முப்பது வருடப் போராட்டம் தோல்வியடைந்த நிலையிலும் தலைநிமிர்ந்து நிற்கும் தமிழர் சமுதாயம் சோரம் போகாது தலைநிமிர்ந்து நின்று அரசியலில் கோலோச்சிக் கொண்டிருப்பது முன்னுதாரணமாகும் என கல்முனை மாநகர பிரதி மேயர் ஏ.எல்.அப்துல் மஜீத் கூறினார்.
சாய்ந்தமருது அல் – ஜலால் வித்தியாலய ஓ.எல் தின விழாவில் கௌரவ அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அதிபர் எஸ். நபார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில் :-
ஜனாதிபதித் தேர்தலொன்றை எதிர்நோக்கியிருக்கும் கால கட்டம் இதுவாகும். கொழும்பில் நேரத்திற்கு நேரம் அரசியல் தீர்மானங்கள் மாற்றமடைந்து வருகின்றது.
இந்த நிலையில் மிக நெருக்கடியான காலகட்டத்தில் நாமிருந்து கொண்டிருக்கின்றோம். முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டுமல்ல சிறுபான்மை சமூகங்களுக்கே மிக நெருக்கடியான காலகட்டம் இதுவாகும்.
இலங்கை அரசியல் வரலாற்றில் 1956இற்குப் பிறகு சிறுபான்மை சமூகம் எப்படி இத்தேர்தலில் தீர்மானமெடுப்பது என்ற தடுமாற்ற நிலையிலுள்ளது.
பெருமையும் வரலாறும்
முஸ்லிம் காங்கிரஸுக்கு ஒரு பெருமையிருக்கின்றது. வரலாறுமுள்ளது. அந்த வரலாற்றுத் தொடரை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும்.
1988 ஆம் ஆண்டிலிருந்து 1996 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற மூன்று ஜனாதிபதி தேர்தல்களில் ஆட்சி அதிகாரத்தைத் தீர்மானிக்கும் ஒரு கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் திகழ்ந்துள்ளமை வரலாறாகும்.
ஆனால் இன்றைய நிலை மிகவும் நெருக்கடியானதாகும். அரசுடனிருந்து பங்காளியாக விருந்து யுத்தத்தை முன் கொண்டு செல்வதற்குப் பலத்தைக் கொடுத்திருந்த ஜாதிக ஹெல உறுமய கட்சி 34 அம்சக் கோர்க்கைகளை முன்வைத்து அரசுக்கு நிபந்தனை விதித்ததால் அதை ஏற்க அரசு மறுத்ததன் விளைவாக அக்கட்சி இன்று எதிரணிக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளது.
அக்கட்சி முன்வைத்த 34 அம்சக் கோரிக்கைகள் என்ன? சிறுபான்மை சமூகங்களுக்கு உகந்ததா ? சிறுபான்மை சமூகங்களை நெருக்கடி நிலைக்குள் தள்ளக்கூடியதா? சிறுபான்மை சமூகத்தின் அரசியல் முதுகெலும்பை உடைத்து எறியக்கூடியதா? என்பது பற்றியெல்லாம் ஆழமாக ஆராய வேண்டியுள்ளது.
நம் தலைவர்
நமது பெருந்தலைவர் மர்ஹும் அஷ்ரப் ஜனாதிபதி ஆட்சி முறையை ஏற்றுக்கொண்டார்.
ஆனால் இன்று ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்கப் போவதாக கூறி மைத்திரி அணியினர் வந்துள்ளனர். பாராளுமன்றத்தேர்தல் தொகுதி முறையை உள்ளடக்கியதாக மாற்றப்போகிறோமென்றும் கூறுகின்றனர்.
அப்படியானால் தேர்தலில் ஐந்தே ஐந்து ஆசனங்கள்தான் முஸ்லிம்களுக்கு கிடைக்கும். இவ்வாறு நம் சமூகத்தின் அரசியல் முதுகெலும்பு உடைத்தெறியப்படுமென்பதையும் நாம் கவனத்திற்கொள்ள வேண்டும். ஆட்சியினர் முஸ்லிம் காங்கிரஸுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கும் நிலைமையும் இன்னொரு புறமுள்ளது.
