அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகனான எக்சத் சேனாரதன தடுத்து வைத்துள்ளதாகக் கூறப்படும், சிறுமி தொடர்பான விசாரணையை நீதவான் நீதிமன்றத்திற்கு மாற்றி கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியின் தந்தையான காமினி ரணசிங்க இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.
2014ம் ஆண்டு நடைபெற்ற இந்த கடத்தல் குறித்து முறைப்பாடு செய்ய ஏன் இவ்வளவு தாமதம் என நீதிபதி லலித் ஜயசூரிய மனுதாரர் தரப்பிடம் கேள்வி எழுப்பினார்.
ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்ற காரணத்தால் முறைப்பாடு செய்ய தாமதம் ஏற்பட்டதாக மனுதாரர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி பதில் அளித்தார்.
எனினும், பிள்ளை கடத்தப்பட்டால் உடனடியாக முறைப்பாடு செய்ய வேண்டியது சட்ட விதி என நீதிபதி சுட்டிக்காட்டினார்.
முறைப்பாடு செய்ய தாமதமானதன் பின்னணில் உள்ள உண்மைத் தன்மை குறித்து பிரச்சினை உள்ளதாக பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
தனது கட்சிக்காரர் பெற்றோருடன் செல்ல விரும்பவில்லை என கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.
மேலும், அவரது பாதுகாப்புக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என பொலிஸார் முன்னிலையில் அறிவித்துள்ளதாகவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
கருத்துக்களை பரிசீலித்த நீதிபதி மனு மீதான விசாரணையை நீதவான் நீதிமன்றுக்கு மாற்றுவதாக அறிவித்தார்.
இது குறித்த அறிக்கை ஒன்றை ஜூன் 3ம் திகதி நீதிமன்றில் சமர்பிக்குமாறு நீதிபதி லலித் ஜயசூரிய உத்தரவிட்டார்.
