ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்-
ஹயாத் ஆலிம் என்றால் கல்குடா முஸ்லிம் பிரதேசத்தில் தெரியாதவர்கள் ஒருவரும் இருக்க மாட்டார்கள் என்றுதான் சொல்ல முடியும். பாலர் வகுப்பு மாணவர்கள் மட்டுமல்ல பெரியோர்களையும் தனது அன்புள்ளத்தினாலும், அமைதிக்கு நியாயமாகப் படுகின்ற புன்னகையாலும் தன்பக்கம் இழுத்து விடுவார் இந்த ஓய்வு பெற்ற எனது மதிப்புக்குறிய ஆசான் ஹயாத் ஆலிம் அவர்கள். இவறுடைய இரண்டு பாதங்களையும் பிறக்கும் போதே ஊனமாக படைத்த இறைவன், ஊனம் என்பது உடம்பில் இல்லை உள்ளத்தில்தான் என்பதற்கு இவர் உலகுக்கே முன்மாதிரியான உதாரணம் என்பதையும் வெளிச்சம் போட்டுக்காட்ட தவரவில்லை.
1937ம் ஆண்டு 5ம் மாதம் 8ம் திகதி ஓட்டமாவடியில் பிறந்த இவர் பிச்சை தம்பி ஹயாத்து முஹமட் என்ற பெயரை வைத்திருந்தாலும் ஹாயத் ஆலிம் என்றே எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படுகின்றார். இறைவன் படைக்கும் போதே இவருடைய இரண்டு கால் பாதங்களையும் ஊனமாக படைத்த இறைவனானவன் படைப்பவனும் நானே உணவளிப்பவனும் நானே என்ற உண்மைத்தத்துவ கோட்பாட்டுக்கு ஒரு படி மேலாக சென்று பல எண்ணிக்கையானோர் ஓட்டமாவடி பிரதேசத்தில் உலக கல்வியையும், மார்க்க கல்வியையும், குர் ஆனையும் கற்று தங்களது வாழ்க்கையை சீரான முறையில் அமைத்துக் கொள்வதற்கு ஒரு வழிகாட்டியாய் 77 வயதிலும் கம்பீரமான முறையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்றால் படைத்தவனும் அவனே, காப்பவனும் அவனே, உணவளிப்பவனும் அவனே என்றே அல்லாஹ்வின் உண்மை கோட்பாடானது இவர் மூலமாக எமக்கோர் சிறந்த உதாரணமாக சொல்லப்படுகின்றது என்றால் அதை யாராலும் மறுத்துரைக்க முடியாது என்பதுதான் உண்மை.
ஓட்டமாவடியில் உள்ள தனது மகளின் வீட்டில் வசித்து வரும் இவர் மர்ஹும் பாத்தும்மா என்ற பெண்மனியினை திருமணம் முடித்திருந்ததின் பலனால் இரண்டு ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளைக்கும் தந்தைகுறிய இஸ்தானத்தையும் அல்லாஹ் கொடுத்துள்ளான். 1958 – 1965 காலப்பகுதியில் அஸ்ஸஹீத் புஹாரி விதானையாரின் உதவியுடன் காலி கோட்டை பிரதேசத்தில் உள்ள பஃஜத்துல் இப்றாஹீமியா மத்ர்ஸாவில் தனது நண்பர்களான மர்ஹும் ஹனீஃபா மெளளவி (ஆசிரியர்), அஹமது லெப்பை மெளளவி ஆகியோருடன் தனது இஸ்லாமிய ஆலிம் பட்டத்தினை பெற்றதன் பிற்பாடு கல்குடா பிரதேசத்தில் அப்போது மிகவும் பிந்தங்கிய கிராமமாக இருந்த காவத்தமுனை கிராமத்துக்கு 1966ம் ஆண்டு காலப்பகுயில் குடியேறி அங்கே முதன்முதலில் ஓலை குடிசையால் பள்ளிவாயலை அமைத்து ஜமாஅத் தொழுகை நடாத்திய பெருமையும் இவரையே சாரும்.
அத்தோடு நின்று விடாமல் ஓட்டமாவடி மக்களின் உதவியுடன் ஓலைகளால் பள்ளிவாயலை இன்னும் விஸ்தரித்து அங்குள்ள பிள்ளைகள் மார்க்க கல்வியை கற்க வேண்டும் என்பதற்காக குர் ஆன் மத்ர்ஸாவையும் தன்னந்தனியாக நின்று ஆரம்பித்து 1969ம் ஆண்டு வரைக்கும் அங்குள்ள பிள்ளைகளுக்கு குர் ஆனை போதித்தார். இவர் அன்று ஓலையால் கட்டிய பள்ளிவாயலே இன்று காவத்தமுனை மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகாமையில் அல்லாஹ்வின் பெரியதோர் மாளிகையாகவும், ஜும்மா பள்ளிவாயலாகவும் காட்சியளிக்கின்றது அல்ஹம்துலில்லாஹ்.
