அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களை கண்டறிவதற்காக சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரீ.ஹசன் அலி வைத்தியசாலைக்கு நேற்று 23ம் திகதி திங்கட்கிழமை விஜயமொன்றை மேற்கொண்டார்.
இவ்விஜயத்தின் போது வைத்தியசாலைக்கான உபகரணங்களையும் அமைச்சர் வைத்தியசாலை அதிகாரிகளிடம் கையளித்து வைத்தார். அத்துடன் சுகாதார இராஜாங்க அமைச்சராக எம்.ரீ.ஹசன் அலி நியமனம் பெற்றதை வாழ்த்தி வரவேற்று வைத்தியசாலை அபிவிருத்திச் சபையினாரால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் சாய்ந்தமருது வைத்தியசாலையினை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தக் கோரி அபிவிருத்திச் சபையினாரால் அமைச்சருக்கு மகஜரும் கையளித்து வைக்கப்பட்டது.
இதன்போது அமைச்சர் ஹசன் அலி அரசின் 100 நாள் திட்டத்தின் கீழ் இவ்வைத்தியசாலையில் நிழவும் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும். அத்துடன் வைத்தியசாலை அபிவிருத்திச் சபையின் கோரிக்கைக்கு இணங்க சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையினை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்த சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வு சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் என்.ஆரிப் தலைமையில் இடம்பெற்றது. இதில் கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தன், கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன், கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் பீ.ஏ.பழீல் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், வைத்தியசாலை அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

.jpg)
.jpg)
.jpg)