விளையாட்டில் ஆர்வம் கொண்டுள்ள உங்களைப் போன்ற இளைஞர்கள் உங்கள் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பினையும் அந்தத் துறையோடு மாத்திரம் மட்டுப்படுத்திக் கொள்ளக்கூடாது. விளையாட்டின் மூலம் பெறப்படும் ஆளுமைகளைப் பயன்படுத்தி சமூகத்துக்காகவும் நாட்டுக்காகவும் பங்களிப்புச் செய்ய நீங்கள் முன்வர வேண்டும் என (03.04.2015) அன்று இடம்பெற்ற காத்தான்குடி ரோயல்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போது பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
அவர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது;
'நீங்கள் கிரிக்கட் விளையாட்டின் மூலம் சில இலட்சியங்களை அடைய எதிர்பார்த்திருப்பீர்கள், அவற்றை நீங்கள் அடைவதோடு உங்கள் பணியினை நிறுத்திக்கொள்ளகூடாது. விளையாட்டின் மூலம் பெறப்படும் ஆளுமைப் பண்புகளை சமூகத்துக்காகவும் நாட்டுக்காகவும் பயன்படுத்த வேண்டும்.
மக்கள் பணிக்கு வயதெல்லை ஒரு தடையல்ல, 'நாங்கள் இளம் வயதினர்கள், எங்களால் எதைச் செய்யமுடியும்?' என நீங்கள் பின்னடையத் தேவையில்லை. நாங்கள் மாணவப்பருவத்திலேயே மக்கள் பணிக்கு வந்தவர்கள்.
90களில் உங்களைப் போன்றே இதே வயதில் பல்கலைக் கழக மாணவர்களாக இருந்தோம். ஆயுத மோதல்கள் உச்சகட்டத்தை அடைந்து பாதுகாப்பு அச்சுறுத்தல்களுடன் நமதூர் மக்கள் வாழ்ந்து வந்த காலகட்டமது. அருகிலுள்ள நகருக்குச் செல்வதென்றாலும் பாதுகாப்புடன் செல்ல வேண்டிய சூழல் அன்றிருந்தது. எமது மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புக்கள் அருகிப் போயிருந்தது. அவர்கள் மிகுந்த இடர்பாடுகளை எதிர்நோக்கியிருந்தனர்.
இக்காலகட்டத்திலேயே எமது மக்கள் பணி ஆரம்பமானது. கல்வியின் மூலமே சமூகம் எழுச்சி பெற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து எமது பணிகளை ஆரம்பித்தோம். நாங்களும் கல்வியினைத் தொடர்ந்ததோடு ஏனைய மாணவர்களும் கற்பதற்கான வசதிகளையும் ஊக்குவிப்புக்களையும் செய்தோம். அதன் விளைவாக பொறியியலாளர்கள்,வைத்தியர்கள் என பலரும் உருவாகினர். சமூக மாற்றமொன்று உருவாக அது வழிவகுத்தது.
நீங்களும் வயதினைப் பொருட்படுத்தாது மக்கள் பணிக்காக முன்வரவேண்டும். இப்பணி ஊழல், மோசடி என்பனவற்றுக்கு எதிராகவும் சமூகத்துக்கும் நாட்டுக்கும் பயனளிப்பதாகவும் அமைய வேண்டும்.
கடந்த ஆட்சியில் எமது மக்களுக்கெதிராக இனவாதம் தலை தூக்கியது. உரிமைகள் மறுக்கப்பட்டபோது அதற்கெதிராகக் குரல்கொடுக்க மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் பின்வாங்கினர். அவ்வேளையில் NFGG முன்னின்று குரல் கொடுத்தது. ஆட்சி மாற்றமொன்று தேவையென்று அனைத்து முற்போக்கு சக்திகளும் ஒன்றினைந்தபோதும் எமக்கு இதே நிலையே ஏற்பட்டது. அங்கும் NFGGயே முன்னிற்க வேண்டி ஏற்பட்டது. கடைசி நேரத்திலேயே கள நிலவரத்தை உணர்ந்து சிலர் இணைந்து கொண்டனர்.
எனவே, தற்போதுள்ள எமது யதார்த்த நிலையை உணர்ந்து ஊழல்,மோசடியற்ற நல்லாட்சியை உருவாக்கத்தக்க தலைமைத்துவம் உருவாக நீங்களும் எம்முடன் இணைந்து பணியாற்ற முன்வரவேண்டும்.'