1969ம் ஆண்டுக்கு பிற்பாடு ஓட்டமாவடி பிரதேசத்துக்கு மீண்டும் குடியேறிய இவர் ஓட்டமாவடி ஜும்மா பள்ளிவாயல் மையவாடிக்கு அருகாமையில் இருந்த பழைய காதி நீதிமன்றம் இயக்கிய இடத்தினை திருத்தி அல்- மத்ர்ஸத்துல் முனவ்வரா எனும் மத்ர்ஸாவை ஆரம்பித்து 25 வருடங்களாக பிள்ளைகளுக்கு குர் ஆனை கற்றுகொகொடுத்தார். 80ம் ஆண்டுக்கு பிற்பாடு அவ்விடம் சிறாஜியா அரபுக்கல்லூரிக்கு கொடுக்கப்பட்டதாகவும் ஞாபகப்படுத்திக் கொண்டார். அந்த கால கட்டத்திலேயே ஜம்மியத்துல் உலமா சபையும் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அதற்கு ஹச்சி முகம்மது ஆலிம் தலைவராக நியமிக்கப்பட்டதாகவும் பெருமைப்பட்டுக் கொண்டதை அவருடைய முகத்தில் காணக்கூடியதாக இருந்தது.
இவர் ஓட்டமாவடியில் குர் ஆன் மத்ர்ஸாவை ஆரம்பித்த காலப்பகுதியிலேயே அதாவது 1972ம் ஆண்டு இவருக்கு முன்னால் கல்வி அமைச்சர் மர்ஹூம் பத்ருத்தீன் மஹ்மூட் அவர்களினால் 72 பேருக்கு வழங்கப்பட்ட ஆசிரியர் நியமனத்தில் அஸ்ஸஹீத் புஹாரி விதானையாரின் முயற்சியினால் இவருக்கு மட்டும் இப்பிரதேசத்தில் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டதாக இருவரையும் பெருமையுடனும், நன்றிக்கடன் உடையவராகவும் நினைவு கூர்ந்தார். அதன்னடிபடையில் அப்போதைய ஒட்டமாவடி கலவன் பாடசாலையில் AMA.காதரினதும், ஜனாபா நபீசா காதரினதும் தலைமைத்துவத்தின் கீழ் 15 வருடங்கள் ஆசிரியகாக கடமையாற்றியதாகவும், பின்னர் ஓட்டமாவடி ஹிஜ்றா வித்தியாலயத்தில் ஆரம்ப பிரிவு ஆசிரியராக 10வருடங்கள் கடமையாற்றி 1996ம் ஆண்டு ஆசிரியர் தொழிலுக்கு விடை கொடுத்தார்.
நான் முதலாம் ஆண்டில் ஓட்டமாவடி கலவன் பாடசாலையில் 1986ம் ஆண்டு முதலாம் வகுப்பில் சேரும் போது எனக்கு வகுப்பாசிரியையாக இருந்த ஜனாபா லைலா மிராசாஹிப்யிடம் இருக்கும் பிரம்பின் மீது ஏற்படுகின்ற பயத்தினால் இவர் வகுப்பாசிரியராக இருக்கும் இரண்டாம் ஆண்டு வகுப்பில் இவருடைய புன்னகை களந்த முகத்தினால் கவரப்பட்டு அங்கேயே உட்கார்ந்து கொள்வேன். அந்த வகுப்பில் எனது நண்பனும், தற்போது ஓட்டமாவடி பிரதேச சபையில் உறுப்பினராக இருக்கும் முஹாஜீரின் ஆசிரியாரும் துணைக்கு இருந்த்தனை எனக்கு இன்றும் அழிக்கமுடியாத ஞாபகமாக இருப்பதானது பெருமையாக இருக்கின்றது.
இது சம்பந்தமாக ஏன் உங்களை பாலர் வகுப்பு மாணவ பிஞ்சுகள் அதிகம் விரும்புகின்றார்கள் எனக்கேட்டதற்கு நான் றசூல் (ஸல்) அவர்கள் எமக்கு காட்டித்தந்த பெரியோருக்கு மரியாதை செலுத்தாதவனும் சிறியோருக்கு அன்பு செலுத்தாதவனும் என்னைச் சார்ந்தவன் அல்ல என்ற ஹதீஸை முழுமையாக பின்பற்றுவதனாலேயே என்னை சிறியோர்கள் அதிகம் விரும்புகின்றார்கள் என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.
இவ்வாறு சமூகத்தினரினதும், மாணவர்களினதும் உள்ளங்களின் அன்பின் பாத்திரமாக விளங்கிய ஹாயாத் ஆலிம் அவர்கள் 1980 ஆண்டு ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுரவு சங்கத்து அருகாமையில் உள்ள சங்கத்து பள்ளிவாயல் எனப்படும் மஸ்ஜிதுல் அப்றார் பள்ளிவாயலை சிறிய ஓலை குடிசையினையும், ஒரு மேசை விளக்கினையும், இரண்டு பாய்களையும் கொண்டு ஆரம்பித்து அதன் பேசி இமாமாக 20 வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.