இப்படியான ஒரு கால கட்டத்தில் முஸ்லிம்களுடைய அரசியல் உரிமைகளை பெற்றெடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம் காங்கிரஸ் இறங்கியுள்ளது. அது இன்னும் முற்றுப்பெறவில்லை.
பேச்சுவார்த்தை
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது முஸ்லிம்களுடைய கோரிக்கைகள் கவனத்திலெடுக்கப்படுமென்றே சொல்லப்பட்டிருக்கின்றது.
இங்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் நினைத்தால் ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக வரலாம். அந்தளவுக்கு நிலைமை போயுள்ளது.
உரிமைபற்றி பேசிய …
முஸ்லிம் சமுதாயத்தின் உரிமை பற்றி பேசிய ரிஷாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கேவலம் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக இன்று சோரம் போயிருக்கின்றது. போதாக்குறைக்கு பிரதி அமைச்சர் பதவியும் வேண்டுமாம். இதுதான் நம்சமூகத்தின் இன்றைய நிலையாகும்.
இன்று முப்பது வருடப் போராட்டம் தோல்வியடைந்த நிலையிலும் தலைநிமிர்ந்து நிற்கும் தமிழர் சமுதாயம் முன்னுதாரணமாகவுள்ளது.
24 மணித்தியாலங்களுக்குள் தீர்மானமெடுத்து நடைமுறைப்படுத்தக் கூடிய ஒரு சமுதாயமாக தமிழர் சமுதாயமுள்ளதுடன் அரசியலில் கோலோச்சிக் கொண்டுமிருக்கின்றது.
அங்கு தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்திகள் நடக்கவில்லையா? அபிவிருத்திக்காக அரசுடனிருக்க வேண்டிய தேவையில்லை.
ஆனால் அந்த சமுதாயத்தைப்போன்று நமது முஸ்லிம் சமுதாயம் பண்பட்ட சமுதாயமல்ல.
பண்பட்ட சமுதாயம்
இலங்கை அரசியலில் பண்பட்ட சமுதாயமாக தமிழ் சமுதாயம் திகழ்கின்றது. ஒற்றுமை மிகுந்த சமுதாயமது. இந்த நாட்டில் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் ஒரு சமுதாயமாக இருந்தும் கூட ஆட்சியில் பங்கு கொள்ளக்கூடாது என்ற உறுதிப்பாட்டில் அச்சமுதாயமுள்ளது.
இப்படி ஒரு சமுதாயம் வட–கிழக்கிலிருக்கும் போதுதான் நாம் வட–கிழக்கில் சுய நிர்ணயம் பற்றி பேசுகின்றோம்.
உரிமை
வரப்போகும் தேர்தல் எதுவாக இருந்தாலும் சரி முஸ்லிம் சமுதாயத்தின் உரிமைகள் பற்றிப் பேசும் அரசியலாகவே அக்களம் அமையும்.
இன்று பௌத்த சிங்கள பேரினவாத சக்திகள் இந்த அரசைக் கைப்பற்றவும் ஆட்கொள்ளவும் முன்னிற்கும் வேளையில் சிங்கள பௌத்த அரசொன்றை உருவாக்குவதற்கு நாம் துணை போவதா? அந்த ஆட்சியில் நாமும் பங்குதாரர்களாக இருப்பதா என்ற கேள்வியும் இன்றுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைவராக வந்த பிறகு இன்றைய கால கட்டம் மிகப்பெரிய சோதனையாக அமைந்துள்ளது.
இருப்பினும் எடுத்தேன் - கவிழ்த்தேன் என்று தீர்மானிக்க முடியாது. சிறுபான்மை சமுதாயம் உணர்ச்சிப்பிளம்பாக மாறி விடவும் கூடாது.எனவே ஆற அமர தீர்க்கமானஆய்வுகளை மேற்கொண்டே முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முடிவெடுக்கும். அந்த தீர்மானம் முஸ்லிம்கள் தலைநிமிர்ந்து வாழக்கூடிய தீர்மானமாகவே அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

0 comments :
Post a Comment