சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை மிக விரைவில்- அமைச்சர் கரு ஜயசூரிய உறுதி

சாய்ந்தமருதுவுக்கு தனியான உள்ளுராட்சி சபையை மிக விரைவில் பெற்றுக் கொடுப்பதாக புத்தசாசன, அரசாங்க நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் கரு ஜயசூரிய, அவரது அமைச்சில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் புதன்கிழமை (22) பிற்பகல் தம்மைச் சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், பள்ளிவாசல் பரிபாலன சபை உறுப்பினர்கள் அடங்கிய பிரதிநிதிகள் குழுவினரிடம் உறுதியளித்தார்.

முன்னதாக புதன்கிழமை முற்பகல் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சில் அமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்தித்து சாய்ந்தமருதுவுக்கான தனியான உள்ளுராட்சி சபை தொடர்பில் பிரஸ்தாபக் குழுவினர் கலந்துரையாடிய பின்னர் அமைச்சர் கரு ஜயசூரியவுடனான சந்திப்பு பிற்பகல் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

9 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவையும், 17 கிராம அலுவலர்கள் பிரிவுகளையும் உள்ளடக்கிய சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளுராட்சி சபை ஒன்றை வழங்குவதற்கான நியாயங்களை அமைச்சர் ஹக்கீம், அமைச்சர் கரு ஜயசூரியவிடம் விளக்கிக் கூறினார். 

1987ஆம் ஆண்டுக்கு முன்னர் 18ஆம் நூற்றாண்டு காலப் பகுதியிலிருந்தே சாய்ந்தமருது தனித்தியங்கியதாகவும் அதற்கான வர்த்தமானி பிரகடனம் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் பின்னர் நிலைமை மாற்றமடைந்து கல்முனையின் கீழ் கொண்டுவரப்பட்டதாகவும், தற்பொழுது சாய்ந்தமருது கல்முனை மாநகர சபையின் கீழ் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.

அமைச்சர் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர் ஹஸனலி, பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசிம், சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் பரிபாலன குழுத் தலைவர் வை.எம்.ஹனீபா ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் அமைச்சர் கரு ஜயசூரியவிடம் சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி அமைப்பு பற்றி தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

தம்மிடம் முன்வைக்கப்பட்ட சாய்ந்தமருது பிரதேச சபைக்கான வேண்டுகோளை மிகவும் கவனமாகவும், உன்னிப்பாகவும் செவிமடுத்த அமைச்சர் கரு ஜயசூரிய, இந்தச் சந்திப்புக்கு நேரத்தை ஒதுக்கீத் தருமாறு செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில் அமைச்சர் ஹக்கீம் தம்மிடம் கேட்டிருந்ததாகக் கூறியதோடு, தாம் முன்னர் அமைச்சராக இருந்த 2007, 2008ஆம் காலப்பகுதியிலும் இதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தாகவும், உரிய முன்னேற்பாடுகளை துரிதமாக மேற்கொண்ட பின்னர் மிக விரைவில் சாய்ந்தமருது தனியான உள்ளுராட்சி சபையாக பிரகடனப்படுத்தப்படுமென்றும் உறுதியளித்தார். 

இச்சந்திப்பில் அமைச்சர் ஹக்கீம் தலைமையில் இராஜாங்க அமைச்சர் ஹஸனலி, பிரதியமைச்சர் எம்.எஸ்.தௌபீக், பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசிம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர், கல்முனை மாநகர சபை பிரதி மேயர் ஏ.எல்.அப்துல் மஜீத் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் சிலர், புத்தசாசன, அரசாங்க நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.தடல்லகே, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் பரிபாலன குழுத் தலைவர் வை.எம்.ஹனீபா, அதன் செயலாளர் எம்.ஐ.ஏ.மஜீத் உட்பட பள்ளவாசல் பரிபாலன சபை உறுப்பினர்கள், முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டப் பொருளாளர் ஏ.சீ.எகியாகான் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -