எம்.எம்.ஏ.ஸமட்-
அரசியலமைப்பின் பிரகாரம் தமிழ் மொழிப் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைக்கமைய கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட செயலகங்களில் அரசகரும மொழியான தமிழ் மொழி மூலமாக பொது மக்கள் சேவைகைளப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தி தனிநபர் அவசர பிரேரணையொன்றை கிழக்கு மாகாண சபையில் நாளை (31)ல் முன்வைக்கவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் தெரிவித்தார்
இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது
கிழக்கு மாகாணம் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் மாகாணமாகும். இம்மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தமிழ், மற்றும் முஸ்லிம் மக்களே அதிகம் வாழ்கின்றனர். இருப்பினும், அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்களாக தமிழ் மொழி பேசும் செயலாளர்கள் அத்துடன் இம்மாவட்ட செயலகங்களில் அரச கரும மொழியான தமிழ் மொழி உரிய முறையில் அமுல் படுத்தப்படாததனால் இம்மாவட்டங்களில் வாழும் தமிழ் பேசும் மக்கள் தமது சேவைகளை தமிழ் மொழியில் பெற்றுக்கொள்வதில் பல சிரமங்களடைகின்றனர். இலங்கையின் அரசியலமைப்புக்கு ஏற்ப அரச அலுவலகங்களில் அரச கரும மொழியான தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்த்து வழங்கப்படுவது அவசியமாகும்.
இருப்பினும், இம்மாவட்டங்களின் மாவட்ட செயலகங்களில் தமிழ் மொழியில் தமிழ் பேசும் மக்கள் சேவையைப் பெற்றுவருதில் மிக நீண்டகாலமாக அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
தமிழ் பேசும் மக்கள் தங்களது மொழி உரிமையைப் பெற்று வாழ்வதற்கும், தங்களது மொழியில் அரச சேவையை பெறுவதற்கும் உரித்துடையவர்கள் என்பதனால, கிழக்கு மாகாண சபையின் ஆட்சியின் கீழ் உள்ள அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள செயலகங்களில் தமிழ் மொழியில் இம்மாவட்ட மக்கள் சேவையை பெற்றுக் கொள்வதற்கு வழி வகுப்பது இம்மாகாண சபையின் தார்மீகம்.
இதன் பிரகாரம், அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட செயலகங்களில் அரசகரும மொழிச் செயற்பாட்டை உறுதிப்படுத்தி, இம்மாவட்டங்களில் வாழும் தமிழ் பேசும் மக்கள் தங்களுக்கான சேவையினை தமிம் மொழியில் பெற்றுக்கொள்வதற்கு இச்சபையினூடாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு இந்தத் தனி நபர் பிரேரனையை நாளை 31ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை அமர்வின் போது முன் வைக்கவுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் தெரிவித்தார்
.jpg)