நாங்கள் முஸ்லிம்களை துன்புறுத்தினோம் என முடிந்தால் நிரூபித்து காட்டுங்கள் பொதுபல சேனா அமைப்பு சவால் விடுத்துள்ளது. கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவ்வமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த அமைப்பு முஸ்லிம் பள்ளிவாயல்களை தாக்கியது, முஸ்லிம் மக்களை துன்புறுத்தியது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்ட போது குறிப்பிட்டிருந்தார்.
மைத்திரிபால சிறிசேன தான் ஒரு ஜனாதிபதி என்பதை அடிக்கடி மறந்து விடுகின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளதுடன், அவர் சிலருடன் இணைந்துகொண்டு எங்கள் அமைப்பு மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முப்படைகளும், குற்றப்புலனாய்வு பிரிவும், பொலிஸாரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையில் உள்ளது.
தயவு செய்து அவரிடமுள்ள நிறைவேற்று அதிகாரத்தை வைத்து பொது பல சேனா அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை முஸ்லிம் மக்களுக்கு எதிராக கை தூக்கியிருக்கின்றது.
முஸ்லிம் வியாபார நிலையத்திற்கு, முஸ்லிம் பள்ளிவாயல்களுக்கு, முஸ்லிம் மக்களுக்கு குறைந்த பட்சம் ஒரு கல்லிலாவது தாக்குதல் மேற்கொண்டது என நிரூபித்து காட்டுமாறு நாங்கள் ஜனாதிபதிக்கு ஒரு சவால் விடுகிறோம்.
தயவு செய்து சாட்சியமில்லாமல் செல்லும் இடமெல்லாம் எங்கள் அமைப்புக்கெதிராக குறை கூற வேண்டாம் என கோரியுள்ளதுடன்,
இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டோம் என சாட்சிகளுடன் ஒப்புவித்தீர்கள் என்றால் அடுத்த ஒரு மணி நேரத்தில் இந்த அமைப்பினை கலைத்துவிடுகிறோம்.
அவ்வாறு சாட்சிகளுடன் நிரூபிக்கவில்லை என்றால் ஊர் ஊராக சென்று வீணே கதை பேசும் சிறிசேன விகாரைக்கு வந்து துறவரம் பூணவேண்டும். ஏன் என்றால் தற்பொழுது இவ்வாறெல்லாம் பேசுவது பொலன்னறுவை சிறிசேன அல்ல, நாட்டின் ஜனாதிபதி என்பதை நினைவில் கொள்ளட்டும்.
நாட்டின் ஜனாதிபதி வீணாய் போனவர்களுடன் இணைந்து கொண்டு அந்த திருட்டு கூட்டத்தை மேலும் போஷிப்பதற்கு சிறிசேனவிற்குள்ள அதிகாரம் என்ன?
அவர் நிராகரிப்பதற்கு பொதுபல சேனா என்ன அவரால் உருவாக்கப்பட்டதா? அல்லது எல்லாம் தெரிந்து கொண்டா அவர் பேசுகின்றார் என பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கேள்வியெழுப்பியுள்ளார்.
சிங்கள பௌத்தர்களை குறித்து யாரும் பேச மாட்டார்கள். பாராளுமன்றத்திற்கு சென்ற ஜாதிக ஹெல உறுமய கூட கதைப்பதில்லை.
ஊழல் மோசடிகள் குறித்து விசாரிப்பதற்காக ஹெல உறுமயவுக்கு வாக்களிக்கவில்லை. அத்துரலிய ரத்தின தேரர் பிவித்துரு ஹெடக்கை உருவாக்குவதற்காக பாராளுமன்றத்திற்கு அனுப்பபடவில்லை.
நேர்மையான அரசாங்கமொன்றை அமைப்பதற்காகவே அவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம். அவர்கள் தங்களுக்கு வழங்கிய பணிகளை சிறப்புற செய்யாமல் எங்கோ போகும் ஓணானை தூக்கி பையில் போட்டு கொள்ள அனுப்பவில்லையே என பொது பல சேனா அமைப்பின் பொது செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நாட்டிலுள்ள தனிப்பட்ட மதமொன்று அனுபவிக்க வேண்டியது இவ்வாறானதொரு தலையெழுத்தை தான்.
இந்த முட்டாள் கழுதைகளுக்கு தனது மதம் குறித்து மாத்திரமே பேச முடியாது. எல்லோரும் சிறுபான்மையினர் குறித்து மாத்திரமே பேசுகின்றனர். எல்லோரின் மனங்களும் சிறுபான்மையினரின் அவல நிலை குறித்தே இரங்குகின்றன.
பெரும்பான்மையினருக்கு இடி விழுந்தால் கூட யாரும் அதை பற்றி கணக்கெடுப்பதில்லை. அசமந்த போக்கில் விட்டு விடுகின்றனர். நீங்கள் பொலன்னறுவை சிறிசேன அல்ல, சுகாதார அமைச்சர் சிறிசேனவும் இல்லை.
தாங்கள் இந்த நாட்டின் ஜனாதிபதி என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள் என இறுதியும், அறுதியுமாக கேட்டு கொள்கின்றேன் என பொது பல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரர் கேட்டு கொண்டுள்ளார்.

