![]() |
| சுசில் பிரேமஜயந்த |
பொது எதிரணியின் ஒப்பந்த கைச்சாத்து அடிப்படை தகைமை அற்றவை. கட்சி யாப்போ அரசியல் கொள்கையோ இன்றியே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. மேலும் பரஸ்பர விரோத கருத்துக்களையும் வாக்கு வங்கியையும் கொண்டிராத பொது எதிரணியின் வேட்பாளர் மீது நாட்டு மக்கள் ஒரு போதும் நம்பிக்கை கொள்ள போவதில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இம்முறை தேர்தலில் ஏனைய ஜனாதிபதி போலன்றி அதிக விருப்பு வாக்குகளின் வித்தியாசத்தில் மஹிந்த ராஜபக் ஷ வெற்றி பெறுவார். மேலும் மைத்திரிபால சிறிசேன கட்சியை விட்டு நீங்கியமை எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் அவர் கூறினார்.
கொழும்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதான காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்
மக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆரம்பத்தில் சட்ட விரோதம் என குறிப்பிட்டது. தற்போது அந்த நிலைப்பாட்டினை மாற்றி பொது எதிரணி மீது ஆதரவு நல்கியுள்ளது.
ஜே.வி.பி. தனது பாராளுமன்ற மூன்று ஆசனங்களையும் பாதுகாக்கவே பொது எதிரணியுடன் இணைந்துள்ளது. 32 ஆக இருந்த ஆசனம் படிப்படியாக குறைந்து சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளித்த பின்பு அது மூன்றாக குறைவடைந்துள்ளது. இம்முறை அந்த எண்ணிக்கையும் இல்லாமல் போகப்போகிறது. தனது மூன்று ஆசனத்தை தக்க வைக்கவே இந்த முடிவினை எடுத்துள்ளது.
பொது எதிரணியின் ஒப்பந்தம்
எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு தற்போது எந்த கட்சிக்கும் தற்போது உரித்துடையவராக இல்லை. பொது எதிரணியின் ஒப்பந்த கைச்சாத்திட்டுள்ள கட்சிகள் வாக்கு வங்கி அற்ற கட்சிகளாகும். பொது எதிரணி மேற்கொண்ட ஒப்பந்த கைச்சாத்து எந்த அடிப்படை தகைமையும் அற்றவை. பொது வேட்பாளருக்கு கட்சியோ யாப்போ கொள்கையோ இல்லை.
பொது எதிரணி கட்சிகளிடையே பரஸ்பர கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனவே பொது எதிரணியை மக்கள் நம்பப்போவதில்லை.
எனது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி முறைமையை நூறு நாட்களுக்குள் ஒழிப்பதாக கூறினார். ஆனால் ஐ.தே.க. பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க 24 மணி நேரத்திற்குள் ஒழிக்க வேண்டும் என கோருகிறார். நூறு நாட்களுக்குள் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளையே எதிரணியினர் மக்களுக்கு வழங்குகின்றனர்.
அதேபோன்று தேர்தல் முறைமையை மாற்ற வேண்டுமாயின் முழு அரசியலமைப்பையும் மாற்ற வேண்டும். அல்லாவிடின் கருத்து கணிப்பையே நடத்த வேண்டும். ஏனெனில் நூறு நாட்களுக்குள் இவற்றை செய்து முடிக்க இயலாது.
எனவே ஏனைய ஜனாதிபதி தேர்தலை விடவும் இம்முறை அதிகப்படியான விருப்பு வாக்கினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வெற்றி பெறுவது உறுதியாகும்.
ஆகவே பொது எதிரணியின் வாக்குறுதிகள் நியாயமற்றவை.

0 comments :
Post a Comment