கல்முனை கரையோர மாவட்டம் தொடர்பில் அமைச்சர்; ஜோன் செனவிரத்ன பாராளுமன்றத்தில் பேசிய கருத்துக்களை விரகேசரிப் பத்திரிகை முழுமையாக திரிவுபடுத்தி வெளியிட்டுள்ளது கண்டிக்கத்தக்க செயற்பாடாகும் என்று அம்பாரை மாவட்ட முஸ்லிம் இளைஞர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரினால் கையொப்பமிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் குழுநிலை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் பேசிய கல்முனை கரையோர மாவட்டம் சம்பந்தமான விடயத்திற்கு அமைச்சர் ஜோன் செனவிரத்ன பதிலலித்து உரையாற்றினார்.
அந்த உரையில் அம்பாரை மாவட்டத்தில் தமிழ்,முஸ்லிம்கள் மொழி ரீதியில் பல்வேறு சிக்கல்களை அனுபவிப்பதை நானும் அரசாங்கமும் ஏற்றுக்கொள்வதாகவம், முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கையை இனவாதமாக எவரும் பார்க்கக் கூடாது என்பதுடன் இது விடயத்தில் ஒரு பொறிமுறையை அமைப்பது தொடர்பில் உங்களது தரப்போடு பேசுவதற்கு அரச தரப்பு விரும்பியுள்ளதாகவும் கூறினார்.
அமைச்சர் ஜோன் செனவிரத்னவின் இந்த உரை சகல இணையத்தளங்களிலும் வெளிவந்துள்ள நிலையில் வீரகேசரிப் பத்திரிகையிலும், தினக்குரல் பத்திரிகையிலும் உண்மைக்கு மாற்றமாக இச்செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
யாரோ தயாரித்த நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக அமைச்சரின் செய்தி திரிவுபடுத்தப்பட்டு வீரகேசரி பத்திரிகையும்,தினக்குரல் பத்திரிகையும் பிரசுரித்துள்ளது. இதன் மூலம் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதையாகத்தான் உள்ளது.
அம்பாரை மாவட்டத்தில் கரையோர மாவட்டம் ஒன்று உருவாகக்கூடாது என்பதுடன் இந்த சாதகமான சூழ்நிலை ஏற்பட்டால் முஸ்லிம் செல்வாக்கு எழுந்து விடும் என்பதனால் இந்த செய்தி இவ்வாறு பிரசுரிக்கப்பட்டுள்ளது.
வீரகேசரிப் பத்திரிகையும், அதன் நிர்வாகத்தின் கீழ் செயற்படும் தினக்குரல் பத்திரிகையும் இன்று மாத்திரமல்ல கடந்த காலங்களிலும் முஸ்லிம் விரோதப் போக்கில் செயற்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் பேசிய விடயங்களையே இவ்வாறு திரிவுபடுத்தி உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டுள்ளதன் மூலம் வீரகேசரி நிறுவனம் தனது நடுநிலைத்தன்மைக்கு அவர்களாகவே மாசு கற்பித்துள்ளனர்.
உரிமைகள் பெறவேண்டி போராடுகின்ற ஒரு சிறுபான்மை இனம் மற்றொரு இனத்தின் குரலையும், உரிமையையும் தட்டிப்பறிக்க முனைவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். இன்று முஸ்லிம் மக்கள் மீது தமிழ் மக்கள் இனவாதக்கண்கொண்டு பார்ப்பதற்கு இவ்வாறான திரிவுபடுத்தப்பட்ட செய்திகளும் காரணமாக அமைகின்றன.
இன ஐக்கியத்திற்கு ஊடகங்கள் பங்களிப்புச் செய்ய வேண்டும். ஆனால் அதே ஊடகங்கள் தங்களது நிகழ்ச்சி நிரலால் இன ஐக்கியத்தை இனவிரிசலாக மாற்றுகின்ற செயற்பாட்டில் இறங்கியுள்ளன. இன்று வீரகேசரிப் பத்திரிகையும்,தினக்குரல் பத்திரிகையும் அதனைத்தான் செய்வது கவலைக்குரியதாகும்.
மொழி ரீதியில் அம்பாரை மாவட்ட தமிழ்,முஸ்லிம்கள் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருகின்றனர். தங்களது நிர்வாக ரீதியான கருமங்களை செய்ய முடியாமல் அங்கும்,இங்கும் அலைந்து திரிகின்றனர். இந்த காரணங்களைக் கொண்டுதான் முஸ்லிம் காங்கிரஸ் கரையோர மாவட்டத்தைக் கோரி நிற்கின்றது.
1978ம் ஆண்டு மொரகொட ஆணைக்குழுவினால் பரிந்துரை செய்யப்பட்டதுதான் கல்முனை கரையோர மாவட்டமாகும். சிலரின் இனவாதப் போக்கினால்தான் அன்று அதனை செயற்படுத்த முடியாமல் போனது. இன்று மக்கள் மனநிலையில் ஐக்கியப்பட்டிருந்தாலும் வீரகேசரி போன்ற பத்திரிகைகளின் போக்கு கரையோர மாவட்டத்தை ஏற்படுத்த முடியாமல் போகும் என்ற மனநிலையை உண்டாக்கியுள்ளதாக கல்விமான்கள் குறிப்பிடுகின்றனர்.
புத்திரிகை தர்மத்தை பேணி வீரகேசரி செயற்பட வேண்டும், ஒரு இனத்திற்காகவும், சிலரின் நிகழ்ச்சி நிரலுக்காகவும் பத்திரிகையை நடத்த முற்படக்கூடாது. கரையோர மாவட்ட விடயத்தில் வீரசேகரிப் பத்திரிகையும், தினக்குரல் பத்திரிகையும் இனவாதப் போக்கைக் கைவிட்டு நடுநிலைத்தன்மையுடன் செயற்பட முன்வரவேண்டும்.
வீரகேசரி தமிழ் பேசும் மக்களுக்கான பத்திரிகை என்பதை நினைவில் கொண்டு செயற்படுமாயின் இன ஐக்கியத்திற்கு இதைவிட சிறந்த களம் வேறு எதுவமில்லை என்றுதான் கூறவேண்டும்.
உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டமைக்காக வீரகேசரி தனது பிழையை ஒத்துக்கொண்டு அமைச்சரின் முழுமையான பேச்சினை பிரசுரிக்குமாறும் கோருகின்றோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment