இலங்கையின் முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு முன்பிருந்த பெரும் மரியாதையினால் சமூகம் தலைநிமிர்ந்து வாழ்ந்தது. ஆனால் இன்றைய தலைமைகள் பதவி ஆசையில் மூழ்கிப்போயிருப்பதும் மோசமான அரசியல் செயற்பாடுகளினாலும் எமது சமூகத்திற்கு பெரும் இழுக்கு ஏற்படுத்துவதாக மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தினார்.
எனவே நாம் புதியதொரு அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கி சமூக எழுச்சிக்கு வித்திட அனைவரும் முன்வர வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.
மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பிரிமிளஸ் கொஸ்தா மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் விக்னேஸ் ஆகியோரின் ஏற்பாட்டில் ஜிந்துபிட்டியில் நேற்றைய தினம் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்காண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் முஸ்லிம்களுக்கு நீண்ட வரலாறு இருக்கின்றது. 2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் வரலாறு நெடுகிலும் எமது சமூகம் தலைநிமிர்ந்து வாழ்ந்துள்ளது. ஏனெனில் அப்போதைய தலைவர்களான சித்திலெப்பை,துருக்கித் தொப்பி அப்துல் காதிர், அப்துல் அஸீஸ், ரீ.பி.ஜாயா, வாப்பிச்சி மரிக்கார் போன்ற தலைவர்கள் நாட்டுக்கு சேவையாற்றி சமூகத்திற்கு நற்பெயரை பெற்றுத்தந்தனர். பிற்காலத்தில் வந்த டாக்டர் கலீல், இஸ்மாயீல், பாக்கிர் மாக்கார், பதியுதீன் மஹ்மூத், ஏ.சி.எஸ்.ஹமீட் போன்றோரும் இவர்கள் வழி தொடர்ந்து சமூகத்தை பாதுகாத்தனர்.
இவர்கள் ஏனைய மதத்தவர்களாலும் போற்றப்பட்டனர். அத்தோடு நாட்டின் அபிவிருத்திக்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்காவும் பாடுபட்டனர். இதனால் எமது சமூகம் தனித்துவமாக நாட்டில் மிளிர்ந்தது.
பின்னர் எமது சமூகத்திற்கு மத்தியில் இன ரீதியிலான கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. மத வாத உணர்வலைகள் எமது சமூகத்திற்குள்ளும் துரதிஷ்டவசமாக ஏற்பட்டது. இதன்பின்னர் எமது சமூகம் மாற்று மதத்தவர்களால் மாற்றுக்கண்கொண்டு பார்க்கும் நிலை ஏற்பட்டது. ஆனாலும் சில காரணங்களை வைத்து பார்க்கும்போது வடக்கு கிழக்கு பகுதிக்கு தனிக்கட்சியின் அவசியம் இருந்தாலும் ஏனைய பகுதிகளுக்கு அவசியமில்லாமலேயே இருந்தது.
முஸ்லிம்களில் உயர் மட்டத்தினர் அதாவது அரச சேவையாளர்கள், பெரும் வர்த்தகர்கள், அரசியல்வாதிகள் ஆன்மீகத் தலைவர்கள் என்போரின் செயற்பாடுகளை மையமாகக்கொண்டு எமது சமூகம் மதிக்கப்பிடப்படுகின்றது. அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் அதிகம் இருக்கக்கூடியவர்கள். இவர்களின் செயற்பாடுகளை மக்கள் கூர்ந்து கவணிக்கின்றனர்.
2000 ஆம் ஆண்டுக்கு பின்னர் பாராளுமன்றத்திலும் ஏனைய அரச அவைகளிலும் அங்கம் வகித்த முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒரு கட்சியில் நிலையாக இருந்துள்ளனரா என பார்த்தால் ஓரிருவரை தவிர ஏனையோர் கட்சி மாறுவதை ஒரு தொழிலாகவே கொண்டுள்ளனர்.
ஒரு கட்சியில் கொள்கையின் அடிப்படையிலேயே இணையவேண்டும். ஆனால் முஸ்லிம் தலைவர்கள் அடிக்கடி கட்சி தாவி கொள்கையற்றவர்கள் என்பதனை நிரூபிக்கின்றனர்.
அத்தோடு 2000 ஆம் ஆண்டுக்கு பின்னர் பல முஸ்லிம் கட்சிகளும் முளைத்துள்ளன. இவற்றாலும் சமூகத்திற்கு எவ்வித பிரயோசனமும் இல்லாமல் இருக்கின்றது. மாறிவரும் ஒவ்வொரு அரசாங்கத்திலும் இவர்கள் அங்கம் வகிக்கின்றனர். ஆனாலும் பல பகுதிகளில் முஸ்லிம் சமூகம் எவ்வித அடிப்படை வசதிகளுமற்றநிலையில் வாழ்கின்றனர். இதன் மூலம் இவர்கள் மூலம் கிடைக்கும் பயன் பற்றி மக்கள் இலகுவாக அறிந்துகொள்ள முடியும்.
கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ளது. இதற்காக முஸ்லிம் காங்கிரஸுக்குள் தலையனை சண்டை இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. முஸ்லிம் காங்கிரஸ் காரர்கள் அண்மையில் வெறும் 11 நாட்கள் மாத்திரமே அமைச்சுப்பதவி இல்லாமல் இருந்தனர்.
அத்தோடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் 15 நாட்கள் வரையில் அமைச்சு பொறுப்புகள் இல்லாமல் இருந்தனர். இவர்கள் வெற்றிபெரும் அணியுடன் இணைந்துகொண்டனரே தவிர ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டுவதற்கு எவ்விதமான பங்களிப்பும் செய்யவில்லை.
அவர்கள் மீண்டும் அமைச்சர்களாகிவிட்டனர். இவர்கள் இனவாதிகளின் செயற்பாட்டை கண்டித்தே முன்னைய அரசிலிருந்து வெளியேறிதாக கூறுகின்றனர். ஆனால் 2012 ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்டபோது அதற்கு பின்னர் 3 வருடங்கள் மஹிந்த அரசுக்கு ஆதரவளித்து வந்ததை மக்கள் இலகுவில் மறந்துவிட மாட்டார்கள்.
இது இப்படியிருக்க புதிய தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப்பதவியை பெற்றுக்கொண்ட பைஸர் முஸ்தபா பதவியை இராஜினாமா செய்துகொண்டுள்ளார். எனினும் அவர் பதவியில் அதிகாரம் இல்லை என்பதனாலேயே இராஜினாமா செய்துள்ளார்.
இவர் வெறும் ஐந்து நாட்களுக்கு முன்னரே முன்னைய அரசிலிருந்து வெளியேறி சமூகத்திடமிருந்து புள்ளிகளை பெற்றுக்கொள்ள முயற்சித்தவர். இவரால் மைத்திரியின் வெற்றிக்கு எந்தவொரு பங்களிப்பும் கிடைக்கவில்லை. கண்டியில் மக்களின் வாக்குகளை பெற்று வெற்றிபெற்ற இவர் கொழும்பில் கூடாரமிட்டு அரசியல் நடத்துகின்றார். இவர்போன்ற அரசியல்வாதிகளை மக்கள் தற்போது புறக்கணிக்க தொடங்கிவிட்டனர்.
தற்போதைய முஸ்லிம் சமூகம் அரசியலில் விழிப்படைந்துவிட்டது. இதற்கு சிறந்த உதாரணம் கடந்த ஜனாதிபதி தேர்தலாகும். இதன்போது சர்வாதிகார குடும்ப ஆட்சியாளனை மக்கள் விரட்டியடித்தனர். இனி அவர்களுக்கு கூஜா தூக்கிய முஸ்லிம் அரசியல்வாதிகளையும் விரட்டியடிக்க மக்களுக்கு நாம் சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை.
எனவே முஸ்லிம் அரசியலில் மாற்றம் ஏற்படவேண்டும். பதவிகளுக்காக அரசியல் செய்வதை நிறுத்திவிட்டு மக்களுக்காக அரசியல் செய்ய வேண்டும். அப்போதுதான் எமது சமூகத்திற்கு விடிவு கிடைக்கும்.
