பி.எம்.எம்.ஏ.காதர்-
விழிப்புணர்வைப் புறம் தள்ளி கேளிக்கை நோக்கு முன்னிலை வழங்குகின்ற வணிகங்களில் ஒன்றாக தமிழ் சினிமா இன்று மாறிவிட்டது. திரைப்படங்கள் பற்றி பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இன்று வரை நடந்து கொண்டிருக்கின்றன என எழுத்தாளர் உமாவரராஜன் தெரிவித்தார்.
மருதமுனை பாஹிம் ஜூவலரியின் தயாரிப்பில் உருவான கல்வியா ? காதலா ? திரைப்படத்தின் இறுவட்டு வெளியீட்டு விழா கவிஞர் அல்லாமா இக்பால் கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் அண்மையில் (03-04-2015) மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
இங்கு இத்திரைப்படம் பற்றி உரையாற்றிய போதே எழுத்தாளர் உமாவரதராஜன் இதனைத் தெரிவித்தார்.
கவிஞர் இக்பால் கலைக்கழகத்தின் தலைவரும் உதவி இயக்குனருமான எம்.எம்.முகம்மட் முபீன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் சுகாதார இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹஸன் அலி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இறு வட்டை வெளியீட்டு வைத்தார்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம்,ஆரிப் சம்சுதீன்,கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல்,உதவிக் கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.சக்காப் ஆகியோர் விஷேட அதிதிகளாகக் கலந்து கொண்டனர். முதல் இறு வட்டை மைஹோப் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சித்தீக் நதீர் பிரதம அதிதியிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
வசந்தம் தொலைக் காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளரும், நிகழ்ச்சித் தொகுப்பாளருமான எஸ்.எம்.எம்.முஷாரப், பிறைஎப்.எம். அறிவிப்பாளர் எம்.ஏ.நஸிர் ஆகியோர் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களாகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.
மேலும் அதிதிகளாக எழுத்தாளர் சத்தார் எம் பிர்தௌஸ்,கல்முனை பிரதேச செயலக திவிநெகும அதிகாரி ஏ.ஆர்.எம்.சாலிஹ், பிறை எப்.எம்.கட்டுப்பாட்டாளர் பஸீர் அப்துல் கையூம், ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத், சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர் எஸ்.எம்.றபாயுதீன் உள்ளளீட்ட முக்கியஸ்த்தர்களுடன் பெரும் அளவிலான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
இங்கு எழுத்தாளர் உமா வரதராஜன் மேலும் இத்திரைப்படம் பற்றி உரையாற்றுகையில்;
திரைப்படங்கள் சமூகத்தைக் கெடுக்கின்றன. கேளிக்கையூட்டுட்டலுக்குள் மக்களை அமிழ்த்தி அவர்களுடைய விழிப்புணர்வை மங்கச் செய்கின்றன என்று ஒரு பிரிவினர் கூறுகின்றனர்.
ஸ்டீபன் ஸ்பீல்பெரக் என்ற புகழ் பெற்ற ஹொலிவுட் இயக்குனர் சினிமா என்பதை ஒரு மாயாஜாலமெனவும் அது எதனை வெளிப்படுத்துகிறது என்பது தனது கவலையில்லை என்றும் சொல்லுகின்றார். தமிழ் சினிமா பற்றி பல்வேறு கருத்துக்கள் சமூகத்தில் உலவுகின்றன.
நம் தமிழ்ச் சூழலின் பின்னணியில் இந்தக் கருத்துக்களை எல்லாம் நாம் ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லது. நாட்டார் பாடல்கள்,நாட்டார் கதைகள், பாணர் விறலியர் கூத்துக்கள, நாட்டுக் கூத்துக்ள், தெருக் கூத்துக்ள் இவற்றோடு பின்னிப் பிணைந்த நாட்டாரிசை என்பவை எல்லாம் நம் சாமானிய மக்களின் கலை வடிவங்களாக முன்னொரு காலத்தில் அடையாளம் காணப்பட்டவையாகும்.
இன்று வெளியிடப்படுகின்ற இந்தப் படத்தின் தலைப்பு கல்வியா? காதலா? பொதுவாக இத்தகைய தலைப்புக்கள் ஒரு விவாத அரங்கை அல்லது பட்டி மன்றத்தை நினைவுபடுத்துபவையாகும். 1960களில் வெளிவந்த பணமா பாசமா,உயிரா மானமா,பூவா தலையா,குலமா குணமா போன்ற திரைப்படங்களின் தலைப்புக்களை நினைவுக்கு கொண்டுவருகின்றவை.
இந்த படத்தின் தலைப்பே உள்ளடக்கத்துக்கான கட்டியமாகவும் அமைந்து விடுகின்றது. எந்தப் புதிர்களுக்கும் முடிச்சுக்களுக்கும் ஆழமான அலசல்களுக்கும் இடமளிக்காத வகையில் சூட்டப்பட்ட ஒரு தலைப்பு இது.முற்கணிப்புடன் வழக்கமான ஊகத்தைத் தோற்றுவிக்கக் கூடிய இந்தத் தலைப்பைத் தவிர்த்திருக்கலாமே என்பது என்னுடைய மனதின் முதல் பதிவு என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
ஒரு திரைக் கதை என்பது தன்னகத்தே சில சுவாரஸ்யமான முடிச்சுக்களையும் திருப்பங்களையும் கொண்டிருப்பது ரசிகர்களை தன் பிடிக்குள் வைத்துக் கொள்ளப் பெரிதும் உதவும் இப்படத்தில் அத்தகைய எதிர்பாராத திருப்பங்கள் எல்லாம் இருப்பதாக சொல்ல முடியாது.
