரியாக 35000 வாக்குகளாக கணிக்கமுடியும். குறிப்பாக 15000க்கு மேற்பட்ட முஸ்லிம் தமிழ் மக்களின் வாக்குகள் சரத்வீரசேரவிற்கு அளிக்கப்பட்டிருந்தன. தேர்தல் தினத்தில் வாக்கெண்னும் நிலையத்தில் நாம் அவதானித்தபோது அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒவ்வொரு ஊரிலும் 1000க்கு மேற்பட்ட வாக்குகள் அவரின் எடுபிடிகள் மூலம் சரத்வீரசேகரவிற்கு போடப்பட்டிருந்தன மேலதிக சிறுபான்மைச் சமுகத்தின் வாக்குகளால் தெரிவான சரத்வீசேகர சிறுபான்மை மக்களுக்கு ஆதரவான சட்டம் எனக்கருதி பாராளுமன்றத்தில் 19ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை எதிர்த்திருக்கின்றார்.
எதிர்காலத்தில் முன்பின் அறிமுகம் இல்லாத இவர் போன்ற இனவாதிகளுக்கு சிறுபான்மைச் சமுகங்கள் வாக்களிப்பதை நிறுத்தவேண்டும்.
இனவாதமில்லாத ஜனாதிபதி மற்றும் பிரதமர்களை உருவாக்கிய நாம், சரத்வீரசேகர போன்ற இனவாதிகளை வாக்குகளினால் தோற்கடித்து விரட்டுவதை சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்கால இலட்சியமாக கருதுவோம் என மேலும் தெரிவித்தார்.(ந)
