ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியில் பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த 20-ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது.
இதில் 182 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணியால் 6 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. 62 ஓட்டங்கள் குவித்த சென்னை வீரர் சுரேஷ் ரெய்னா ஆட்டநாயகன் விருது பெற்றார். 05-ஆவது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி பெற்ற 04-வது வெற்றி இதுவாகும். பெங்களூரு அணி தொடர்ச்சியாக சந்தித்த 03-வது தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.
தோல்விக்கு பின்னர் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டன் விராட் கோலி அளித்த பேட்டியில், ‘தோல்வி எங்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. உண்மையை சொல்லப்போனால் நாங்கள் ஒரு அணியாக ஒருங்கிணைந்து செயல்படுவதில் தவறி விட்டோம். இந்த குறையை போக்க நாங்கள் கலந்து ஆலோசிக்க வேண்டியது அவசியமாகும். இந்த பிரச்சினையை சரி செய்ய முடியும் என்று நம்புகிறோம். தனிப்பட்ட வீரரின் சிறப்பான ஆட்டத்தை விட நல்ல இணை (பார்ட்னர்ஷிப்) ஆட்டம் அமைய வேண்டியது முக்கியமானதாகும்.
அது தான் எங்களுக்கு பெரிய பிரச்சினையாக உள்ளது. நல்ல பார்ட்னர்ஷிப் உருவாகி 20 முதல் 25 ஓட்டங்கள் சேர்ப்பதற்குள் ஒரு விக்கெட்டை இழந்து விடுகிறோம். அதுவே 50 முதல் 70 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப்பாக மாறினால் நன்றாக இருக்கும். எங்கள் வீரர்கள் இன்னும் புத்திசாலித்தனமாக விளையாட வேண்டும். குறிப்பாக சொந்த ஊரில் சிறப்பாக செயல்பட வேண்டும்’ என்று தெரிவித்தார்.(ந-த்)
