முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக் கவசங்கள் இன்று 2 ஆம் திகதி முதல் முற்றாகத் தடைசெய்யப்பட உள்ளது என பொது ஒழுங்குகள் அமைச்சர் ஜோன் அமரதுங்க ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
அதன்படி ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி முதல் மோட்டார் சைக்கிளை செலுத்துவோரோ அல்லது பின்னால் அமர்ந்து செல்பவரோ முகத்தை முழுமையாகமறைக்கும் தலைக்கவசத்தை அணிந்து பயணித்தால் அவர்களுக்கு எதிராக உடன் தண்டப் பண பத்திரம் பொலிஸாரினால் வழங்கப்படும் என கூறப்பட்டது.
இந்நிலையில் இச்சட்டத்தை எதிர்வரும் மே மாதம் முதல் அமுல் படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் வகன சட்டத்தின் 158 ஆவது அத்தியாயத்தின் 2 ஆவது மற்றும் மூன்றாவது உப பிரிவுகளின் கீழும் 1991 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் திகதி வெளியிடப்பட்ட 644/ 26 ஆம் இலக்க அரசின் விஷேட வர்த்தமானி அறிவித்தலின் கீழும் 2015 ஆம் ஆண்டின் தண்டப்பண அதிகரிப்பு சட்டத்தின் கீழும் இந் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எனினும் சாதரணமாக பயன்படுத்தப்படும் தரமான தலைக் கவசங்களில் முன் பக்கமாக வைசர் எனப்படும் திறையினை பயன்படுத்த தடை இல்லை. அப்படி வைசர் திரையை பயன்படுத்துவதானால் அது பல் வர்ணங்களைக் கொன்டதாக இருக்க முடியாது என்பதையும் சட்டம் குறிப்பிடுவதுடன் முகம் தெளிவாக தெரியும் படி இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றது.
1983 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட 245 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. அதில் மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்களை 25 மீற்றர்களுக்கு அப்பால் இருந்தே தெளிவாக அவதானிக்க கூடியதாக தலைக்கவசங்கள் அமைய வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