அது மட்டுமல்லாமல் எந்த வெளிநாட்டு, நிறுவனங்களின் உதவிகள் இன்றியும், தன்னால் அதிகம் நடக்க முடியாது என்பதனால் வீதியில் வருவோர், போவோரின் வாகனங்களை நிறுத்தி ஏறியவராக இந்த அல்லாஹ்வின் மாளிகையை கட்டிமுடிக்க வேண்டும் என்பதற்காக பிரதேச மக்களின் காலடியில் சென்று பணம் வசூலித்து அதற்கு மூன்று மாடிக்கான அத்திவாரம் இட்டும் முதலாவது பகுதியை முழுமையாக பிரதேச மக்களின் உதவியால் கட்டி முடித்துள்ளமையானது இவருடைய துனிச்சலையும், இஸ்லாத்தில் இவர் கொண்டுள்ள இஹ்லாசான பற்றுதலையுமே எடுத்துக்காட்டுகின்றது.
இந்த மஸ்ஜிதுல் அப்றார் எனும் அல்லாஹ்வின் மாளிகைக்கு இது வரைக்கும் 50 இலட்ச்சம் ரூபாய்கள் செலவு செய்திருப்பதாகவும், இதற்கு முக்கியமாக ஓட்டமாவடி ஸானாஸ் ஹாட்வெயார் உரிமையாளர் முஹைதீன் ஹாஜியார் 313000 ருபாய்களும் ,தம்றோ உரிமையளர் 1000000 ரூபாய்கள், முபீன் ஹாஜியார் 1000000 ரூபாய்கள் பணமாகவும் பொருளாகவும் உதவி செய்ததை மிக முக்கியமாக குறிப்பிட்ட ஹயாத் அலிம் அவர்கள், சகல மக்களும் ஏதோ ஒரு வகையில் உதவியதாகவும் குறிப்பிட்டார். அன்று பத்து பேர் கூட தொழ முடியாத இந்த மஸ்ஜித்தில் இன்று 300 பேருக்கு மேற்பட்டவர்கள் அல்லாஹ்வை சுஜூது செய்யக்கூடியதாக இருப்பதை இட்டும் ,மக்கள் அதிகளவில் இம்மஸ்ஜிதில் தொழுகைக்காக வருவதையிட்டும் ஆனந்த கண்ணீர் வடித்ததை கண்டு நான் அவருடைய மாணவன் என்ற வகையில் பெருமை அடைந்தேன்.
இவ்வாறு நிகழ்கால சமூகத்தில் இருக்கின்ற அனேகமானவருக்கு ஒரு ஆசானாகவும், குர் ஆன் போதகராகவும், சமூகப்பனியாளராகவும், முகியமாக கருணையுள்ளம் கொண்டவராகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இவரை அன்மையில் ஓட்டமாவடியின் வரலாற்றில் முதன்முதலாக 91/94 ஆண்டுக்குறிய உயர்தரவகுப்பு மாணவர்கள் நடாத்திய கற்பித்த ஆசிரியர்களை கெளரவிக்கும் விழாவில் தன்னையும் அழைத்து கெளரவப்படுத்தி நினைவுச்சின்னம் வழங்கியதை பெருமையாக ஞாபகப்படுத்திய இவர், முதியோர்களை அதிகம் கண்ணியப்படுத்த வேண்டும் என்பதையும் நினைவு கூற மறக்கவில்லை.
இந்த அடிப்படையில் பல நற்குனங்களை தன் வசம் வைத்துள்ள எமது பிரதேசத்தின் பொக்கிசமான ஹாயாத் ஆலிம் அவர்களை எமது பிரதேச மக்கள் முதியோர் என்ற சான்றுதல் வழங்கி சமூகத்தில் அனாதையாக்குவது மனவேதனைக்குறிய விடயமாகவே காணப்படுகின்றது.. ஆகவே எமது பிரதேச அரசியல் பிரமுகர்கள், சமூக நிறுவனங்கள், படித்தவர்கள், இவருடைய பழைய மாணவர்கள் என அனைவரும் இவருடைய நன்மை, தீமைகளில் கலந்து கொள்ளாவிடினும், வாழ்க்கையில் ஒரு தடவையாவது இவர் வசிக்கின்ற வீட்டுக்கு சென்று இவருடைய சுகத்தினை விசாரித்து வருவதானது இவரிடம் கல்வி கற்ற அனைவர்களினதும் தார்மீக பொறுப்பாகும் எனபது இவருடைய மாணவன் என்ற வகையில் எனுடைய தனிப்பட்ட கருத்தாகும்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment