தாய் நாட்டில் சகல கட்சிகளையும்,சகல மக்களையும் ஒன்றினைத்து நல்லாட்சியின் தன்மைகளை கட்டியெழுப்பி,நாட்டு மக்களின் நம்பிக்கையை வென்றிட இந்த அரசாங்கம் முழு முயற்சிகளை முன்னெடுத்தல் காலத்தின் கட்டாயத் தேவையாகும்.
நாட்டு மக்களின் இதயங்களில் பாகுபாடு,கசப்புணர்வு,காழ்ப்புணர்வு இன்னும் குடி கொண்டிருக்கையில் சுதந்திர தினங்கள் வெற்றுக் கோஷங்களாக மாத்திரம் அமைந்து விடக் கூடாது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நாட்டின் ஒருமைப்பாடு,தேசிய நல்லிணக்கம் குறித்த ஆழமான புரிதல்களை கொண்டிருக்கிற ஒரு தலைவராகவே செயற்படுகிறார். எனவே,இவரது ஆட்சிக்காலம் சிறுபான்மை மக்களுக்கு பொற்காலமாக அமைய வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.
கட்சி அரசியலுக்கு அப்பால் நாங்கள் எல்லோரும் இலங்கையர் எனும் எண்ணக் கருவை மூலதனமாக்கி நாட்டுக்காய் உழைக்க வேண்டும். இதுவே நாட்டுக்கு நிலை பேறானதும் ஆரோக்கியமானதுமான அரசியல் எதிர்காலத்தை தோற்றுவிக்குமென நான் நம்புகிறேன்.
எனவே,சுதந்திரத்தின் பலாபலன்கள் குறித்து முஸ்லிம்கள் நன்கு சிந்திக்க வேண்டும். முஸ்லிம்கள் அரசியலில் ஒற்றுமையான கட்டமைப்பை ஏற்படுத்துவதுடன் -எதிர்கால சந்ததியினருக்கு முன்மாதிரியான முறையில் தமது நகர்வுகளை முன்னெடுத்தல் அவசியமாகும்.
தேசிய நல்லிணக்கம்,இனங்களுக்கிடையிலான ஒருமைப்பாடு அருகிவரும் இந்த நாட்டில் முஸ்லிம்களாகிய நாம் குரோதங்கள்,வேற்றுமைகளை களைந்து பல்லின மக்களுடன் ஒற்றுமையாக வாழ்வது எமக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் ஆரோக்கியமானதாகும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
ஊடகப் பிரிவு
அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா
இன நல்லுறவு தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவர்.
