ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து கவிழ்க்கும் சூழ்ச்சி!

க்கிய தேசியக் கட்சியின் தேசிய தலைவரும், நாட்டின் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவை, பிரதமர் பதவியிலிருந்து கவிழ்க்கும் சூழ்ச்சித் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக உத்தியோகப் பற்றற்ற அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்வேறு முனைகளில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை வகிப்பதுவம், பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் இருப்பதுவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பலருக்கு விருப்பமில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் ஒருவரை வெகு விரைவில் நியமிக்கும் நோக்கில் இவ்வாறு சூழ்ச்சித் திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆட்சி பீடம் ஏற்றுவதில் முக்கிய பங்காற்றிய கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு நன்றி பாராட்டும் நோக்கில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கியிருந்தார்.

எனினும், ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டது முதல் அரசாங்கம் என்ற அடிப்படையில் பொறுப்பு வாய்ந்த அமைச்சரவை உறுப்பினர்கள் கூட்டுப் பொறுப்புடன் நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது அப்பட்டமான வெளிச்சமாக அமைந்துள்ளது.

சீன அபிவிருத்தித் திட்டங்களாக இருக்கட்டும், இந்திய மீனவர் பிரச்சினையாக இருக்கட்டும், கடந்த கால அரசாங்க உறுப்பினர்களுக்கு எதிரான விசாரணைகளாக இருக்கட்டும் சிறிய விடயங்கள் முதல் கொண்டு தேசிய ரீதியில் அதி முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் வரையில் ஆளும் கட்சிக்குள் கடுமையான கருத்து முரண்பாடு வெளிப்பட்டு வருகின்றமையை கண முடிகின்றது.

அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன ஒரு நிலைப்பாட்டை காலையில் வெளியிடும் அதேவேளை, மாலையில் அதற்கு முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களை ஆளும் கட்சியின் மற்றுமொரு அமைச்சர் வெளியிடும் நிலைமையே நீடித்து வருகின்றது.

சிங்கள பேரினவாத கொள்கைகளை கொண்ட தரப்புக்கள் இந்த அரசாங்கம் புலி ஆதரவு அடிப்படையில் செயற்பட்டு வருவதனையும், தொடர்ந்தும் யுத்தத்தை விற்று பிழைப்பும் நடத்துவதில் ஆர்வம் காட்டி வருவதனையும் அவதானிக்க முடிகின்றது.

19ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கப்படும் என ஏற்கனவே இணங்கப்பட்டிருந்த நிலையில் திடீரென அந்த சட்டத்திற்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது என சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் நீண்ட காலமாக உரிமைகள் மறுக்கப்பட்டு வந்த நிலையில், நியாமான உரிமைகளை வழங்கும் அரசாங்கத்தின் சில முயற்சிகளுக்கு புலிச் சாயம் பூசுவதில் தெற்கு சிங்கள ஊடகங்களும் சில அரசியல் தரப்பினரும் அதீத ஆர்வம் காட்டி வருகின்றார்கள் என்பது மறுப்பதற்கில்லை.

ஒரு புறத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக காண்பித்து கொள்ளும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும் மஹிந்த ராஜபக்சவின் விசுவாசிகளும் பல்வேறு வழிகளில் அரசாங்கத்தை கவிழ்ப்பதில் நேரடியாகவும் மறைமுகாகவும் சூழ்ச்சி செய்து வருகின்றனர்.

இதன் ஓர் கட்டமாகவே தேர்தல் முறைமை மாற்றம் அவசரமாக அமுல்படுத்தப்பட வேண்டுமென கோரப்படுகின்றது.

தற்போது தேர்தல் முறைமையை மாற்ற வேண்டுமென கோரி வரும் தினேஸ் குணவர்தன, 13 ஆண்டுகளாக தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றார்.

எனினும், தினேஸ் குணவர்தன குழுவினால் அமுல்படுத்த முடியாத தேர்தல் முறைமையை ஒரு சில தினங்களில் மாற்றுமாறு கோருவது நடைமுறைச் சாத்தியமற்ற விடயமாகவே கருதப்பட வேண்டும்.

பரிந்துரை செய்யப்பட்டுள்ள தேர்தல் முறைமை அறிமுகம் செய்யப்பட்டால் தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தின் அரசியல் இருப்பு கேள்விக்குள்ளாகக் கூடிய அபாய நிலைமை காணப்படுகின்றது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிங்களப்பேரினவாத சக்திகள் கற்றுக்கொண்ட பாடத்தின் அடிப்படையில் இவ்வாறான ஓர் உத்தியின் மூலம் தேர்தல் முறைமையை மாற்றியமைக்க முயற்சித்து வருகின்றது.

இவ்வாறான ஓர் பின்னணியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நீடிப்பதனை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதய சுத்தியுடன் விரும்புகின்றாரா என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் எழத் தொடங்கியுள்ளமை மறுக்கப்பட முடியாத நிதர்சனமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -