மக்கள் பாசறை தயாரித்த ஆர்.கேவின் 'என்வழி தனி வழி' படத்தின் 25வது நாள் விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் திரையுலகினர் பலரும் கலந்து கொண்டனர்.
விழாவில் நடிகர் ராதாரவி பேசும்போது;
ஆர்.கேவை நான் பல ஆண்டுகளாகப் பார்த்து வருகிறேன். அவரது வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. இவர் ஒரு நல்ல தொழிலாளி, நல்ல நிர்வாகியும் கூட.
இந்த விழாவில் ஒரு இயக்குனர் உங்களது இந்த தலைமுடி கெட்அப்-ஹேர் ஸ்டைல் நல்லா இருக்கு. என் அடுத்த படத்தில் பயன்படுத்திக்கிறேன் என்றார். மயிருக்கு உள்ள மரியாதை மனுஷனுக்கு இல்லை.
நான் சினிமாவைத் தவிர வேறு எதுவும் தெரியாதவன். எனக்கு நடிப்பது தவிர தெரியாது. கேமரா முன்னால் மட்டும்தான் நடிக்கத் தெரிந்தவன். ஆர்.கே தேர்ந்தெடுக்கிற கதைகளைப் பார்த்து எங்கே இப்படிப்பட்ட கதையைப் பிடிக்கிறார் என்று ஆச்சரியப்படுவேன்.
'என் வழி தனி வழி' படத்தில் அவர் முதல் போட்ட தயாரிப்பாளராக இருந்தாலும் டைரக்டர் சொன்னபடிதான் கேட்டார். அவரிடம் ஆர்.கே எவ்வளவு திட்டு வாங்கினார் தெரியுமா? ஒரு உதவியாளர் போல வேலை பார்த்தார்.
சினிமாவில் அவனவன் வேலையை அவனவன் செய்யவேண்டும். அடுத்தவன் வேலையைச் செய்யக் கூடாது. அதுபோல டைரக்டர் வேலையை அவர் செய்கிறார் என்று பொறுமையாக இருந்தார் ஆர்.கே. அவரிடம் தான் முதலாளி என்கிற திமிர் இல்லை. எதிலும் தலையிடவில்லை. சினிமா மீது அவருக்கு அவ்வளவு காதல். அது அவரை இன்னும் உயர்த்தும். இவ்வாறு ராதாரவி பேசினார்.
இவ்விழாவில் நாயகன் ஆர்/கே, இயக்குநர் ஷாஜி கைலாஷ், கதை வசனகர்த்தா பிரபாகர், கலை இயக்குநர்கள் போபன், அங்கமுத்து சண்முகம், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர்கள் மதன்பாப், தலைவாசல் விஜய், 'வழக்கு எண்' முத்துராமன், ரமேஷ் கண்ணா, தயாரிப்பாளர் ஞானவேல், இயக்குநர்கள் சுசீந்திரன், திரு, செந்தில்நாதன், பாடலாசிரியர் இளைய கம்பன், பேச்சாளர் விழுப்புரம் செல்வராஜ், நடிகைகள் நீது சந்திரா, கோமல் சர்மா, ஸ்ரீரஞ்சனி ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.
