முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய றம்புக்வெல உட்பட மூன்று பேரை மே மாதம் 20 ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையில் நீதிமன்றம் இன்று இந்த அழைப்பாணையை விடுத்துள்ளது.
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்துக்கு 9 இலட்சத்தி 90 ஆயிரம் ரூபா பெறுமதியான குழாய்கள் கொள்வனவு செய்தமை தொடர்பாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேற்படி கொள்வனவு காரணமாக ருபாவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு நஸ்டம் ஏற்பட்டுள்ளது. இதில் ஊழல் குற்றங்கள் நிகழ்ந்திருப்பதாக ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
முன்னாள் ஊடகத்துறை அமைச்சரை தவிர இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் விமல் ரூபசிங்க அதன் பணிப்பாளர் நாயகம் சந்திரபால லியனகே ஆகியோரையும் மே மாதம் 20 திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
