திருச்சி பாத்திமா நகரில் பிரேமானந்தா ஆஸ்ரமத்தில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வு மற்றும் கொலைக் குற்ற வழக்கில் பிரேமானந்தாவுடன் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நான்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி, அவர்களின் குடும்ப உறவினர்கள் எழுதியுள்ள கடிதத்தை இலங்கையின் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்திருக்கின்றார்.
இந்தியப் பிரதமர் மோடிக்கு விக்னேஸ்வரன் அனுப்பி வைத்துள்ள கடிதம்
இந்த ஆச்சிரமத்தில் இருந்த 13 இலங்கைப் பெண்களை வன்புணர்வு செய்தது ரவி என்பவரைக் கொலை செய்து ஆஸ்ரமத்திலேயே புதைத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு நடத்தப்பட்ட வழக்கில் பிரேமானந்தாவும், அவருடன் இராசநாயகம் கமலானந்தா, பாலன் என்றழைக்கப்படும் சண்முகம் பாலேந்திரா, சதீஸ் என்றழைக்கப்படும் சபாரத்தினம் சதீஸ்குமார், நந்தா என்றழைக்கப்படும் சோமசுந்தரம் நந்தகுமார் ஆகியோருக்கு கடந்த 1997 ஆம் ஆண்டு ஆயள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
கூடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரேமானந்தா பல்வேறு நோய்கள் காரணமாக 2011 ஆம் ஆண்டு இறந்து போனார்.
இதனையடுத்து ஏனைய நான்கு பேரும் புழல் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வருகின்றார்கள்.
இவர்களில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மனைவி சந்திராவதி, மகள் சிவாதி, பாலேந்திராவின் சகோதரன் சிவேந்திரன், சதீஸ்குமாரின் தாயார் சித்திராங்கனி, நந்தகுமாரின் மனைவி சுந்தரி ஆகியோர் இணைந்து புழல் சிறைசிசாலையில் அடைக்கப்பட்டுள்ள தமது குடும்ப உறவினர்களை விடுதலை செய்ய வேண்டும் என அந்தக் கடிதத்தில் கோரியிருக்கின்றனர்.
சுவாமி பிரேமானந்தாவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதற்காக அவர் மீது பொய்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தி பொய் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது என்றும், எனினும் அவர் உயிரழந்துவிட்டதையடுத்து, அவருக்கு உடந்தையாக இருந்தார்கள் என்று குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்டவர்கள் 20 வருடங்களாக இன்னும் தண்டனை அனுபவித்து வருவதாகவும், அவர்களுக்குத் தண்டனை விதித்துள்ள நீதிமன்றம் மாநில அரசு அல்லது மத்திய அரசு வழங்கும் பொதுமன்னிப்புக்களின் மூலம் விடுதலை செய்யப்படக் கூடாது என நிபந்தனை விதித்திருப்பதனால், அவர்களை விடுதலை செய்வதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் கோரப்பட்டிருக்கின்றது.
பிரேமானந்தா ஆஸ்ரம வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்த நால்வரும், இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், அவர்களுடைய குடும்ப உறவினர்கள் தமது மாகாணத்தில் வசித்து வருகின்றாரகள் என்ற காரணத்தினாலும், அவர்களுடைய இந்தக் கடிதத்தை இந்தியப் பிரதமருக்கு தான் அனுப்பி வைப்பதாக அந்தக் கடித்துடன் இணைத்து அனுப்பியுள்ள தனது கடிதத்தில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார்.
இதேவேளை பிரேமானந்தா ஆஸ்ரம வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரி வடமாகாண முதலமைச்சர் இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாக இந்திய ஊடகங்களில் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படும் தகவல்களை முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அலுவலக வட்டாரங்கள் மறுத்திருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.(ந-த்)
