நடைபெறவிருக்கும் ஜனா திபதி தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கே என்ற தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும் அதனை முற்றாக மறுப்பதாகவும் தெரிவித்த காங்கிரஸின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசன்அலி, கல்முனை கரையோர மாவட்டம் எனும் விவகாரத்தில் முஸ்லிம் பிரதேசங்களின் பிரதேச சபைகளினது தீர்மானங்களையும் பிரேரணை நிறைவேற்றல்களையும் புறந்தள்ளிவிட்டு செயற்படமுடியாது என்றும் தேர்தலுக்கு முன்னர் மேற்படி விடயம் தொடர்பில் தீர்க்கமான முடிவொன்று கிடைக்கப்பெறவேண்டும் என்பதில் உறுதியான நிலைப்பாடு காணப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தலின் போது முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாடு எவ்வாறு அமையவேண்டும் என்பது குறித்து மாகாண , பிரதேச மற்றும் நகர சபைகளினது அனைத்து மு.கா. உறுப்பினர்களினதும் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர் ஆதரவு தொடர்பான தீர்மானத்தை கட்சியின் உயர் பீடமே மேற்கொள்ளும் என்றும் கூறினார்.
ஜனாதிபதி தேர்தலின் போது மு.காவின் ஆதரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கே என்ற ரீதியில் வௌியாகியுள்ள தகவல்கள் தொடரபில் விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஹஷன் அலி எம்.பி. மேலும் கூறுகையில்,
நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு யாருக்கு என்ற ரீதியில் ஊடகங்களிலும் இணைத்தளங்களிலும் பல்வேறு முரண்பட்ட தகவல்கள் வௌியாகிவருகின்றன. முஸ்லிம் காங்கிரஸினால் கூறப்படாத மற்றும் உறுதிப்படுத்தப்படாத பல தகவல்கள் மற்றும் வதந்திகள் வௌியாகிவருகின்றமை ஏற்றுக்கொள்ளமுடியாததாக இருக்கின்றது.
ஜனாதிபதி தேர்தலின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு யாருக்கானதாக அமையவேண்டும் என்பது தொடர்பில் தற்போது கட்சியின் மாகாண பிரதேச மற்றும் நகர சபை உறுப்பினர்களை அழைத்து அவர்களிடமிருந்து கருத்துக்களையும் அவர்களது நிலைப்பாடுகளையும் மு.காவின் அரசியல் பீடம் திரட்டிவருகின்றது.
மேலும் கல்முனை கரையோர மாவட்டம் என்ற தனி அலகு தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்திற்கு வௌியிலும் வௌிப்படுத்தி வருகின்றது. அதுமட்டுமன்றி பொத்துவில் அட்டாளைச்சேனை, இறக்காமம், கல்முனை மற்றும் நிந்தவுர் உள்ளிட்ட பிரதேச சபைகளில் கூட கரையோர மாவட்டம் தொடர்பான பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில் மேற்படி நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணைகள் ஊடாகன வற்புறத்தல்கள் மற்றும் நிலைப்பாடுகள் என்பவற்றை முஸ்லிம் காங்கிரஸினால் புறந்தள்ளிவிடமுடியாது என்பதை தௌிவாக கூறவேண்டும்.
கரையோர மாவட்டம் என்ற விவகாரம் தொடர்பான நிலைப்பாட்டை எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை. இந்த வகையிலேயே தற்போதும் மிக தீவிரமான கலந்துரையாடல்கள் மற்றும் நிலைப்பாடு அறிதல்கள் என்பன இடம்பெற்று வருகின்றன.
ஆனால் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு யாருக்கு என்பது தொடர்பில் இதுவரையிலும் எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லை என்பதையும் கூறிவைக்கின்றோம். ஆதெபோன்று எத்தகைய தீரமானமொன்று எடுக்கப்படவேண்டுமென்றாலும் அதனை கட்சியின் உயர்பீடமே உறுதிசெய்யும்.
கட்சியில் இருக்கும் உறுப்பினர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் கட்சி என்றரீதியில் சகலரும் கட்சிக்கு கட்டுப்பட்டவர்களே. ஆதலால் கட்சி எடுக்கும் தீரமானத்தை சகலரும் அங்கீகரிக்க கடமைபட்டுள்ளோம். இதில் எந்தவித மாற்றுக்கருத்துக்களும் இருக்கமுடியாது. ஏமது தீர்மானத்தை உயர்பீடமே இறுதிசெய்யும் என்றார்.

0 comments :
Post a Comment