எந்த இடத்தில் நின்று எவர் கை காட்டினாலும் நிறுத்தி யார் மனதையும் கோணச் செய்யாமல் ஏற்றிக் கொண்டு நேரம் தூரம் பற்றிய எந்த பிரக்ஞையும் இல்லாமல் எல்லோரையும் இன்புறச் செய்து சாவாதானமாகத் தன் இலக்கை அடையும் ஒரு பஸ் சாரதியின் தாராள மகம் இந்தப் படத்தின் இயக்குனருக்கும் வாய்த்திருக்ன்றது.
இப்படத்தின் ஆரம்பக் காட்சிகளின் பின்னர் கல்வியா காதலா கடலை விட்டு நகர்ந்து விடுகின்றது அதை தவறு என்று கூற முடியாது தலைப்பு திரைக் கதையின் மையம் என்பவற்றை எட்டுவதற்கான முயற்சியாகவே தொடர்ந்து வரும் காட்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.ஆனாலும் அந்த முயற்சியிலும் ஒரு தடுமாற்றம் ஒரு சமரசம் தென்படுகின்றது.
ஒரு திரைப்படத்தின் உருவாக்கத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கும் துறைகளாக கதை, இயக்கம், வசனம்.பின்னணி இசை,நடிப்பு,ஒளிப்பதிவு, உடையலங்காரம்,ஒப்பனை,படத்தொகுப்பு,டப்பிங் ஆகியவற்றை கறிப்பிட வேண்டும்.இவை எந்த அளவில் இந்தப்படத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை இத்திரைப்படம் சார்ந்து பங்காற்றிய அனைவரும் சுய விசாரணை செய்து கொள்வது எதிர்காலத்தில் நன்மையையும் நல்ல பலாபலன்களையும் தரும்.
ஒரு படம் உருவாவது இரண்டு மேசைகளில். ஒன்று இயக்குனருடையது மற்றையது எடிட்டருடையது என்ற சொல்வார்கள் ஒரு மோசமான படத்தை தூக்கி நிறுத்த முடியாது ஆனால் ஓரளவு பார்க்கக் கூடியதாக மாற்ற முடியும் என்று சொல்வதுண்டு அலுப்பூட்டும் சலிப்பூட்டும் நீண்டு கொண்டு செல்லும் காட்சிகளை தூக்கினாலே ஓரளவு விறுவிறுப்பை எடிட்டரால் கொண்டு வந்து விடமுடியும்.
தொழில் நுட்பக் கோளாறுகள் சில இந்தப் படத்தில் உள்ளன. முக்கியமாக படத்தொகுப்பு மிகவும் பலவீனமாக உள்ளது.பல இடங்களில் காட்சிகள் பாய்ச்சல் நிகழ்த்துகின்றன தந்தை தந்தையின் நண்பர் மகன் ஆகியோர் நாற்காலிகளில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது மகன் திடீரென்று மாயமாக மறைந்து போயிருப்பார் படத்தின் மைய ஓட்டத்திற்கு சம்பந்தமில்லாமல் பல காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன எடிட்டர் சற்று கவனமாக செயற்பட்டிருந்தால் இத்தகைய காட்சிகளை நீக்கி மிகவும் இறுக்கமான கச்சிதமான படமொன்றை வழங்கியிருக்க முடியும்.
இந்தப் படத்தில் நான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய முக்கிய விஷயம் ஒன்றுன்டு இதில் வரும் பாத்திரங்கள் எல்லாமே அன்பு நிறைந்தவையாக இருக்கின்றன பரஸ்பரம் மரியாதை வழங்குபவர்களாக இருக்கிறார்கள்.ஒரு சுடு சொல் பேசாமல் இருக்கிறார்கள் எல்லாவற்றிற்கும் மேலாக அதிசயத்திலும் அதிசயமாக அரசாங்க அதிகாரிகள் சிரித்த முகங்களுடன் வீடு தேடி வந்து உதவுகிறார்கள் நல்லாட்சியின் அதிசயங்களில் இதையும் ஒன்றாகவே நாம் கொள்ள வேண்டும். அன்பென்ற நிரோடை இன்னும் இந்த உலகத்தில் வறண்டு போகவில்லை என்ற இயக்குனரின் நெகிழ்ச்சி நிறைந்த பார்வை மிகவம் மகிழ்ச்சி ஊட்டுகிறது. என எழுத்தாளர் உமா வரதராஜன் குறிப்பிட்டார்.
இந்தப் படம் மருதமுனை பாஹிம் ஜூவலரியின் (எஸ்.எல்.எம்.நழீம்) தயாரிப்பில் பிரபல நாடக இயக்குனர் ஜீனாராஜின் (ஏ.எல்.ஐ.ஹூசைன்) கதை,வசனம்,நெறியாழ்கையில் பிரபல இசையமைப்பாளர் யு.ஜே.நஸார் இனிமையான இசை வழங்கியுள்ளார். வஸீம் ஹூசையின் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பிரதான பாத்திரத்தில் குணசித்திர நடிகர் யு.எம் முபாறக் நடித்துள்ளார். மேலும் எஸ்.எல்.எம்.நழீம், இப்றாஹிம் எம் றபீக், எம்.எஸ்.எம்.சித்தீக். ஏ.எல்.ஐ.ஹூசையின் ,ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
.
.jpg)